Published : 24 Jun 2015 10:32 AM
Last Updated : 24 Jun 2015 10:32 AM

உலக மசாலா: உலக அழகி அனா!

ஆசியாவின் மிக வயதான தோற்றம் கொண்ட பெண்ணாக இருக்கிறார் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த அனா ரோச்செல் பாண்டேர். இவருக்கு வயது 18தான் என்றாலும் 144 ஆண்டுகள் வாழ்ந்த மூதாட்டி போலக் காணப்படுகிறார். 14 வயதில் அனாவுக்கு மரபணுக் குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சாதாரண மனிதர்களின் வளர்ச்சியை விட 10 மடங்கு வளர்ச்சி அதிகமாக இருக்கிறது இவருக்கு. பற்கள் விழுந்து, முகம் சுருங்கி, குறுகிய உருவமாக மாறிவிட்டார் அனா. 80 பேர் உலகில் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அவர்களில் இருவர் பிலிப்பைன்ஸில் இருக்கிறார்கள். நீண்ட காலம் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்பதால், அனாவின் 18வது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடினார்கள். அனாவுக்குப் பிடித்த தொலைக்காட்சி பிரபலம் சாரா ஜெரோனிமோவை வரவழைத்தார்கள். மூன்று வெவ்வேறு வித ஆடைகளில் தோன்றிய அனா, மிகவும் மகிழ்ச்சியாகப் பிறந்தநாளைக் கொண்டாடினார்.

அடப் பாவமே…

அமேசானில் கடந்த மாதம் அதிகம் விற்பனையான 10 புத்தகங்களில் 5 புத்தகங்கள் வண்ணம் தீட்டும் புத்தகங்கள்! இவை குழந்தைகளுக்கான வண்ணம் தீட்டும் புத்தகங்கள் அல்ல. பெரியவர்களுக்கான புத்தகங்கள். வீடு, அலுவலகம் என்று பெண்கள் நாள் முழுவதும் பரபரப்பாகவே இருக்கிறார்கள். இதனால் மன அழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள். அவர்களை மன அழுத்தத்தில் இருந்து வெளியே கொண்டு வருவதற்கும், மகிழ்ச்சியாக வைத்திருப்பதற்கும் வண்ணம் தீட்டும் புத்தகங்கள் மிகவும் உதவியாக இருக்கின்றன.

பதிப்பாளர் மைக்கேல் ஓ மாரா 28 தலைப்புகளில் வண்ணம் தீட்டும் புத்தகங்களைக் கொண்டு வந்திருக்கிறார். மொத்தம் 5 லட்சம் புத்தகங்கள் இதுவரை விற்பனையாகி இருப்பதாகச் சொல்கிறார். பிரிட்டனில் உள்ள பெரும்பாலான பெண்கள் ஓய்வு நேரங்களில் வண்ணங்களைத் தீட்டி வருகிறார்கள். வண்ணம் தீட்டும்போது சோர்ந்திருக்கும் மூளை தூண்டப்படுகிறது என்கிறார் மருத்துவர் டேவிட் ஹோம்ஸ்.

“வண்ணம் தீட்டிய இரண்டு மணி நேரங்களில் குழப்பமான மனம் தெளிவடைகிறது. நல்ல முடிவை எடுக்க வைக்கிறது. இரவில் நிம்மதியாகத் தூங்க முடிகிறது’’ என்கிறார் ஃபியோனா. “வேலை… வேலை என்று இருக்கும் நான் என் உடல்நலத்தைக் கெடுத்துக்கொண்டேன். அப்பொழுதுதான் வண்ணம் தீட்ட ஆரம்பித்தேன். மனம் சந்தோஷமாக மாறுகிறது. உடல் நிலையும் ஆரோக்கியமாக இருக்கிறது’’ என்கிறார் கட்டிடக் கலைஞர் நவோமி.

அட! இனி குழந்தைகளுடன் அம்மாக்களுக்கு போட்டி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x