Published : 22 Sep 2015 10:33 AM
Last Updated : 22 Sep 2015 10:33 AM

உலக மசாலா: உலகின் கடைசி ஆடியோ கேஸட் கம்பெனி!

சிடியின் வரவால் உலகம் முழுவதும் ஆடியோ கேஸட்களின் ஆதிக்கம் குறைந்து பத்து வருடங்களுக்கும் மேலாகிறது. உலகின் கடைசி ஆடியோ கேஸட் கம்பெனி அமெரிக்காவில் இயங்கி வருகிறது. அதுவும் நல்ல லாபத்துடன் இன்றும் செயல்படுகிறது என்பதுதான் ஆச்சரியமான விஷயம். நேஷனல் ஆடியோ கம்பெனி 1969ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

சிடி அறிமுகமான பிறகு, மற்ற ஆடியோ கேஸட் கம்பெனிகளும் சிடிகளுக்கு மாறிவிட்டன. ஆனால் நேஷனல் ஆடியோ கம்பெனி மட்டும் மூடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது.‘‘இன்றும் கூட நிறைய இசையமைப்பாளர்கள் ஆடியோ கேஸட்களை விரும்புகிறார்கள். சில சிறிய இசைக்குழுக்கள் தங்கள் இசையை ஆடியோ கேஸட்களில் மட்டுமே வெளியிட விரும்புகின்றன.

நாங்கள் தயாரிக்கும் கேஸட்களில் 70 சதவிகிதம் இசைப்பதிவுக்கே பயன்படுத்தப்படுகின்றன. மீதியுள்ளவை எதுவும் பதிவு செய்யாத வெற்று கேஸட்களாகவே விற்பனையாகின்றன. லாபத்துடன் ஓடினாலும் இந்த நிறுவனத்தை வெகு காலத்துக்குத் தொடர்ந்து நடத்த இயலாது. இதுதான் அமெரிக்காவின் கடைசி கேஸட் கம்பெனி’’ என்கிறார் உரிமையாளர்.

ம்ம்… தொழில்நுட்ப வளர்ச்சியில் காணாமல் போனவற்றில் ஆடியோ கேஸட்டும் ஒன்று…

‘அசிங்கமே அழகு’ என்ற பொருளில் இங்கிலாந்தில் ஆண்டுதோறும் ஒரு போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியில் கலந்துகொள்பவர்கள் அளவுக்கு அதிகமான எடையை இழுக்கவேண்டும். அப்படி இழுக்கும்போது அவர்களின் முகம் வலியால் எவ்வளவு அசிங்கமாக மாறுகிறது என்பதை வைத்துதான் வெற்றி கணிக்கப்படுகிறது. 1267ம் ஆண்டில் இருந்து இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது.

ஏராளமான ஆண்களும் பெண்களும் இந்தப் போட்டியில் பங்கேற்க ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் இதுவரை 16 முறை சாம்பியன் பட்டங்களை வென்ற டாம்மி மாட்டின்சன் தோல்வியைச் சந்தித்தார். கார்டன் பிளாக்லாக் சாம்பியன் பட்டம் வென்றார். க்ளார் ஸ்பெடிங் என்ற பெண் இரண்டாவது முறையாகப் பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். ஒப்பனை செய்யக்கூடாது, செயற்கைப் பற்களை வைத்திருக்கக்கூடாது போன்ற விதிகள் இந்தப் போட்டிக்கு உள்ளன.

விசித்திரப் போட்டி…

அமெரிக்காவைச் சேர்ந்தவர் கரென் லெபேகாப். இவர் வரையும் படங்கள் அனைத்தும் ஒரு ரூபாய் நாணயம் அளவிலேயே இருக்கின்றன. ஆனால் ஒவ்வோர் ஓவியமும் அத்தனை நுணுக்கமாகவும் அழகாகவும் தீட்டப்பட்டிருக்கின்றன. விலங்குகள், பறவைகள், இயற்கைக் காட்சிகள், ஸ்டார் வார்ஸ் கதாபாத்திரங்கள் என்று எல்லாமே கண்களைக் கவர்கின்றன.

‘‘என்னுடைய சிறிய ஓவியங்கள் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. நான் ஒரு ஓவியர். பணத்துக்காகவே இதுபோன்ற சிறிய ஓவியங்களை வரைந்து தருகிறேன். இதைத்தான் வரைய வேண்டும் என்ற கொள்கை எல்லாம் இல்லை. என்ன கேட்டாலும் வரைந்து தருவேன். என் அம்மா மூலமே ஓவியங்கள் மீது எனக்கு ஆர்வம் வந்தது. புகைப்படத்தில் இருக்கும் உருவத்தை அப்படியே ஓவியத்தில் கொண்டு வரவே விரும்புகிறேன்’’ என்கிறார் கரென் லெபேகாப்.

சிறியதே அழகு!

அயர்லாந்தில் உள்ள லாகன் நதி மீது ஓர் உலோகப் பாலத்தை உருவாக்கியிருக்கிறார்கள் பொறியியல் கல்லூரி மாணவர்கள். 100 அடி நீளம் கொண்ட இந்தப் பாலம் மிக மெல்லிய உலோகத்தால் உருவாக்கப்பட்டிருக்கிறது. 11 ஆயிரம் உலோகத் துண்டுகள் இதில் இணைக்கப்பட்டிருக்கின்றன. 70 ஆயிரம் போல்ட், நட்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

‘‘நாங்கள் இளம் தலைமுறையினருக்கு எப்படி யோசிக்க வேண்டும், எப்படிக் கனவு காண வேண்டும், எப்படிக் கனவை நிஜமாக்க வேண்டும் என்று ஒவ்வொரு விஷயத்துக்கும் பயிற்சியளிக்கிறோம். இன்று எங்கள் மாணவர்கள் தங்கள் கனவை நிஜமாக்கிவிட்டனர். இது எடை குறைந்த உலோகத்தால் உருவாக்கப்பட்ட பாலம். அதாவது பொம்மைப் பாலம் என்று அழைக்கலாம். இதைப் போக்குவரத்துக்குப் பயன்படுத்த முடியாது’’ என்கிறார் பேராசிரியர் ட்ரெவோர் விட்டேகர். மாணவர்கள் உருவாக்கிய இந்த உலோகப் பாலம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற இருக்கிறது.

இளம் பொறியாளர்களுக்கு வாழ்த்துகள்!



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x