Published : 23 Jul 2016 10:05 AM
Last Updated : 23 Jul 2016 10:05 AM

உலக மசாலா: ஐபோன்களை சுத்தியலால் உடைக்கும் சீனர்கள்!

தென்சீனக் கடல் பிரச்சினையில் சீனாவுக்கு எதிராக, பிலிப்பைன்ஸுக்கு ஆதரவாக சர்வதேச தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. சீன மக்கள் தங்களின் ஆதரவை நாட்டுக்குத் தெரிவிக்க சில வழிகளைக் கையாண்டு வருகிறார்கள். அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களான ஆப்பிள், கேஎஃப்சி போன்றவற்றைப் புறக்கணித்து வருகிறார்கள். ஆப்பிள் ஐபோன்களை சுத்தியலால் உடைக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் சீனாவில் வேகமாகப் பரவி வருகின்றன.

“நீங்கள் தேசப்பற்று மிக்கவர்கள் என்றால் உடனே பொருட்களைப் புறக்கணியுங்கள். தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் நாடுகளின் பொருட்கள் வாங்குவதைத் தவிர்த்து விடுங்கள். அந்த நாடுகளுக்குப் பயணம் செல்லாதீர்கள். நீங்கள் ஐபோனை உடைக்கவில்லை என்றால் உண்மையான சீனர்களே இல்லை’’ என்றெல்லாம் இணையதளத்தில் செய்திகளைப் பரப்பி வருகிறார்கள்.

இவற்றை எல்லாம் பார்த்து உத்வேகம் கொண்ட சிலர், தங்கள் ஐபோன்களையும் உடைத்து, வீடியோ எடுத்து, இணையத்தில் வெளியிடுகின்றனர். அரசாங்கத்துக்குச் சொந்தமான செய்தி நிறுவனம், ‘மக்கள் தங்கள் சொந்தப் பொருட்களை தேசப்பற்று என்ற பெயரில் உடைப்பது பகுத்தறிவற்ற செயல்’ செய்தி வெளியிட்டிருக்கிறது. அதற்குப் பிறகு உடைக்கும் செயல் குறைந்து வருகிறது.

நாட்டாமை தீர்ப்பை மாத்து..!

அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத் தலைநகரில் கண்களுக்குப் புலப்படாத கொடை வள்ளல் ஒருவர் இருக்கிறார். ஏழை மக்களின் குறைகளைத் தீர்த்து வருகிறார். இதுவரை 34 லட்சம் ரூபாய் வரை ஏழை மக்களுக்கு உதவி செய்து இருக்கிறார். 2013-ம் ஆண்டு மே மாதம்தான் முதன் முதலில் ஏழைகளுக்கு ஒருவர் உதவி வருகிறார் என்ற விஷயம் வெளியில் தெரிய வந்தது. நகரின் பல்வேறு கடைகளில் இருந்தும் 100 டாலர்களுக்கு உரிய பொருட்கள் ஏழைகளின் வீடுகளுக்குத் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகின்றன.

உணவுப் பொருட்கள், துணிகள், குழந்தைகளுக்கான பால் பவுடர், நாப்கின், புத்தகங்கள், நோட்டுகள் என்று அவரவர் தேவையைப் பொறுத்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. சிலருக்கு மின்கட்டணம், பள்ளிக் கட்டணம், வாடகை, தங்கும் விடுதி கட்டணம், மருத்துவக் கட்டணம் போன்றவற்றுக்காக டாலர்களாகவும் அனுப்பப்படுகின்றன. இந்த டாலர்களில் ‘பென்னி’ என்ற பெயரில் கையெழுத்துகள் இருக்கின்றன. கேபி லைன் என்ற பத்திரிகையாளர் பென்னியைத் தேடிக் கிளம்பினார். “ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை பென்னியின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறேன். 26 கடைகளில் பொருட்கள் வாங்கப்பட்டு, தேவைப்படும் மக்களுக்கு அனுப்பப்படுகிறது. 8 நிகழ்ச்சிகளில் ஏழைகளுக்குத் தேவையான பொருட்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் பென்னி யார், எங்கே இருக்கிறார் என்பதை மட்டும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை’’ என்கிறார். பிரிட்டானி மெடினா, ‘’பென்னி மக்களின் அன்பை ஏராளமாகப் பெற்றிருக்கிறார். எனக்கு ஒரு பரிசு வந்தது. திறந்து பார்த்தபோது என்னால் அழுகையைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. கிறிஸ்துமஸுக்கு குழந்தைகளுக்கு ஏதாவது வாங்க வேண்டும், ஆனால் எப்படி வாங்குவது என்று கவலையில் இருந்தேன். இதை அறிந்து எனக்குப் பணம் அனுப்பப்பட்டிருந்தது. மகிழ்ச்சியாகப் பண்டிகையைக் கொண்டாடினோம்’’ என்கிறார். பென்னியிடமிருந்து பயன்பெற்றவர்கள் சொல்லும் கணக்கின்படி 34 லட்சம் ரூபாய் இதுவரை செலவிடப்பட்டிருக்கிறது. ஆனால் இதைவிட மிக அதிகமாகச் செலவாகியிருக்கும் என்கிறார்கள்.

இந்தக் காலத்தில் இப்படி ஒரு மனிதரா!



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x