Published : 29 Apr 2015 10:27 AM
Last Updated : 29 Apr 2015 10:27 AM

உலக மசாலா: உலகின் உயரமான திருமணம்!

பிரிட்டனில் மிக உயரமான இடத்தில் ஒரு திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. கிறிஸ் புல் உயரமான இடங்களில் கயிறுகளைக் கட்டி நடக்கும் கலைஞர். 15 வருடங்களாக இந்தக் கலையை நிகழ்த்தி வருகிறார். அவரிடம் 4 வருடங்களாக நடக்கும் பயிற்சியை எடுத்து வந்தவர் போபே பேக்கர்.

இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். வழக்கமான திருமணமாக இல்லாமல் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று நினைத்தனர். ஹோல் கேவ்ஸ் என்ற மலைப் பகுதிக்குச் சென்றனர். 80 அடி உயரத்தில் கயிறுகளைக் கட்டினர்.

திருமணத்துக்கு 100 விருந்தினர்கள் வந்திருந்தனர். மெகாபோன் மூலம் திருமணச் சடங்கு நடைபெற்றது. அனைத்தையும் கயிற்றில் நின்றபடியே இருவரும் செய்து முடித்தனர். மோதிரங்களையும் மாற்றிக்கொண்டனர்.

பிரிட்டனில் இதுவரை இப்படி ஓர் உயரமான இடத்தில் திருமணம் நடைபெறவில்லை என்பதும் கயிறுகளில் நடக்கும் கலைஞர்கள் இருவர் திருமணம் செய்துகொண்டதும் சாதனையாக மாறிவிட்டது! சந்தோஷத்தில் மிதக்கிறது இந்த ஜோடி.

திருமணமே ரிஸ்க் என்று சொல்பவர்கள் மத்தியில் ரிஸ்க் ஆன இடத்திலிருந்து ஒரு திருமணம்!

உலகின் மிகப் பெரிய கண்ணாடிப் பாலம் சீனாவில் திறந்துவிடப்பட்டிருக்கிறது. மிகவும் த்ரில்லான அனுபவத்தை இந்தப் பாலம் தருகிறது என்கிறார்கள். சோங்க்விங் மலைப் பகுதியில் 87.5 அடி நீளத்துக்கு, 2,350 அடி உயரத்தில் இந்தக் கண்ணாடிப் பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது.

இதுவரை அரிஸோனாவில் அமைக்கப்பட்டிருக்கும் க்ராண்ட் கேன்யன் பாலம்தான் இந்தச் சிறப்பைப் பெற்றிருந்தது. தற்போது அந்தச் சாதனையைச் சீனா முறியடித்துவிட்டது. 2014 மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாலத்தின் பணிகள் தற்போது நிறைவடைந்து, பொதுமக்களுக்காகத் திறந்துவிடப்பட்டுள்ளது. 36 கோடி ரூபாய் செலவில் இது உருவாக்கப்பட்டிருக்கிறது.

அடேங்கப்பா! பார்க்கும்போதே மெய் சிலிர்க்குது!

இங்கிலாந்தில் வசிக்கிறார் கர்டிஸ் எல்டன். 3 வயதில் இருந்தே பியானோ வாசித்து வருகிறார். தற்போது 11 வயதில் டிரினிடி பல்கலைக்கழகத்தில் இசையில் பட்டம் பெற்றுவிட்டார். 2011-2014 ஆண்டுகளில் நடைபெற்ற திறமையாளர்கள் போட்டியில் வெற்றி பெற்று, `மினி மொஸார்ட்’ என்ற சிறப்பையும் பெற்றுவிட்டார். தினமும் இரண்டு மணி நேரம் மேற்கொண்ட பயிற்சியும் அம்மா செய்து கொடுத்த பாஸ்தாவும்தான் தன்னுடைய வெற்றிக்குக் காரணம் என்கிறார் கர்டிஸ். கடந்த ஆண்டு ஸ்பெயினில் இவர் நடத்திய இசை நிகழ்ச்சியை 2 ஆயிரம் பேர் ரசித்தனர். ஒரு மணி நேரம் வரிசையில் நின்று ஆட்டோகிராஃப் வாங்கிச் சென்றனர்.

மினி மொஸார்ட்டுக்கு ஒரு பூங்கொத்து!

சீனாவின் ஹெங்ஷுய் நகரில் பல அடுக்கு மாடி கொண்ட ஒரு பள்ளியில் இரும்புக் கம்பிகளைப் பாதுகாப்புக்காக அமைத்திருக்கிறார்கள். கடந்த 6 மாதங்களில் இந்தப் பள்ளியைச் சேர்ந்த 2 மாணவர்கள் மாடியில் இருந்து குதித்து, தற்கொலை செய்துகொண்டனர். தற்கொலையைத் தடுக்கும் நோக்கத்தில் இந்தக் கம்பிகள் போடப்பட்டிருக்கின்றன. தரையில் அடர்த்தியாகச் செடிகள் வளர்க்கப்பட்டிருக்கின்றன. ஒருவேளை குதித்தாலும் பெரிய ஆபத்து நேர்ந்துவிடாது என்கிறார்கள். இந்தப் பள்ளியில் கட்டுப்பாடுகள் அதிகம்.

காலை 5.30க்கு எழுந்தால் இரவு 10 மணிக்குத்தான் படுக்கைக்குச் செல்ல இயலும். சாப்பிடுவதற்கு, கழிவறைக்குச் செல்வதற்கு எல்லாம் குறிப்பிட்ட நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்க வேண்டும் என்றால் அதிக மதிப்பெண் வேண்டும். அதற்காகவே மாணவர்களிடம் கடுமை காட்டுவதாகப் பள்ளி நிர்வாகம் சொல்கிறது. பெற்றோரும் இதை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் சக மாணவர்களிடம் கூட சகஜமாகப் பேச முடியாமல் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். ஏதோ ஒரு நேரம் விரக்தியில் தற்கொலை முடிவை எடுத்து விடுகிறார்கள்.

உயிர் இருந்தால்தானே உயர் படிப்புக்குச் செல்ல முடியும்… கடுமையை விட்டு அன்பைக் காட்டுங்க…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x