Published : 28 Aug 2016 10:57 AM
Last Updated : 28 Aug 2016 10:57 AM

உலக மசாலா: உள்ளங்களைக் கொள்ளை கொண்ட புரூனோ!

மெரிக்காவின் விர்ஜினியா பகுதியில் குடித்து விட்டு, கார் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய குற்றத்துக்காக ஒரு பெண் கைது செய்யப் பட்டார். காரின் பின் பகுதியில் ஒரு வயது குழந்தை ஒன்று, வாந்தி எடுத்த நிலையில் அழுது கொண்டிருந்தது. உடனே காவல்துறை அதிகாரி, குழந்தையைத் தூக்கினார். குளிக்க வைத்தார். துண்டால் துடைத்து பால் கொடுத்தார். காவல் நிலையத்தில் இருந்த ஒரு கரடி பொம்மையை விளையாடக் கொடுத்தார். இருக்கையில் அமர்ந்து, தன் மார்பில் குழந்தையைப் படுக்க வைத்து, தூங்க வைத்தார். அதிகாரியின் அன்பான கவனிப்பில், குழந்தை தன் அம்மாவைத் தேடி அழவே இல்லை. பிறகு குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் இருந்து வந்தவர்களிடம் குழந்தையைப் பத்திரமாக ஒப்படைத்தார். அதிகாரியின் அன்பைக் கண்டு எல்லோரும் நெகிழ்ந்து போனார்கள்.

காவல் துறை உங்கள் நண்பன் என்று நிரூபித்திருக்கிறார்!

அமெரிக்காவின் மின்னசோட்டா லாங்வில் பகுதி மக்களின் அடையாளமாக மாறியிருக்கிறது 12 வயது புரூனோ. இங்கே 150 குடும்பங்கள் வசிக்கின்றன. ஒவ்வொரு வீட்டுக்கும் புரூனோ செல்லப் பிராணி. ஆனால் புரூனோ வசிப்பதோ 4 மைல் தொலைவில் இருக்கும் லாரியின் குடும்பத்துடன். தினமும் 4 மைல் தொலைவைக் கடந்து, லாங்வில் மக்களைச் சந்திக்கிறது. விளையாடுகிறது. அவர்கள் கொடுக்கும் உணவைச் சாப்பிடுகிறது. மீண்டும் மாலையில் தன் உரிமையாளர் வீட்டுக்குத் திரும்பி விடுகிறது. ‘புரூனோ எங்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய பரிசு. ஒரு குப்பைத் தொட்டிக்கு அருகில் புரூனோவைப் பார்த்தேன். வீட்டுக்கு எடுத்து வந்தேன். ஆனால் எங்கள் செல்ல நாய் ஒன்றை இழந்திருந்ததால், என் மனைவிக்கு புரூனோ மீது ஆர்வம் இல்லை. எங்காவது விட்டுவிடலாம் என்று ட்ரக்கில் வைத்து, லாங்வில் சென்றேன். புரூனோவைப் பார்த்ததும் குழந்தைகளும் பெரியவர்களும் உற்சாகமானார்கள். குட்டி புரூனோ எல்லோரையும் தன் அன்பாலும் அழகாலும் வசீகரித்துவிட்டான். ட்ரக்கை எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன். வீட்டில் பார்த்தால் புரூனோ! எனக்கு ஆச்சரியமாகிவிட்டது. 4 மைல் தூரமும் ட்ரக்கில் தொங்கிக்கொண்டு வந்து சேர்ந்துவிட்டது. அதற்கு மேல் எங்களால் புரூனோவை ஏற்றுக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை. எங்களுடன் தங்க விரும்பும் புரூனோ, லாங்வில் மக்களின் அன்புக்காகவும் ஏங்குகிறது. அதனால் கடந்த 12 வருடங்களாக லாங்வில் சென்று வருகிறது. மோசமான வானிலை காரணமாகச் சில நாட்கள் வீட்டிலேயே தங்கியிருக்கும். மற்றபடி புரூனோ பயணிக்காத நாட்களே இல்லை. வயதாகிவிட்டதால் தினமும் அவ்வளவு தூரம் நடக்க முடிவதில்லை. அதனால் ஏதாவது வாகனங்களில் வருபவர்கள் இறக்கிவிட்டுச் செல்கிறார்கள்’ என்கிறார் லாரி. ‘எங்கள் பகுதியில் மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் தெரியாதவர்களாகக் கூட இருக்கிறோம். ஆனால் புரூனோவைத் தெரியாதவர்களே இல்லை. அவனால்தான் எங்கள் வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரித்திருக்கிறது! அவன் வராத நாட்கள் வெறுமையாக இருக்கும். அவனின் அன்பை உலகத்துக்குச் சொல்வதற்காகவே புரூனோ சிற்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம். லாங்வில் பகுதியின் செல்ல நாயும் அம்பாசடரும் புரூனோதான்! இங்கிருக்கும் ஒவ்வொருவரும் புரூனோ பற்றி ஏராளமான கதைகள் வைத்திருக்கிறார்கள். எதிர்காலத் தலைமுறையினரிடம் மிகப் பெரிய பழுப்பு நாய் ஒன்று எல்லோர் மனங்களையும் கொள்ளைகொண்டது, அது பெயர் புரூனோ என்று சொல்லிக்கொண்டிருப்பார்கள்!’ என்கிறார் ரிச்சர்ட்.

உள்ளங்களைக் கொள்ளை கொண்ட புரூனோ!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x