Published : 22 Feb 2017 10:01 AM
Last Updated : 22 Feb 2017 10:01 AM

உலக மசாலா: உலகின் உன்னத மனிதர்களில் ஒருவர் ஜாவோ!

சீனாவின் ஷென்யாங் பகுதியில் துப்புரவுத் தொழிலாளராக வேலை செய்துவருகிறார் 56 வயது ஜாவோ யாங்ஜியு. கடந்த 30 ஆண்டுகளாகத் தன்னுடைய வருமானத்தில் பெரும் பகுதியை ஏழைக் குழந்தைகளின் கல்விக்குச் செலவு செய்து வருகிறார். அதிகாலை 4.30 மணிக்கு வேலைக்குச் செல்பவர், இரவு 9 மணிக்குத்தான் வீடு திரும்புகிறார். மாதம் 24 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார். இந்த வருமானத்தில் சீனாவில் வசதியாக வாழ முடியும். ஆனால் தன்னுடைய தேவைகளைக் குறைத்துக்கொண்டு, 37 ஏழைக் குழந்தைகளுக்குத் தொடர்ச்சியாகக் கல்வியளித்து வந்திருக்கிறார். இதற்காக ரூ.16.5 லட்சம் செலவு செய்திருக்கிறார். சமீபத்தில் தனக்கு இருந்த ஒரே ஒரு வீட்டையும் குழந்தைகளின் கல்விக்காக விற்றுவிட்டு, சிறிய வாடகை வீட்டுக்குக் குடிபெயர்ந்துவிட்டார். “1976-ம் ஆண்டு அப்பா இறந்து போனார். ஒவ்வொரு வேளையும் எங்களுக்கு உணவளிக்க அம்மா அவ்வளவு கஷ்டப்பட்டார். அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள்தான் பல நேரங்களில் என் அம்மாவுக்கு உதவி செய்து வந்தனர். அதனால்தான் நாங்கள் ஓரளவு பசியாறி, வாழ்க்கையை ஓட்டமுடிந்தது. நான் சம்பாதிக்கும்போது கஷ்டப்படும் ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவி செய்யவேண்டும் என்று அப்போதே முடிவு செய்துவிட்டேன். சமூகத்திலிருந்து நாங்கள் பெற்ற உதவியை இரண்டு மடங்காகத் திருப்பித் தருவதுதானே நியாயம்? அன்று எங்களுக்கு யாரும் உதவவில்லை என்றால் இந்நேரம் எப்படி இருந்திருப்போமோ தெரியாது. வீட்டைத் தவிர வேறு எந்த விலைமதிப்புமிக்கப் பொருளும் என்னிடம் இல்லை. இப்போது என் வாழ்நாள் வரை ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவ வேண்டும் என்பதுதான் லட்சியம். என்னுடைய உழைப்பால் இத்தனைக் குழந்தைகளின் வாழ்க்கை மேன்மையடைந்திருக்கிறது என்ற திருப்தியைத் தவிர உலகில் வேறு என்ன சந்தோஷம் இருந்துவிடமுடியும்?” என்று கேட்கிறார் ஜாவோ.

உலகின் உன்னத மனிதர்களில் ஒருவர் ஜாவோ!

இங்கிலாந்தைச் சேர்ந்த லேன் கோலோக்லி 40 வயதில் தன்னையே திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்! நாற்பது வயது வரை தான் நினைத்தபடி மிகச் சிறந்த மனிதர் ஒருவரைத் திருமணம் செய்துகொள்வதற்காகத் தேடிக்கொண்டேயிருந்தார். அப்படிப்பட்ட ஒருவர் கிடைக்காமல் போகவே, தன்னையே திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துவிட்டார். “இந்தக் காலகட்டத்தில் ஒரு குடும்ப அமைப்புக்குள் என்னால் பொருந்திப் போக முடியாது. அதனால் இனிமேல் இணை தேடுவதை விட்டுவிட்டேன். ஆனால் திருமண ஆடை, திருமண விழா போன்றவற்றில் எனக்கு ஆர்வம் அதிகம். அதற்காக என்னை நானே திருமணம் செய்யும் முடிவை எடுத்தேன். என்னைப் பற்றித் தெரியும் என்பதால் வீட்டிலுள்ளவர்களும் சந்தோஷமாகச் சம்மதித்தனர். பிறந்த நாளையும் திருமண விழாவையும் ஒன்றாக நடத்த இருக்கிறோம். அன்பும் ஆசிர்வாதமும் போதும் என்பதால் பரிசுப் பொருட்களைத் தவிர்க்கும்படி சொல்லியிருக்கிறேன். ஏப்ரலில் திருமணம் முடிந்தவுடன் ரோமுக்குத் தனியாக தேனிலவுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளேன்” என்கிறார் லேன் கோலாக்லி.

இருவர் இணைவதுதானே திருமணம்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x