Published : 12 Nov 2015 09:14 AM
Last Updated : 12 Nov 2015 09:14 AM

உலக மசாலா: ரூ.66 லட்சம் செலவில் 2 குளோனிங் நாய்கள்

அமெரிக்காவின் லூசியானாவைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் பிலிப் டுபாண்ட். மெல்வின் என்ற மிக புத்திசாலியான நாயை வளர்த்து வருகிறார். மெல்வின் இல்லை என்றால் தன்னால் வாழ முடியாது, அதற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தார். மெல்வினைப் போல 2 நாய்களை க்ளோனிங் மூலம் உருவாக்க முடிவு செய்தார். 66 லட்சம் ரூபாய் செலவில் வெற்றிகரமாக 2 நாய்களை உருவாக்கிவிட்டார். கென் கார்டன், ஹென்றி ஃபாண்டெனாட் என்று பெயர் சூட்டியிருக்கிறார். இரண்டு நாய்களும் அப்படியே மெல்வினின் செயல்களை ஒத்திருக்கின்றன.

‘‘மெல்வினுக்கு 12 வயதானபோது உடல்நிலை மோசமானது. அப்போதுதான் எனக்கு க்ளோனிங் யோசனை தோன்றியது. என் அன்பு மெல்வினைப் பிரிந்து என்னால் வாழவே முடியாது. அதேபோல மெல்வினின் ஆயுளையும் என்னால் நீட்டிக்க முடியாது. அதனால்தான் க்ளோனிங் செய்துகொண்டேன். என் மருத்துவமனையில் அனுபவம் பெற்ற மெல்வினும் இரண்டு குட்டிகளும் மக்களை வரவேற்கக்கூடியவையாக இருக்கின்றன. இரண்டு நாய்களுக்கும் வித்தியாசம் தெரியவேண்டும் என்பதற்காக கறுப்பு, சிவப்பு கழுத்துப் பட்டைகளைக் கட்டியிருக்கிறேன்’’ என்கிறார் பிலிப். நாட்டில் எத்தனையோ நாய்கள் பராமரிப்பு இன்றி தவிக்க, 2 நாய்களுக்கு இத்தனை செலவு செய்து க்ளோனிங் செய்தது அநியாயம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

‘‘எனக்குத் தேவை நாய்கள் அல்ல. என் அருமை மெல்வின் போன்ற நாய்தான். என்னைப் போல சிறப்பு நாய்களை வைத்திருப்பவர்களுக்கு க்ளோனிங் செய்வதற்கு நான் உதவி செய்வேன்’’ என்கிறார் பிலிப்.

என்னதான் சொல்லுங்க, நீங்க செய்தது சரியில்லை பிலிப்…

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் ரோல்ஃப் பாண்டில் மதுவுக்கு அடிமையாகி, ஒரு மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போதுதான் மிலன் நகரில் நடக்கும் கால்பந்து போட்டியைப் பார்ப்பதற்குக் கிளம்பினார். போட்டி முடிந்த பிறகு பார்த்தால், அவருடன் வந்த நண்பர்கள் யாருமே இல்லை. அவருக்கு தான் எங்கே செல்ல வேண்டும் என்ற முகவரியும் மறந்துவிட்டது. மொபைல் போனும் இல்லை என்பதால் அவரால் தன் சொந்த ஊருக்கு வர முடியவில்லை.

‘‘எனக்கு என் முகவரியோ, உறவினர்களோ எதுவுமே தெரியாமல் போய்விட்டது. சட்டைப் பையில் 20 யூரோ மட்டுமே இருந்தது. என் நிலையைப் பார்த்து ஒரு மாணவன், ஸ்லீப்பிங் பேக் கொடுத்து உதவினான். சில நல்ல உள்ளங்கள் உணவு, சிகரெட் கொடுத்து உதவினார்கள். பொது குளியலறையில் குளித்து, துவைத்துக்கொள்வேன். முகவரி நினைவில்லை என்பதால் நான் ஒன்றும் வருந்தவே இல்லை. சுதந்திரம் என்றால் என்ன என்பதை இந்த 11 ஆண்டுகளில் அறிந்துகொண்டேன். எனக்கு வீட்டுக்குச் செல்ல வேண்டிய தேவையே ஏற்படவில்லை. என்னுடைய பெரும்பாலான நேரத்தை நூலகத்தில்தான் செலவிட்டிருக்கிறேன்’’ என்கிறார் ரோல்ஃப். சமீபத்தில் கீழே விழுந்ததில் ரோல்ஃபின் தொடை எலும்பு உடைந்து விட்டது. மருத்துவமனையில் இருந்து சுவிட்சர்லாந்துக்கு தொடர்பு கொண்டனர். தற்போது தன் சொந்த நாட்டில், முதியோர் இல்லத்தில் வசித்து வருகிறார் 71 வயது ரோல்ஃப்.

ரோல்ஃபை வாழவைத்த மிலன் மக்களுக்குத்தான் நன்றி சொல்லணும்…

பொலிவியாவில் மண்டையோட்டுத் திருவிழா நடந்து முடிந்திருக்கிறது. இறந்தவர்களின் மண்டையோடுகளை வைத்து, பூஜை செய்தால் அதிர்ஷ்டமும் ஆசிர்வாதமும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மத ரீதியாக இந்த விழா நடத்தப்படுகிறது. விழா அன்று சுத்தம் செய்யப்பட்ட மண்டையோட்டை மலர்களால் அலங்காரம் செய்கிறார்கள். சிலர் தொப்பி, கண்ணாடி அணிவிக்கிறார்கள். வீட்டில் இருந்து அலங்காரத்துடன் எடுத்துச் செல்லப்படும் மண்டையோடுகள் எல்லாம் தேவாலயத்தில் வைக்கப்படுகின்றன. பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன. அவரவர் விரும்பியதை வேண்டிக்கொள்கிறார்கள். விழா முடிந்த பிறகு, மண்டையோடுகளை யாருக்கும் தெரியாமல், ரகசியமாகக் கல்லறையில் வைத்துவிடுகிறார்கள். குடும்பத்தினர், உறவினர் மண்டையோடுகள் கிடைக்காதவர்கள், ஏதாவது ஒரு மண்டையோட்டை எடுத்துக்கொள்கிறார்கள். நாம் நினைத்தது நிறைவேறும், நம் குடும்பத்தைப் பாதுகாக்கும், உடல் ஆரோக்கியம் பெருகும் என்று நம்பிக்கையோடு இந்த விழாவை நடத்துகிறார்கள். இந்த விழா ஏழை, எளிய மக்களிடமே கொண்டாடப்பட்டு வருகிறது.

வித்தியாசமான விழா…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x