Published : 07 Aug 2016 09:12 AM
Last Updated : 07 Aug 2016 09:12 AM

உலக மசாலா: எளிய வாழ்க்கைக்கு ஏராளமாகச் செலவு செய்ய வேண்டுமா?

சுவிட்சர்லாந்து நாட்டின் ஆல்ப்ஸ் மலையில் 6,463 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது நல் ஸ்டெர்ன் தங்கும் விடுதி. குறைவான பொருட்களைக் கொண்டு எளிமையான வாழ்க்கை என்ற நோக்கத்தை மையமாக வைத்து இயங்கி வருகிறது. ஆல்ப்ஸ் மலையில் திறந்தவெளியில் படுக்கையை அமைத்திருக்கிறார்கள். தரை இருக்கிறது. சுவர்கள் இல்லை. கழிப்பறை இல்லை. திறந்தவெளியில் 360 டிகிரி கோணத்தில் ஆல்ப்ஸ் மலையின் அழகைக் கண்டு ரசிக்கலாம். ‘‘இயற்கைக்கு எந்தவிதத்திலும் தீங்கு இழைக்காமல், மிகக் குறைவான பொருட்களைக் கொண்டு வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவே இந்தத் தங்கும் விடுதியை ஆரம்பித்திருக்கிறோம். பெரிய படுக்கை, 2 விளக்குகள், 2 நாற்காலிகள், சிறிய மேஜை மட்டுமே இங்கே வைத்திருக்கிறோம். அருகில் இருக்கும் மரத்தால் ஆன சிறிய வீட்டில் இருந்து உணவுகளைத் தயாரித்து, வழங்குகிறோம். ஒரு இரவுக்கு 18 ஆயிரம் ரூபாய் கட்டணம். மோசமான வானிலை என்றால் எந்த நேரத்திலும் விடுதியை மூடிவிடுவோம். ஆகஸ்ட் வரை தங்குவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். பிரமாதமாகத் தொழில் போய்க்கொண்டிருக்கிறது’’ என்கிறார் நிறுவனர் டேனியல் சார்போன்னியர். ‘‘திறந்தவெளி தங்கும் விடுதி வித்தியாசமான அனுபவங்களைத் தருகிறது. ஆல்ப்ஸ் மலையின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. சாப்பிடவோ, குடிக்கவோ என்ன கேட்டாலும் தருகிறார்கள். கழிவறை வசதி இல்லை என்பதை மட்டும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. கழிவறைக்காக 10 மைல் தூரம் பயணிக்க வேண்டும் என்பதுதான் இந்த விடுதியில் இருக்கும் ஒரே குறை’’ என்கிறார் வாடிக்கையாளர் ஆக்னஸ்.

எளிய வாழ்க்கைக்கு ஏராளமாகச் செலவு செய்ய வேண்டுமா?

ங்கிலாந்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் ஜின் டப் உணவு விடுதிக்குள் நுழையும்போதே, அலைபேசிகளைப் பயன்படுத்த முடியாது என்று கூறிவிடுகிறார்கள். யாருடனாவது பேச வேண்டும், மெயில்களைப் பார்க்க வேண்டும், குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும் என்றெல்லாம் கேட்க முடியாது. இங்கே எவ்வளவு நேரம் தங்கியிருக்கிறீர்களோ, அவ்வளவு நேரமும் அலைபேசிகள் இணைப்பின்றிதான் இருக்க வேண்டும். ‘‘மனிதர்கள் நேருக்கு நேர் பேசுவதை மிகவும் குறைத்துவிட்டனர். போன்களின் மூலமே உரையாடல்கள் நடத்தப்படுகின்றன. தொழில்நுட்பத்துக்கு அடிமையாகி, மனிதர்கள் தங்கள் இயல்புகளை இழந்து வருகிறார்கள். இந்த நிலையை மாற்றுவதற்காகத்தான் இப்படி ஒரு கட்டுப்பாட்டைக் கொண்டு வந்திருக்கிறோம். நண்பர்கள், உறவினர்களுடன் வந்து மகிழ்ச்சியாகப் பேசிக்கொள்ள வேண்டும். அதற்காகவே அலைபேசிகளுக்கான சிக்னல்களை விடுதிக்குள் தடை செய்திருக்கிறோம். அவசரமாகப் பேச வேண்டும் என்றால் ஒவ்வொரு மேஜையிலும் ஒரு தொலைபேசியை வைத்திருக்கிறோம். முதலில் யோசிப்பவர்கள் ஒருமுறை இப்படிச் சாப்பிட்ட பிறகு, எங்களைப் புரிந்துகொள்கிறார்கள். அடிக்கடி வருகிறார்கள். ஆரம்பித்த ஒரே மாதத்தில் எங்கள் விடுதி பிரபலமாகிவிட்டது’’ என்கிறார் விடுதியின் நிறுவனர் டெய்லர்.

கஷ்டமான விஷயம் என்றாலும் நல்ல விஷயம்தான்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x