Published : 03 Jun 2016 10:43 AM
Last Updated : 03 Jun 2016 10:43 AM

உலக மசாலா: உலகின் முதல் கறுப்பு ஐஸ் க்ரீம்!

நியூயார்க்கில் கறுப்பு ஐஸ் க்ரீம் விற்பனைக்கு வந்திருக்கிறது. தேங்காய்ப் பால், தேங்காய் க்ரீம், தேங்காய்த் தூள், தேங்காய்க் கரி கலந்த மிகச் சுவையான ஐஸ் க்ரீம் இது. காபி, சாக்லேட் சுவையை விட வித்தியாசமான சுவையில் உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர். தேங்காயின் சாம்பலை ஐஸ் க்ரீமுக்குள் கலந்தனர். சுவையும் வண்ணமும் இதில் இருந்துதான் கிடைத்தன. விற்பனைக்கு வந்த உடனேயே தேங்காய் சாம்பல் ஐஸ் க்ரீம் விற்பனையில் உச்சத்தைத் தொட்டுவிட்டது. வாடிக்கையாளர்களே சுவையில் மயங்கி, ஐஸ் க்ரீமுக்கு இணையதளங்களில் விளம்பரம் செய்து வருகிறார்கள். தேங்காய் ஓடுகளை எரித்து, அதிலிருந்து கிடைக்கும் சாம்பலைப் பயன்படுத்துகிறார்கள். ‘’தேங்காய் சாம்பல் உடலுக்கும் நல்லது. வித்தியாசமான சுவையாகவும் இருக்கிறது. பார்க்கவும் கண்களைக் கவர்கிறது. ஒரு தேங்காய் சாம்பல் ஐஸ் க்ரீம் கோன் 470 ரூபாய்’’ என்கிறார் இதன் உரிமையாளர் மோர்கென்ஸ்டெர்ன். இந்த ஐஸ் க்ரீமைச் சாப்பிட்ட பிறகு, சிறிது நேரம் வரை பற்களும் நாக்கும் கறுப்பாக இருக்கும்.

உலகின் முதல் கறுப்பு ஐஸ் க்ரீம்!

வாகனங்கள் பெருக்கம் அதிகம் உள்ள சீனாவில், கார்களை நிறுத்துவது மிகக் கடினமான விஷயமாக இருந்து வருகிறது. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக ஷென்ஸென் யீ ஃபங் ஆடோமேஷன் டெக்னாலஜி நிறுவனம் உலகின் முதல் automatic guided vehicle ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. முழுக்க முழுக்க ரோபோக்களால் இயக்கக்கூடியது. கார்களை உரிய இடத்துக்கு எடுத்து வந்து நிறுத்தினால் போதும். மெட்டல் போர்ட் ரோபோ ஒன்று காருக்கு அடியில் சென்று, கார்களை இழுத்துக்கொண்டு சென்று, சரியான இடத்தில் நிறுத்திவிடுகிறது. இப்படி ஒரு காரை நிறுத்துவதற்கு 120 நொடிகளே ரோபோ எடுத்துக்கொள்கிறது. நெருக்கடி மிகுந்த சீன நகரங்களில் கார்களை நிறுத்தும் பிரச்சினை, தற்போது ரோபோ பார்கிங் மூலம் சரிசெய்யப்பட்டிருக்கிறது. ரோபோ மூலம் பார்க் செய்யும்போது கார்களுக்கு அதிக இடங்களும் தேவைப்படுவதில்லை. ஒரு நொடிக்கு 1.5 மீட்டர் வேகத்தில் 2.5 டன் எடைகளை இழுத்துச் செல்கிறது இந்த ரோபோ.

பார்கிங் பிரச்சினை இனி இல்லை!

அமெரிக்கத் தொலைக்காட்சி பிரபலம் கிம் கர்டஷியான் போலவே இருக்கிறார் 24 வயது ஜெலினா பெரிக். அவரைப் பார்ப்பவர்கள் அனைவரும் கிம் கர்டஷியான் என்றே நம்பி விடுகிறார்கள். இன்ஸ்டாகிராமில் இவரை 7 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். ‘’நான் குரோவேசியாவைச் சேர்ந்தவள். அமெரிக்க ஃபேஷன் மீது எனக்கு ஆர்வம் எப்போதுமே இருந்ததில்லை. இயற்கையிலேயே என் உருவ அமைப்பும் கிம் கர்டஷியான் போலவே அமைந்திருப்பதால்தான் எங்கள் இருவருக்கும் உருவ ஒற்றுமை அதிகம் இருக்கிறது. நான் ஒருநாளும் அவரைப் போல இருக்க வேண்டும் என்று விரும்பியதே இல்லை. என்னுடைய ஒப்பனைகளும் ஆடைகளும் அவரது விருப்பத்தைப் போலவே இருப்பதாக மற்றவர்கள் சொல்லித்தான் எனக்கே தெரிகிறது.

நான் நானாக இருக்கவே விரும்புகிறேன். அவரைப் போல இருக்க வேண்டும் என்பதற்காக எந்தவிதமான முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. இரண்டு வாரங்களுக்கு முன்பு யுடியூப் சானல் ஒன்றை ஆரம்பித்தேன். அதில் ஒப்பனை நுட்பங்களை விவரித்தேன். உன் கணவர் கான்யே வெஸ்ட், குழந்தை நார்த் படங்கள் எங்கே என்று ஏராளமானவர்கள் கேட்டார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அதற்குப் பிறகுதான் என்னைக் கிம்மாக நினைத்துக்கொண்டார்கள் என்று அறிந்துகொண்டேன். ஏராளமான ஒப்பீடுகள் இருந்தாலும் அதை நான் முக்கியமாகக் கருதவில்லை. நான் புகழ் அடைய வேண்டும் என்று விரும்புகிறேன்.

ஆனால் இன்னொருவரின் புகழை எனதாக்கிக்கொள்ள விருப்பம் இல்லை. இத்தனைப் பேரும் கிம் போல இருப்பதாகச் சொன்னாலும் என் கண்ணாடி என்னவோ என்னை அப்படிக் காட்டவே இல்லை. என் நாட்டில் என் விருப்பப்படி நான் வேலை செய்துகொண்டிருக்கிறேன். நான் கிம் போல என்னை மாற்றிக்கொண்டிருப்பதாகச் சொல்லும் குற்றச்சாட்டுகளைப் புறக்கணிக்கிறேன்’’ என்கிறார் ஜெலினா.

நான் அவர் இல்லை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x