Published : 21 Nov 2015 10:06 AM
Last Updated : 21 Nov 2015 10:06 AM

உலக மசாலா: ஒரிகாமி பாலம்!

சீனாவின் சுஸொவ் பகுதி கிழக்கின் வெனிஸ் என்று அழைக்கப்படுகிறது. இங்கே 3 நாட்களில் காகிதங்கள் மூலம் ஒரு பாலம் உருவாக்கப்பட்டது. 54,390 காகிதங்களை வைத்து, 2,374 கிலோ எடைகொண்ட பாலத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இந்தக் காகிதங்கள் இரு பக்கங்களிலும் உள்ள தூண்களின் உதவியோடு நிற்கின்றன. ரேஞ் ரோவர் கார்களின் 45-வது ஆண்டு கொண்டாட்டத்துக்காக இந்தக் காகிதப் பாலம் உருவாக்கப்பட்டது. காகிதங்கள் பசையாலோ, போல்ட்களாலோ இணைக்கப்படவில்லை. நெருக்கமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. 5 மீட்டர் நீளமுடைய இந்தக் காகிதப் பாலத்தின் மீது ரேஞ் ரோவர் கார் ஏறிச் சென்றது. இந்தக் காகிதங்கள் அனைத்தும் மறுசுழற்சி முறையில் உருவாக்கப்பட்டவை.

அட, ஒரிகாமி பாலம்!

ஜப்பானைச் சேர்ந்த மன்சன், செல்ஃபி எடுப்பதற்குப் புதிய வழியை உருவாக்கியிருக்கிறார். செல்ஃபி குச்சிகளைச் சற்று மாற்றி, நீண்ட செயற்கைக் கைகளாக உருவாக்கியிருக்கிறார். ‘செல்ஃபி கைகள்’ என்று பெயரும் வைத்திருக்கிறார். ‘‘பொதுவெளியில் செல்ஃபி குச்சிகளைப் பயன்படுத்துவதற்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அதனால் குச்சிகளை நீண்ட கைகளாகச் செய்தேன். அவற்றை என் கைகளில் பொருத்திக்கொண்டேன். இந்தச் செயற்கைக் கைகளின் நீளத்தை மறைப்பதற்கு நீண்ட கை வைத்த சட்டையைத் தைத்துக்கொண்டேன். செல்ஃபி குச்சிகளை விட இது மிக வசதியாக இருக்கிறது. செல்ஃபி குச்சியைப் போலத் தனியாகத் தூக்கிச் செல்ல வேண்டிய தொல்லை இல்லை. இதை நான் அதிக அளவில் உருவாக்க எண்ணவில்லை. யாராவது விரும்பி வேண்டும் என்று சொன்னார்கள் என்றால் அவர்களுக்கு மட்டும் உருவாக்கித் தர திட்டமிட்டிருக்கிறேன்’’ என்கிறார் மன்சன்.

இப்படியெல்லாம் செல்ஃபி எடுக்கலைன்னு யாருங்க வருத்தப்பட்டுட்டு இருக்காங்க?

ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் மர்மப் பள்ளங்கள் அதிகரித்து வருகின்றன. 2013-ம் ஆண்டு ஹெலிகாப்டரில் பயணித்த பைலட்டுகள் யாமல் பகுதியில் மர்மப் பள்ளங்களைக் கண்டுபிடித்தனர். சில நாட்களில் மேலும் சில பள்ளங்கள் தென்பட்டன. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ராட்சச பள்ளம் ஒன்றும் அதைச் சுற்றிலும் ஏராளமான சிறிய பள்ளங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. சில பள்ளங்கள் ஏரிகளாக மாறிவிட்டன. இன்னும் 30 பள்ளங்களாவது இந்தப் பகுதியில் இருக்கும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் புவியியல் ஆராய்ச்சியாளர்கள். நிரந்தர பனிப்பிரதேசங்கள் பூமி வெப்பம் அடைவதால் உருகி வருகின்றன. அவற்றின் உள்ளே இருக்கும் மீத்தேன் வாயு வெடித்து வெளியே வரும்போது இதுபோன்ற பள்ளங்கள் ஏற்படுவதாகச் சில நிபுணர்கள் சொல்கிறார்கள். இதைச் சில விஞ்ஞானிகள் மறுக்கிறார்கள். நிரந்தர பனி இருக்கும் பகுதிகளில் 200 மீட்டர் ஆழத்தில் மீத்தேன் நிலைகொண்டிருப்பதில்லை. ஆர்டிக் மற்றும் ஆர்டிக் சார்ந்த இடங்களில் இருக்கும் பிங்கோ திட்டுகளையும் பள்ளங்களையும் உதாரணமாகச் சொல்கிறார்கள். பல்வேறு ஆய்வாளர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் இன்னும் இந்தப் பள்ளங்கள் ஏன் உருவாகின்றன என்பதற்குச் சரியான விளக்கம் கிடைக்கவில்லை. ஆனால் இவை மிக முக்கியமான பிரச்சினைகள். விரைவில் ஆராய்ந்து, உலகத்துக்கு ஏற்பட இருக்கும் இயற்கைப் பேரழிவில் இருந்து மனித குலத்தைக் காப்பாற்ற வேண்டும் என்கிறார் மாஸ்கோவின் ஆராய்ச்சியாளர் வசில் போகோயவ்லென்ஸ்கி.

இன்னும் விலகாத மர்மம்…

வீரியம் மிக்க புற்றுநோய் செல்களைக் கண்டுபிடிப்பதில் பறவைகளும் தேர்ச்சி பெற்றவையாக இருக்கின்றன. அதிலும் புறாக்கள் மார்பகப் புற்றுநோய்களை மிகச் சரியாகக் கண்டுபிடித்துச் சொல்லிவிடுகின்றன. மேமோகிராம், பயாப்ஸி முடிவு களை புறாக்களிடம் காட்டியபோது, அவை சரியாகக் கண்டுபிடித்திருக் கின்றன. விஞ்ஞானிகள் ஆச்சரியமடைந்து விட்டனர். 15 நாட்கள் புறாக்களை வைத்துப் பரிசோதித்தபோது, 85 சதவீதம் சரியாகப் புறாக்கள் கணித்திருப்பது தெரியவந்தது. ‘‘நல்ல உணவும் பயிற்சி யும் அளித்தால் புறாக்கள் மனிதர்களைப் போல வேலை செய்யக்கூடி யவை’’ என்கிறார் பேராசிரியர் லெவென்சன். 8 புறாக்களை வைத்து இந்தப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. புற்றுநோய் செல்களைப் பார்த்து, நீலம் மற்றும் மஞ்சள் பட்டன்களை அழுத்தி, தங்கள் கண்டு பிடிப்பைத் தெரிவித்தன புறாக்கள். ஒவ்வொரு பரிசோதனைக்குப் பிறகும் புறாக்களுக்கு நல்ல உணவு பரிசாகக் கொடுக்கப்பட்டன.

ஆச்சரியம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x