Published : 10 Jun 2017 10:31 AM
Last Updated : 10 Jun 2017 10:31 AM

உலக மசாலா: ஒரு தொழிலதிபர் பன்றி வளர்த்த கதை!

உலகிலேயே விலையுயர்ந்த பன்றித் தொடையை விற்பனை செய்துவருகிறார் ஸ்பெயினைச் சேர்ந்த எட்வார்டோ டோனட்டோ. பாரம்பரிய முறைப்படி வளர்க்கப்படும் இந்தப் பன்றி இறைச்சியில் சுவையும் சத்துகளும் அதிகம். ஒரு பன்றித் தொடை 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1989-ம் ஆண்டு வரை கட்டிடத் தொழிலில் பெரும் பணக்காரராகத் திகழ்ந்தார். திடீரென்று அவரது நண்பர்கள் இருவர் புற்றுநோயிலும் மாரடைப்பிலும் இறந்து போனார்கள். இவரது மனமும் மாறியது. “எப்போதும் பரபரப்பாக நகரில் தொழில் செய்யும்போது உடல்நிலை பாதிக்கப்படுகிறது. வாழ்வதற்காகத்தான் தொழில் செய்கிறோம். ஆனால் தொழிலிலேயே வாழ்க்கையைத் தொலைத்து விடுகிறோம். போதும் இந்த ஆரோக்கியமற்ற வாழ்க்கை என்று முடிவு செய்தேன். எல்லாவற்றையும் விற்றுவிட்டு, ஹுயல்வா கிராமத்துக்கு வந்து சேர்ந்தேன். மலை, காடுகள், மழை, உயிரினங்கள் என்று ரம்மியமாக இருந்தது. 5 ஆண்டுகளை இயற்கையைக் கற்பதிலும் ரசிப்பதிலும் செலவிட்டேன். பிறகு நான் சாப்பிடுவதற்காகப் பன்றி வளர்க்க ஆரம்பித்தேன். 2005-ம் ஆண்டு புது வகை பன்றியை வளர்க்கச் சொல்லிக் கேட்டுக்கொண்டது அரசாங்கம். மிக மெதுவாக வளரும், கறியும் குறைவாகக் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் யாரும் அதை வளர்க்க விரும்பவில்லை. நான் வளர்த்தேன். என்னுடைய பன்றி களும் அந்தப் பன்றிகளும் சேர்ந்து இன்னொரு புது வகை பன்றி களாக உருவாகின. அப்போது பணம் சம்பாதிக்கும் எண்ணமில்லை. ஆனால் இன்று உலகிலேயே அதிக விலைமதிப்புமிக்க பன்றிக் கறியை விற்பவனாக மாறிவிட்டேன். ஆண்டுக்கு 80 பன்றித் தொடை களை மட்டுமே விற்பனை செய்கிறேன். பன்றிகள் தினமும் 14 கி.மீ. தூரம் நடந்து சென்று இரை தேடுகின்றன. தூய்மையான காற்றை சுவாசிக்கின்றன. அருவி நீரைப் பருகுகின்றன. சாதாரண பன்றிகள் 18 மாதங்களில் முழு வளர்ச்சியடைந்துவிடுகின்றன. என் பன்றிகள் 3 ஆண்டுகளில் முதிர்ச்சியடைகின்றன. பத்து வயதை அடைந்த பிறகே இறைச்சிக்குப் பயன்படுத்துகிறேன். உலகிலேயே சுவையான பன்றி இறைச்சி என்று மிகச் சிறந்த சுவைஞர்கள் 10 பேர் சான்றளித் துள்ளார்கள். உணவுக் கண்காட்சியில் 130 நாடுகளைச் சேர்ந்த 2.300 பொருட்களில் மிகச் சிறந்த சுவை கொண்ட பன்றி என்று 45 ஆயிரம் பேர் தேர்வு செய்திருக்கிறார்கள். ‘உலகின் விலையுயர்ந்த பன்றித் தொடை’ என்று கின்னஸ் சான்றிதழ் வழங்கியது. அதை நான் விரும்பவில்லை. ‘உலகின் மதிப்புமிக்க பன்றித் தொடை’ என்று வழங்குமாறு கேட்டுக்கொண்டேன்’’ என்கிறார் எட்வார்டோ.

ஒரு தொழிலதிபர் பன்றி வளர்த்த கதை!

தென்கொரியாவின் புஸன் நகரில் ஒரு பெண்ணிடம் வளர்ந்துவந்தது ஃபு ஷிய் என்ற நாய். திடீரென்று உடல் நிலை பாதிக்கப்பட்டார் அந்த பெண். ஒரு செவிலியர் அவரைக் கவனித்துக்கொண்டார். ஒருநாள் நிலைமை மோசமாக, பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதற்குப் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. மூன்று ஆண்டுகளான பிறகும் அவர் வளர்த்த நாய், அவரை எதிர்பார்த்து காத்திருக்கிறது. அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் உணவளிக்கிறார்கள்.

வளர்த்த பாசம் விடாது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x