Published : 19 Apr 2017 09:35 AM
Last Updated : 19 Apr 2017 09:35 AM

உலக மசாலா: உலகின் மிக வயதான பெண்மணிக்கு வாழ்த்துகள்!

உலகின் மிக வயதானவராக விளங்கிய இத்தாலியைச் சேர்ந்த எம்மா மொரனோ, 117 ஆண்டுகள் 137 நாட்களைக் கடந்த நிலையில் கடந்த 15-ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து, ஜமைத்காவைச் சேர்ந்த வயலட் மோஸ் ப்ரவுன், உலகின் புதிய மிக வயதான மனிதராக உருவெடுத்துள்ளார். இவர் 117 ஆண்டுகள் 138 நாட்களைக் கடந்துள்ளார்.

1900-ம் ஆண்டு பிறந்த இவர், கரும்பு தோட்டத்தில் தொழிலாளியாக வேலை செய்து, தன்னுடைய கடின உழைப்பால் தொழில்முனைவோரானார். இவருக்கு 6 குழந்தைகள். இவர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வசித்து வருகின்றனர். இவரை கவனித்துக்கொள்வதற்காக இவரது 96 வயது மகன் இங்கிலாந்திலிருந்து ஜமைக்கா வந்துவிட்டார்.

“எங்களது மரபணுக்கள் மூலமே நீண்ட ஆயுள் கிடைத்திருக்கிறது. மீன், ஆடு, மாட்டின் கால், இனிப்பு உருளைக் கிழங்கு, பழங்கள் போன்றவற்றை விரும்பிச் சாப்பிடுவேன். ஆரஞ்சும் மாம்பழங்களும் மிகவும் பிடிக்கும். கோழி, பன்றி இறைச்சிகளைச் சாப்பிடுவதில்லை. நன்றாக உழைப்பேன். கரும்பை வெட்டி கழுதையின் முதுகில் கொஞ்சம் ஏற்றிவிட்டு, மீதியை என் தலையில் சுமந்துகொண்டு மைல் கணக்கில் நடந்துசென்று விற்றுவிட்டு வருவேன். கொஞ்சம் பணம் சேர்ந்தவுடன் ரொட்டிக் கடை வைத்தேன். அப்படியே வியாபாரம் பெருகியது. குடும்பம் நல்ல நிலைக்கு முன்னேறிவிட்டது.

இத்தனை ஆண்டுகளில் நினைவாற்றல் கூட குறையவில்லை. முதல் முறை சென்ற விமானப் பயணமும் கார் பயணமும் இன்னமும் என் நினைவில் பசுமையாக இருக்கின்றன. பைபிளை விரும்பிப் படிக்கிறேன். நல்லவற்றையே நினைக்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்கிறார் வயலட். மூப்பியல் ஆராய்ச்சி குழு இவரது வயதை உறுதி செய்திருக்கிறது.

ஆனால் இவரைவிட முதியவர் வேறு யாராவது இருக்கிறாரா என்று கின்னஸ் அமைப்பு தேடிக்கொண்டிருக்கிறது. உலகில் சுமார் 450 பேர் நூறு வயதைக் கடந்துள்ளனர். இதில் 50 பேரின் வயது மட்டுமே இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகமானவர்கள் பெண்கள்.

உலகின் மிக வயதான பெண்மணிக்கு வாழ்த்துகள்!

சீனாவின் உஹான் ஓசன் பார்க்கில் வசிக்கும் விலங்குகளுடன் பழகுவதற்கு வாரத்தில் ஒருநாள் மட்டும் அனுமதி வழங்கப் பட்டுள்ளது. இதற்காக ரூ.940 கட்டணம் செலுத்தி, ஒரு வாரத்துக்கு முன்பே பதிவு செய்துகொள்ள வேண்டும். மூன்று மணிநேரம் வரை விலங்குகளுடன் செலவிடலாம். விலங்குகளுக்கு உணவுகளைத் தயார் செய்து, அவர்களே ஊட்டலாம். குளிப்பாட்டலாம். மலத்தை அள்ளி, இடத்தைச் சுத்தம் செய்யலாம். விலங்குகளைச் சந்திக்கும் முன்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. எச்சரிக்கைகள் கொடுக்கப்படுகின்றன.

காலுறைகள் வழங்கப்படுகின்றன. விலங்குகள் ஆர்வலர்களும் செல்ஃபி எடுத்துக்கொள்ள விரும்புகிறவர்களும் இந்தப் பணியைச் செய்வதற்காக வரிசையில் காத்திருக்கிறார்கள். “ஏப்ரல் முதல் தேதி இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட போது முதலில் உண்மை என்று நம்பவில்லை. இங்கே துருவக் கரடிகள் இருக்கின்றன. அவற்றை நெருங்கிப் பார்க்கவும் அவற்றுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ளவும் நான் இங்கே வந்தேன். அற்புதமான அனுபவம். ஃபேஸ்புக்கில் ஏகப்பட்ட லைக்ஸ்!” என்கிறார் லி.

வித்தியாசமான பார்க்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x