Published : 16 Feb 2017 11:04 AM
Last Updated : 16 Feb 2017 11:04 AM

உலக மசாலா: உலகின் மிகவும் அன்பான ஜோடி

ஹிட்லரின் கொடூரமான வதை முகாம்களில் ஒன்று ஆஸ்விட்ஸ். அங்கு அடைத்து வைக்கப்பட்ட ஹங்கேரியைச் சேர்ந்த யூதப் பெண் எடித் ஸ்டீனெரும் அவரது அம்மாவும் மெங்கலேவின் கொடூர பரிசோதனைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். 23 வயது ஜான் மெக்கே என்ற ஸ்காட்லாந்து ராணுவ வீரர், எதிரி நாடான இத்தாலி ராணுவ உடையை அணிந்துகொண்டு எடித்தைக் காப்பாற்றினார். 18 மாதங்கள் அங்கும் இங்கும் பதுங்கியிருந்து, உயிர்ப் பிழைத்த எடித்தும் ஜானும் 1946-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். ஜான் 96 வயதிலும் எடித் 92 வயதிலும் தங்களது 71-வது காதலர் தினத்தைக் கொண்டாடியிருக்கிறார்கள். ஜானைப் போல மிகச் சிறந்த அன்பான மனிதரைப் பார்க்க முடியாது என்று எடித்தும் எடித்தைப் போல பண்பான ஒரு மனிதரைப் பார்க்க முடியாது என்று ஜானும் சொல்கிறார்கள். “குழந்தைகளுக்காகத்தான் இந்தக் காதலர் தினக் கொண்டாட்டம். எங்களைப் பொறுத்தவரை ஆண்டு முழுவதுமே நிறைந்த அன்புடனும் காதலுடனும்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். வதை முகாமிலிருந்து தப்பிப் பிழைத்த எங்களுக்குத்தான் உயிரின் மதிப்பும் வாழ்க்கையின் மகத்துவமும் அதிகம் தெரியும்” என்கிறார் எடித்.

பட்டங்களைக் குவிக்கும் லூசியானோவுக்கு ஒரு பூங்கொத்து!

இத்தாலியைச் சேர்ந்த 70 வயது லூசியானோ பெய்ட்டி இதுவரை 15 பல்கலைக்கழகப் பட்டங்களைப் பெற்று, கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்! உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற லூசியானோ, இன்னமும் மாணவராகப் படித்துக்கொண்டிருக்கிறார். “நான் பகல் முழுவதும் வீட்டிலும் தோட்டத்திலும்தான் பொழுதைக் கழித்துக்கொண்டிருப்பேன். இரவு நேரத்தில் மாணவனாக மாறிவிடுவேன். தினமும் அதிகாலை 3 மணிக்கு படிப்பேன். அதிகாலையில் படிப்பதால் அப்படியே மனதில் பதிந்துவிடும். 2002-ம் ஆண்டு 8 பட்டங்களைப் பெற்றபோது, கின்னஸ் சாதனை புத்தகத்தில் முதல்முறை இடம்பெற்றேன். என்னுடைய படிப்பு சாதனையாக அங்கீகரிக்கப்படும்போது, நான்கு பேர் என்னைப் பார்த்துப் படிக்க ஆரம்பிக்கலாம். அதற்காக கின்னஸில் தொடர்ந்து பதிவு செய்ய ஆரம்பித்தேன். உடற்கல்வி, சமூகவியல், இலக்கியம், சட்டம், தத்துவவியல், அரசியல், வாகனங்கள் என்று வரிசையாகப் பட்டங்களைப் பெற ஆரம்பித்தேன். பெரும்பாலான பட்டங்களை ரோமில் உள்ள உலகப் புகழ்பெற்ற, மிகவும் பழமையான லா சாபியன்ஸ் பல்கலைக்கழகத்தில் பெற்றிருக்கிறேன். குற்றவியல் மற்றும் ராணுவ உத்திகள் குறித்த படிப்பை முடித்து, 15-வது பட்டத்தைப் பெற்றிருக்கிறேன். இன்னும் என்மேல் நம்பிக்கை இருக்கிறது. உடலும் மூளையும் சவாலுக்குக் காத்திருக்கின்றன. அதனால் உணவு அறிவியலில் 16-வது பட்டத்தைப் பெறும் முயற்சியில் இறங்கியிருக்கிறேன். என் படிப்பு எந்தவிதத்திலும் என் குடும்ப வாழ்க்கையை பாதிக்காமல் பார்த்துக்கொள்கிறேன்” என்கிறார் லூசியானோ.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x