Published : 18 Mar 2015 11:00 AM
Last Updated : 18 Mar 2015 11:00 AM

உலக மசாலா: ஒரு கனவு இல்லம்- நாய்களுக்கு!

சாம்சங் நிறுவனம் நாய்களுக்கான ஒரு கனவு இல்லத்தை உருவாக்கியிருக்கிறது. இந்த நாய் இல்லம் நாய்களுக்கும் அவற்றின் உரிமையாளர்களுக்கும் விருந்தாக இருக்கும் என்கிறது. இந்த வீட்டுக்குள் பட்டனை அழுத்தினால் பாத்திரத்தில் உணவு வந்து விழுகிறது.

வீட்டின் சுவரில் டிவி அமைக்கப்பட்டிருக்கிறது. வீட்டுக்கு வெளியே ட்ரெட்மில் அமைக்கப்பட்டிருக்கிறது. உடற்பயிற்சி செய்துவிட்டு, குளிப்பதற்காகச் சிறிய நீச்சல் குளமும் இருக்கிறது. வேலைகளை முடித்துவிட்டு மென்மையான தலையணைகள் மீது படுத்து ஓய்வெடுக்கலாம். பொழுது போகவில்லை என்றால் டேப் எடுத்து விளையாடலாம்.

1,500 நாய் உரிமையாளர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தியதில் 25 சதவீதம் பேர் ட்ரெட்மில், டேப்லெட், டிவி வேண்டும் என்றார்கள். 18 சதவீதம் பேர் நீச்சல் குளம் வேண்டும் என்றும் 64 சதவீதம் பேர் தங்கள் நாய் தொழில்நுட்பங்கள் அனைத்தையும் பயன்படுத்த வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருந்தனர். 6 வாரங்களில் 12 நிபுணர்கள் சேர்ந்து நாய்க்கான கனவு இல்லத்தை உருவாக்கியிருக்கிறார்கள். ஒரு வீட்டின் விலை சுமார் 19 லட்சம் ரூபாய். பிரிட்டனில் விற்பனைக்கு வந்திருக்கிறது.

நீங்க எல்லாம் மனுசங்க வாழறதுக்கு குறைந்த செலவில் வீடுகளை உருவாக்க மாட்டீங்களா?

தைவானில் வசிக்கிறார் 25 வயது சென் ஹாங்ஸி. அவருக்கு விநோதமான நோய். எந்த விஷயத்தையும் 5 நிமிடங்களுக்கு மேல் அவரால் நினைவில் வைத்துக்கொள்ள இயலாது. தினமும் போராட்டமான வாழ்க்கை. ஒவ்வொரு விஷயத்தையும் மறக்காமல் இருப்பதற்காக ஒரு நோட்டில் எழுதி வைத்துக்கொண்டே இருக்கிறார். ஹாங்ஸிக்கு 17 வயதில் ஒரு விபத்து ஏற்பட்டது.

பல மாதங்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். மெதுவாக அவரது உடல் தேறியது. ஆனால் அவரது நினைவுத்திறன் மிக மோசமாகக் குறைந்துவிட்டது. அதிகபட்சம் 10 நிமிடங்களுக்கு மேல் நினைவுத்திறன் நீடிப்பதில்லை. ஹாங்ஸியால் எந்த வேலைக்கும் செல்ல இயலாது. அவரது அப்பா இறந்துவிட்டார். 60 வயது அம்மாதான் காப்பாற்றி வருகிறார்.

மருந்து, சாப்பாடு என்று நிறைய செலவாகிறது. ஹாங்ஸியின் நண்பர்கள், உறவினர்கள் நன்கொடை அளிக்கிறார்கள். அவற்றோடு பல மைல் தூரம் நடந்து சென்று பிளாஸ்டிக் பாட்டில்களைச் சேகரிக்கிறார் ஹாங்ஸி. அவற்றை விற்று கொஞ்சம் வருமானத்தைப் பெற்றுக்கொள்கிறார். தனக்குப் பிறகு ஹாங்ஸியை யார் பார்த்துக்கொள்வார்கள் என்று கவலையோடு கேட்கிறார் அவரது அம்மா.

நிஜ கஜினி…

சீனாவில் சமீபத்தில் எடுக்கப்பட்ட சர்வேயில் ஆண்களுக்கு வழுக்கை விழுவது அதிகரித்து வருவது கண்டறியப்பட்டிருக்கிறது. சுமார் 20 கோடி சீன ஆண்களுக்கு வழுக்கை விழுந்திருக்கிறது. பெய்ஜிங்கில் வசிப்பவர்களுக்கு தலையில் நான்கில் ஒரு பகுதி வழுக்கையாகவும் ஷாங்காயில் வசிப்பவர்களுக்குத் தலையில் மூன்றில் ஒரு பகுதி வழுக்கையாகவும் மாறியிருக்கிறது என்கிறார்கள்.

என்னென்னமோ கண்டுபிடிக்கும் சீனர்கள், இந்தப் பிரச்சினைக்கும் ஏதாவது செய்வாங்க…

பிரிட்டனில் வசிக்கிறாள் ஒலிவியா க்ரேஸ். பிறந்த 10 நாட்களில் ஒலிவியாவுக்கு வயிறு வீங்கியது. மருத்துவர்கள் பல்வேறு சோதனைகளைச் செய்தனர். நான்கு மாதங்களுக்குப் பிறகு கர்ப்பப்பையில் 10 செ.மீ. நீளத்துக்கு புற்றுநோய் இருந்தது கண்டறியப்பட்டது. 3 மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சைக்குப் பிறகு, 3 வாரங்கள் கீமோதெரபி அளிக்கப்பட்டது.

மீண்டும் மருத்துவப் பரிசோதனை செய்து பார்த்ததில் புற்றுநோய் அறவே நீக்கப்பட்டிருந்தது. ஒலிவியா தன்னுடைய முதல் பிறந்தநாளை சமீபத்தில் மகிழ்ச்சியுடன் கொண்டாடினாள். இதுவரை 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே கர்ப்பப்பை புற்றுநோய் வரும் என்று எண்ணிக்கொண்டிருந்த மருத்துவர்களுக்கு ஒலிவியாவின் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

எந்த வயதில் வந்தால் என்ன, புற்றுநோயை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு, மீள முடியும் என்பதற்கு ஒலிவியாவே சாட்சி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x