Published : 18 Sep 2015 10:16 AM
Last Updated : 18 Sep 2015 10:16 AM

உலக மசாலா - ஐபாட் உணவகம்

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் ‘ஈட்சா’ என்ற புதுமையான உணவு விடுதி தொடங்கப்பட்டுள்ளது. விடுதிக்குள் ஊழியர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அதாவது கண் முன் தெரியமாட்டார்கள். சுவர்களை ஒட்டி ஐபாட்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. அவற்றில் கார்டை தேய்க்க வேண்டும். உடனே நம் பெயர் திரையில் தெரியும். பிறகு மெனு வரும். தேவையான உணவுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த உணவுகளில் எவ்வளவு கலோரி இருக்கிறது, விலை எவ்வளவு என்பதை எல்லாம் காட்டும். பழக்கலவை என்றால் என்னென்ன பழங்கள் வேண்டும் என்று நாமே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

பிறகு பில் எவ்வளவு என்று காட்டும். ஓகே என்று பட்டன் அழுத்திவிட்டு, காத்திருக்க வேண்டும். எதிரில் இருக்கும் திரைகளில் நம் பெயர் தெரிந்தால், அருகில் சென்று இரண்டு முறை அழுத்த வேண்டும். சட்டென்று திரை அகன்று, நாம் கேட்ட உணவுகள் அங்கிருக்கும். அவற்றை எடுத்து, மேஜையில் வைத்துச் சாப்பிட வேண்டியதுதான். ‘‘இது புது முயற்சி. இன்னும் மக்கள் பழகவில்லை. மனிதர்களின் சேவை எதிர்பார்த்து வருபவர்கள் ஏமாற்றமடைவார்கள். சாப்பிடத்தானே வந்திருக்கிறோம் என்று நினைப்பவர்கள் நிம்மதியாக இருப்பார்கள். எதிர்காலத்தில் உணவகங்கள் இப்படித்தான் இருக்கப் போகின்றன’’ என்கிறார் நிறுவனர்களில் ஒருவரான டிம் யங்.

ம்ம்...டிப்ஸ் தரவேண்டிய வேலை இல்லை!

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் வசிக்கிறார்கள் டோனி கொலியர்,கொரின் ஜோன்ஸ். இவர்கள் இருவருக்கும் 1961-ம் ஆண்டு வெளிவந்த 101 டால்மேஷன்ஸ் என்ற டிஸ்னி க்ளாஸிக் திரைப்படம் மிகவும் பிடிக்கும். இந்தக் காதல் கதையில் 2 நாய்கள் முக்கியப் பங்கு வகித்தன. டோனியும் ஜோன்ஸும் தங்கள் நிச்சயதார்த்தத்தை வித்தியாசமாக நடத்த முடிவு செய்தனர். திரைப்படத்தில் வருவது போலவே தாங்களும் உடைகள் அணிந்து, இரண்டு நாய்களுடன் புகைப்படங்கள் எடுத்திருக்கின்றனர். “என் மீது எவ்வளவு அன்பு இருந்தால் டோனி இந்தக் காரியத்தில் இறங்கியிருப்பார்! எந்தப் பெண்ணுக்கும் இவ்வளவு வித்தியாசமான நிச்சயதார்த்தம் நடந்திருக்காது” என்கிறார் ஜோன்ஸ்.

ஆஹா! ரசனையான ஜோடி!

நடந்தே உலகைச் சுற்றி வந்திருக்கிறார் கனடாவைச் சேர்ந்த ஜீன் பெலிவா. 6 கண்டங்களில் உள்ள 64 நாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறார். 45 வயதில் பயணம் தொடங்கியவர் 75,500 கி.மீ. தூரத்தை 11 ஆண்டுகளில் கடந்திருக்கிறார். ஒரு கைவண்டியில் பொருட்களை வைத்துக்கொண்டு, எங்கும் நடந்தே சென்றிருக்கிறார். இரவு நேரங்களில் கோயில், பூங்கா, காடு, தேவாலயம், பள்ளி, ஜெயில் போன்ற இடங்களில் தங்கியிருக்கிறார். இவை தவிர, 1,600 வீடுகளிலும் தங்கியிருக்கிறார்.

தன் பயணத்தில் நெல்சன் மண்டேலா உட்பட நோபல் பரிசு பெற்ற நால்வரைச் சந்தித்திருக்கிறார். 54 ஷூக்களைப் பயன்படுத்தியிருக்கிறார். இந்தியா, சீனா போன்ற நாடுகளில் தன் அளவுக்கு ஷூ கிடைக்காமல் கஷ்டப்பட்டிருக்கிறார். “ஒரு நிறுவனத்தை நடத்தி வந்த எனக்கு உலகப் பயணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தது. என் மனைவியிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு கிளம்பிவிட்டேன். உலக அமைதிக்காக இந்தப் பயணத்தைத் திட்டமிட்டுக்கொண்டேன். ஏராளமான அனுபவங்கள். ஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் உள்ள மக்களின் ஏழ்மை நிலை என்னை வெகுவாகப் பாதித்துவிட்டது” என்கிறார் ஜீன்.

நடை மூலம் உலகைச் சுற்ற முடியும் என்று காட்டியவருக்குப் பாராட்டுகள்!

சமீபத்தில் அறிமுகமான நியான் உடோன் நூடுல்ஸை சாப்பிட ஜப்பானியர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். காலம் காலமாக இருந்து வரும் வெள்ளை நூடுல்ஸை வண்ண நூடுல்ஸாக மாற்றியிருக்கிறார்கள். கண்களைப் பறிக்கும் அடர்ந்த நியான் வண்ணங்களில் இந்த நூடுல்ஸ் இருக்கின்றன. இவற்றுடன் சேர்க்கப்படும் டோஃபுவும் வண்ணத்துக்கு மாறிவிட்டது.

ஆனால் பார்ப்பதற்கு இவை உணவுப் பொருட்கள் போலவே தெரியவில்லை. உணவு ஆராய்ச்சியாளரும் எழுத்தாளருமான குரரே ராகு நியான் நூடுல்ஸை உருவாக்கியிருக்கிறார். இரவு நேரத்தில் ஒளிரும் தன்மைகொண்ட இந்த நியான் நூடுல்ஸ், சோதனை முயற்சியாக சில இடங்களில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. விரைவில் உணவகங்களில் கிடைக்கும் என்கிறார் குரரே ராகு.

உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வண்ணங்கள் தேவையா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x