Published : 24 Jun 2015 10:30 AM
Last Updated : 24 Jun 2015 10:30 AM

உலக மசாலா: எல்லாத்துலயும் பாதி!

ஜெர்மனியில் வசிக்கிறார் பிரெட்டி க்ரேஸி. அவருடைய மனைவி லாரா, 12 ஆண்டுகள் மணவாழ்க்கைக்குப் பிறகு பிரிந்து சென்றுவிட்டார். பிரெட்டிக்கு மனைவியின் பிரிவைத் தாங்கவும் முடியவில்லை, அந்தச் சோகத்திலிருந்து மீளவும் முடியவில்லை. கடைசியில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தையும் இரண்டாகப் பிரித்துவிட்டார்.

அதாவது டிவி, ஐபோன், லேப்டாப், சோஃபா, நாற்காலி, சைக்கிள், அலமாரி, கரடி பொம்மை, தபால் பெட்டி என்று ஒன்று விடாமல் பவர் மெஷினை வைத்து இரண்டாகப் பிரித்துவிட்டார். வாசலில் கார் நின்றுகொண்டிருந்தது. அதையும் இரண்டாக்கினார்.

`உன்னுடனான அழகான வாழ்க்கைக்கு என்னுடைய அன்பளிப்பு’ என்று குறிப்பிட்டு, ஒரு பாதிப் பொருட்களை லாராவுக்கு அனுப்பி வைத்தார். தன்னுடைய மீதிப் பாதிப் பொருட்களை விற்பனைக்கு வைத்துவிட்டார். லட்சக்கணக்கான மதிப்புள்ள கார், 2 யுரோவுக்குத்தான் விற்பனையாகியிருக்கிறது. தற்போது பிரெட்டியின் மனம் அமைதி அடைந்திருக்கிறது.

ஒரு பிரிவு எத்தனை வலியைத் தருகிறது…

செயற்கைக் கால்களுடன் வலம் வருபவர்களுக்கு ஓர் இனிமையான செய்தி. என்னதான் செயற்கைக் கால் வேலை செய்தாலும் இயற்கையான கால்களைப் போல உணர்வுகளை அவற்றால் உணர்ந்துகொள்ள இயலாது. அந்தக் குறையைத் தீர்க்கும் விதத்தில் ஆஸ்திரியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள், செயற்கைக் கால்கள் மூலம் உணரும் வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

வுல்ஃபாங் ராங்கர் என்பவர் உணரக்கூடிய முதல் செயற்கைக் காலை, பொருத்தி யிருக்கிறார். புல்வெளி, மணல், கற்கள் என்று எதன் மீது நடந்தாலும் செயற்கைக் காலால் அதை உணர்ந்துகொள்ள முடிகிறது. தன்னுடைய கால் போலவே இருப்பதாகச் சொல்கிறார் வுல்ஃபாங்.

நல்ல கண்டுபிடிப்பு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x