Published : 29 Dec 2015 09:55 AM
Last Updated : 29 Dec 2015 09:55 AM

உலக மசாலா: எஜமானருக்காக 9 ஆண்டுகள் காத்திருந்த நாய்!

டோக்கியோவில் உள்ள ஷிபுயா ரயில் நிலையம் வாயிலில் வெண்கலத்தால் ஆன நாயின் சிலை ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானவர்கள் நாய் சிலை அருகே வந்து படங்கள் எடுத்துக்கொள்கிறார்கள். ஹச்சிகோ நாயின் கதையைப் பேசிக்கொள்கிறார்கள். 1923ம் ஆண்டு தனியாக நின்றுகொண்டிருந்த ஹச்சிகோவை பேராசிரியர் யுனோ எடுத்து வளர்த்தார். மிகப் புத்திசாலித்தனமாக நடந்துகொண்டது ஹச்சிகோ. யுனோ மீது அளவற்ற அன்பு வைத்திருந்தது. தினமும் காலை அவருடன் ஷிபுயா ரயில் நிலையம் வரை சென்று வழியனுப்பும். மாலை அவர் திரும்பு நேரம் அவருக்காக ரயில் நிலையத்தில் காத்திருக்கும். ஒருநாள் யுனோ திரும்பி வரவே இல்லை. அவருக்குத் திடீரென்று ஏற்பட்ட உடல் நலக் குறைவால் இறந்துவிட்டார்.

ஆனால் அடுத்து 9 ஆண்டுகள் தினமும் ரயில் நிலையத்துக்குச் சென்று, தன்னுடைய எஜமானருக்காகக் காத்திருந்தது ஹச்சிகோ. இந்த விஷயம் ஊடகங்கள் மூலம் ஜப்பான் முழுவதும் பரவியது. நாயின் அன்பைக் கண்டு கண்கலங்காத ஜப்பானியர்களே இல்லை. ஹச்சிகோ சிலை ஒன்றை ஷிபுயா ரயில் நிலையத்தில் நிறுவினார்கள். பள்ளிகளில் குழந்தைகளிடம் ஹச்சிகோவின் விசுவாசத்தைப் பாடமாகச் சொல்லித் தந்தனர். சிலை வைத்து ஓராண்டில் ஹச்சிகோ மரணம் அடைந்தது. 1948ம் ஆண்டு இந்த வெண்கலச் சிலையை மீண்டும் நிறுவினர். ஹச்சிகோ உலகை விட்டுச் சென்று 80 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் ஜப்பானிய மக்களிடம் ஹச்சிகோவின் செல்வாக்கு குறையவே இல்லை.

அன்பு காட்டுவதில் ஹச்சிகோவுக்கும் மனிதர்களுக்கும் போட்டி!

அமெரிக்காவின் சான் அண்டோனியோவில் வசிக்கிறார் ராப் ஃபெர்ரெல். உப்புத் தூளில் ஓவியங்களைத் தீட்டுவதில் இவருக்கு இணை யாருமில்லை. மேஜை, வண்ண அட்டைகளின் மீது உப்புத் தூளைத் தூவிவிடுகிறார். பிறகு பிரஷ் மூலம் வரைய ஆரம்பிக்கிறார். அச்சு அசலாக உருவத்தைக் கொண்டு வருவதுதான் ஃபெர்ரெலின் சிறப்பு. ஓவியம் தயாரானதும் படங்கள் எடுத்து, இன்ஸ்டாகிராமில் வெளியிடுகிறார்.

மைக்கேல் ஜாக்சன், ஸ்நூப் டாக், பாப் மார்லி, அமெரிக்க அதிபர்கள் என்று இவர் வரையும் ஒவ்வோர் ஓவியத்துக்கும் பல லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள். ’’முடி வெட்டுவதுதான் என்னுடைய பிரதான தொழில். சலூன் வைத்திருக்கிறேன். வாடிக்கையாளர்களுக்கு வித்தியாசமான முறையில் முடி வெட்டுவேன், லோகோவைப் பதிப்பிப்பேன், பிரபலங்களின் உருவங்களைச் செதுக்கி விடுவேன். அந்த ஆர்வம்தான் என்னை உப்புத் தூளில் ஓவியம் தீட்ட வைத்தது’’ என்கிறார் ஃபெர்ரெல்.

எளிய வழியில் அசத்தும் ஓவியம்!

உணவுக் கட்டுப்பாடு இல்லாமல், உடற்பயிற்சி செய்யாமல், அறுவை சிகிச்சை பண்ணாமல் உடல் எடையைக் குறைக்க வைக்கும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் பிரிட்டன் மருத்துவ நிபுணர்கள். உடல் பருமன் உள்ளவர்கள் சிறிய கேப்சூலை விழுங்க வேண்டும். இந்த கேப்சூல் இரைப்பைக்குள் சென்றவுடன் குழாய் வழியே தண்ணீர் செலுத்தப்படும். உடனே கேப்சூல் பலூன் போல உப்பி விடும். இரைப்பையின் பாதிப் பகுதியை பலூன் அடைத்துக்கொள்ளும். நீங்கள் எவ்வளவுதான் சாப்பிட ஆசைப்பட்டாலும் கால் பங்குதான் சாப்பிட முடியும். இப்படிச் சாப்பிடுவதால் உடலில் அளவுக்கு அதிகமான கலோரிகள் சேர்வதில்லை. 4 மாதங்களுக்குப் பிறகு பலூனின் ஆயுள் முடிந்துவிடும்.

மீண்டும் உள்ளே அனுப்பியது போலவே பலூனை வெளியே எடுத்துவிட முடியும். இந்த நான்கு மாதங்களில் ஆச்சரியப்படத்தக்க வகையில் உடல் இளைத்திருக்கும். ‘’மனிதர்களை அச்சுறுத்தும் நோய்களில் உடல் பருமன் முக்கியமானது, மோசமானது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு இப்பொழுது கிடைத்திருக்கிறது’’ என்கிறார் தலைமை மருத்துவ அதிகாரி டேம் சாலி டேவிஸ். ’’எந்த முயற்சியும் செய்யாமல் நான்கு மாதங்களில் குறைந்தது 10 கிலோ எடையாவது குறைந்துவிடும். ஆனால் உடல் பருமனுக்கு இது நிரந்தர தீர்வல்ல’’ என்கிறார் க்ளாஸ்கோவ் பல்கலைக்கழகப் பேராசிரியர் மைல் லீன்.

இயற்கையாக உடல் எடையைக் குறைப்பதுதான் நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x