Published : 19 Mar 2017 11:52 AM
Last Updated : 19 Mar 2017 11:52 AM

உலக மசாலா: ஒரு மனிதனை மனிதனாக உணரச் செய்த ஒப்பனை!

ஸ்பெயினைச் சேர்ந்த 55 வயது ஜோஸ் அன்டோனியோ, கடந்த 25 ஆண்டுகளாக வீடின்றி, வீதியில் வாழ்ந்துவருகிறார். அழுக்கான உடையும் நீண்ட தாடியுமாக, கார்களைத் துடைக்கும் பணியைச் செய்து வருகிறார். இவரை இதுவரை யாரும் நிமிர்ந்து கூடப் பார்த்ததில்லை. மஜோர்கா நகரில் சலூன் கடை வைத்திருக்கும் ஒருவர் ஜோஸ் அன்டோனியாவைப் பார்த்தார். யாரும் நிமிர்ந்து பார்க்காத இந்த மனிதரை எல்லோரும் ஆச்சரியமாகப் பார்க்க வைக்க வேண்டும் என்று முடிவுசெய்தார். அவரது சலூனின் மூன்றா வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஜோஸ் அன்டோனியோவின் உருவத்தை மாற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். உள்ளூர் தொலைக்காட்சி இதை நேரடியாகப் படம் பிடிக்க முன்வந்தது. ஜோஸ் அன்டோனியோவைக் குளிக்க வைத்து, தலை முடியை ஸ்டைலாக வெட்டினர். தாடியை அளவாக நறுக்கினர். டை அடித்தனர். முகத்துக்கு ஒப்பனை செய்தனர். நவீன உடைகளை அணிவித்து, குளிர் கண்ணாடியை மாட்டிவிட்டனர். பிறகு கண்ணாடி முன் நிறுத்தினர். ஜோஸ் அன்டோனியோ தன் உருவத்தைக் கண்டு வாயடைத்துப் போனார். வழக்கம் போல் தான் அமரும் இடத்தில் அமர்ந்தார். யாரோ ஒரு புது மனிதர் ஸ்மார்ட்டாகவும் ஸ்டைலாகவும் அமர்ந்திருக்கிறார் என்று மக்கள் ஆச்சரியப்பட்டனர். பெண்கள் நளினமாகப் புன்னகை செய்தனர். ஒரு சிலர் ஆர்வத்துடன் பேசினர். “25 வருடங்களாக இந்த இடத்தில்தான் அமர்ந்திருக்கேன். ஒருவர் கூட நிமிர்ந்து பார்த்ததில்லை. ஆனால் பெண்கள் கூட புன்னகை செய் கிறார்கள்! முதல் முறை நானும் மனிதன் என்ற உணர்வைப் பெற்றேன். மகிழ்ச்சிக்கு அளவே இல்லை” என்கிறார் ஜோஸ் அன்டோனியோ.

ஒரு மனிதனை மனிதனாக உணரச் செய்த ஒப்பனை!

பிரிட்டனைச் சேர்ந்த 80 வயது அல்மா வில்லியம்ஸ், இரண்டாம் உலகப் போரில் இறந்து போன தன்னுடைய அண்ணன் ரொனால்ட் ப்ளாக்ஹாமைக் கடந்த 71 ஆண்டுகளாகத் தேடிவந்தார். கடினமான தொடர் முயற்சிகளுக்குப் பிறகு 2014-ம் ஆண்டு இவரது அண்ணனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. தன் அண்ணன் என்பதற்கு ஆதாரம் வேண்டும் என்றார் அல்மா. டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, ரொனால்ட் என்பது உறுதிசெய்யப்பட்டது. பிரிட்டனிலிருந்து அல்மாவின் குடும்பத்தைச் சேர்ந்த 19 பேர் இத்தாலிக்கு வந்தனர். அவரது உடலைப் பெற்றுக்கொண்டனர். பிறகு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு, ராணுவ மரியாதையோடு வீரர்களின் கல்லறையில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. “நான்கு தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் ஒன்று சேர்ந்து இறுதி அஞ்சலி செலுத்தியது எனக்கு நிறைவைத் தருகிறது. என் அண்ணன் கால்பந்து வீரர். மிகவும் ஆர்வத்தோடு ராணுவத்தில் சேர்ந்தார். எனக்கு 6 வயதானபோது அண்ணன் போருக்குச் சென்றுவிட்டார். அண்ணன் எப்போது வருவார் என்று அம்மாவைக் கேட்டுக் கொண்டிருப்பேன். வாசலில் உள்ள மரத்தில் பூக்கள் பூக்கும்போது அண்ணன் திரும்பி வந்துவிடுவான் என்பார் அம்மா. பல ஆண்டுகள் அந்த மரம் பூத்தும் அண்ணன் மட்டும் வரவேயில்லை. நாஜிக்களால் அவர் கொல்லப்பட்ட தகவல் வந்தது. அண்ணன் எங்காவது உயிரோடு இருப்பார் என்று நம்பிக்கொண்டிருந்தேன். அண்ணனைத் தேட ஆரம்பித்தேன். 75 ஆண்டுகள் ஓடிவிட்டன. இப்போதுதான் உரிய மரியாதை செலுத்தி அடக்கம் செய்திருக்கிறோம். என் அண்ணன் ஆன்மா மகிழ்ச்சியடையட்டும்” என்கிறார் அல்மா வில்சன்.

75 ஆண்டுகளாகத் தேடிக் கண்டுபிடித்து அண்ணனை அடக்கம் செய்த தங்கை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x