Published : 25 Apr 2017 10:29 AM
Last Updated : 25 Apr 2017 10:29 AM

உலக மசாலா: ஐயோ, நெஞ்சை உலுக்கிவிட்டது...

பாகிஸ்தானின் கஜ்ரன்வாலா மாவட்டத்தில் வசித்து வரும் 50 வயது மெஹ்மூத் பட், கடந்த 25 ஆண்டுகளாக இலைகளை மட்டுமே உணவாகச் சாப்பிட்டு வருகிறார். “அளவுக்கு அதிகமான வறுமை எங்கள் குடும்பத்தை வாட்டியது. சாப்பாடு கிடைப்பது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் பசியை அடக்க முடியாதே? சாலையில் பிச்சை எடுப்பதைவிட இலை தழைகளைச் சாப்பிட்டு விடலாம் என்று முடிவெடுத்தேன். அதுவே பிறகு பழக்கமாகிவிட்டது. பிற்காலத்தில் வேலையும் கிடைத்து, ஓரளவு வருமானமும் வந்தது. ஆனாலும் இலைகளைச் சாப்பிடுவதை என்னால் விட முடியவில்லை. ஒரு நாளைக்கு கழுதை வண்டி மூலம் 600 ரூபாய் வரை சம்பாதிக்கிறேன். இலை தழைகளைச் சாப்பிடுவதால் எனக்கு இதுவரை எந்த நோயும் வந்ததில்லை. ஆலமரக் குச்சிகளும் சிசே மரத்தின் இலைகளும் மிகவும் பிடிக்கும்” என்கிறார் மெஹ்மூத் பட். இலைகளைச் சாப்பிடுவதாலேயே இந்தப் பகுதியில் பிரபலமாக இருக்கிறார் இவர். “போகும் வழியில் பசுமையான இலைகளைப் பார்த்துவிட்டால், உடனே வண்டியை நிறுத்திவிட்டு, நேரம் காலம் பார்க்காமல் இலைகளைச் சாப்பிட ஆரம்பித்துவிடுவார். இவர் மருத்துவரிடம் சென்று நாங்கள் பார்த்ததில்லை” என்கிறார் பக்கத்து வீட்டுக்காரர் குலாம் முகமது.

ஐயோ, நெஞ்சை உலுக்கிவிட்டது…

இங்கிலாந்தைச் சேர்ந்த லாரன்ஸ் கோபால்ட் இருபதாயிரம் அலங்காரப் பொருட்களை வீட்டில் சேகரித்து வைத்திருக்கிறார். இந்த அலங்காரப் பொருட்கள் அனைத்தும் பறவைகள் தொடர்பானவை. பொம்மை, தட்டு, பேப்பர் வெயிட், விரல் ஆபரணம், கண்ணாடி, மேஜை விரிப்பு, தலையணை உறை, கரண்டி, அலங்கார விளக்கு, பறவைக் கூண்டு, கோப்பை, கிண்ணம், ஓவியங்கள் என்று எல்லாவற்றிலும் விதவிதமான பறவைகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் விரல்களில் மாட்டக்கூடிய ஆபரணங்கள் 14 ஆயிரமும் பேப்பர் வெயிட்கள் 2 ஆயிரமும் இருக்கின்றன. வீடு, சுவர்கள், கூரை, மாடிப்படிகள், 3 கார் நிறுத்தும் இடங்கள் போன்றவற்றில் அழகாக வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றின் மொத்த மதிப்பு 50 லட்சம் ரூபாய். “என் அப்பா கிளிகள், மஞ்சள் குருவிகள் போன்ற பறவைகளை வளர்த்துவந்தார். அவரிடமிருந்துதான் எனக்குப் பறவைகள் மீது ஆர்வம் வந்தது. பறவைகள் பற்றிய விஷயங்களைத் தேடித் தேடிப் படித்தேன். 30 ஆண்டுகளுக்கு முன்பு விளையாட்டாகச் சேகரிக்க ஆரம்பித்தேன். பிறகு ஆர்வம் அதிகமாகவே தீவிரமாக இறங்கிவிட்டேன். வீட்டில் இவற்றுக்கே இடம் போதவில்லை என்பதால் நான் அருகில் இருக்கும் பெற்றோர் வீட்டில்தான் தங்கியிருக்கிறேன். சுத்தம் செய்து பாதுகாப்பதுதான் மிக முக்கியமானது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் இங்கே வந்துவிடுவேன். இன்றும் கூட என்னால் பொருட்கள் வாங்குவதை விட முடியவில்லை. வீட்டிலுள்ளவர்கள் என் விருப்பத்தை மதிக்கிறார்கள் என்பதால் எனக்குப் பிரச்சினை எதுவும் வரவில்லை. 6 அடி உயரத்திலிருக்கும் கிளி வடிவ விளக்குதான் எனக்கு மிகவும் பிடித்தது. ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கினேன். எதற்காக இவ்வளவையும் சேமித்து வைத்திருக்கிறேன் என்ற கேள்விக்கு, பிடித்திருக்கிறது என்பதைத் தவிர என்னிடம் வேறு பதில் இல்லை” என்கிறார் லாரன்ஸ்.

வீட்டுக்குள் பறவைகள் அருங்காட்சியகம்!



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x