Published : 25 Oct 2015 12:26 PM
Last Updated : 25 Oct 2015 12:26 PM

உலக மசாலா: உணவின்றி, தூக்கமின்றி 9 நாட்கள்

உணவின்றி, நீரின்றி, தூக்கம் இன்றி 9 நாட்கள் வாழ்ந்து காட்டியிருக்கிறார் ஜப்பானைச் சேர்ந்த புத்த துறவி ஒருவர். ஜப்பானில் உள்ள ஹியி மலை புனிதமாகக் கருதப்படுகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு இதுவரை 13 துறவிகளே சாப்பிடாமல், தூங்காமல், நீர் அருந்தாமல் கடுந்தவம் புரிந்து ஹியிமலையில் ஏறியிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் 41 வயது கோகென் காமாஹோரி.

தன்னுடைய தவக் காலத்தில் 1 லட்சம் முறை மந்திரங்களை உச்சரித்திருக்கிறார் கோகென் துறவி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாரத்தான் துறவிக்கான சடங்குகளை ஆரம்பித்திருக்கிறார். இது உலகிலேயே மிகக் கடுமையான சவால். மாரத்தான் துறவிகள் 1000 நாட்களில் 40 ஆயிரம் கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டும். ஹியி மலையில் 250 புனித இடங்களுக்குச் சென்று வழிபட்டு, இந்தத் தூரத்தைக் கடந்திருக்க வேண்டும். கோகென் துறவி 700 நாட்கள் இதுவரை நடந்து முடித்திருக்கிறார். இடையில் 9 நாட்கள் விரதம் இருந்திருக்கிறார். 2017ம் ஆண்டுக்குள் 300 நாட்கள் நடந்து முடிக்க திட்டமிட்டிருக்கிறார்.

சாப்பிடாமல், தூங்காமல் எப்படி ஒருவரால் இருக்க முடிகிறது!

அடுத்த ஆயிரம் ஆண்டுகளில் மனிதன் எப்படி மாறப் போகிறான் என்று விஞ்ஞானிகள் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கின்றனர். வரும் காலங்களில் பருவநிலை மாறுபாடு, செயற்கை நுண்ணறிவு மற்றும் மரபணு மாறுபாடு போன்ற காரணங்களால் மனிதர்களின் உடலில் மிகப் பெரிய மாறுதல்கள் நடக்க இருக்கின்றன என்கிறார்கள். பூமி வெப்பம் அடைவதால் மனிதர்களின் தோல் மிகக் கறுப்பாக மாறிவிடும். பருவநிலை மாறுபாட்டால் உயரமாகவும் ஒல்லியாகவும் மாறிவிடுவார்கள்.

மரபணு மாறுபாட்டால் கண்கள் சிவப்பாகவும் சூப்பர் மனிதனுக்குரிய திறமைகளும் கிடைக்கப் போகின்றன. மொத்தத்தில் மனிதன் இன்னும் புத்திசாலியாகவும், உறுதியாகவும், தோற்றப் பொலிவுடனும் காணப்படுவான் என்கிறார்கள். மனிதனின் ஆயுள் 120 ஆண்டுகள். மனிதர்களால் செய்ய இயலாத வேலைகளை எல்லாம் ரோபோக்கள் செய்துவிடும். வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஆலன் க்வான், ‘‘மனித முகம் மெதுவாக மாற்றம் அடையும். தோல் சுருங்குவது குறையும். மூளை பெரிதாகும். நேரான முக்கும் முன்னோக்கி நீண்டிருக்கும் பெரிய கண்களுமாக மனித முகம் மாறிவிடும்’’ என்கிறார்.

அட! எதிர்கால மனிதர்களின் தோற்றம் மட்டுமில்லாமல், சிந்தனைகளும் மாறினால் உலகம் அற்புதமாக இருக்கும்!

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் வீட்டு வாடகை மிக அதிகமாக இருக்கிறது. அதனால் இளம் தலைமுறையினர் பெரிய கண்டெய்னர்களைத் தங்கள் வசிப்பிடமாக மாற்றிக்கொள்கிறார்கள். அங்கு உள்ள ஒரு கிராமம் முழுவதும் கண்டெய்னர் வீடுகளாகவே இருக்கின்றன. 160 சதுர அடி கொண்ட உலோக கண்டெய்னர்களில் கண்ணாடி ஜன்னல்கள், மின்வசதி, குளியலறை போன்ற வசதிகள் செய்யப்படுகின்றன. இந்த கண்டெய்னர் குடியிருப்புகளுக்கு 39 ஆயிரம் ரூபாய் வாடகை.

சான் பிரான்சிஸ்கோவில் ஒரு படுக்கை அறை வீட்டு வாடகை 2.25 லட்சம் ரூபாய். நியு யார்க், லாஸ் ஏஞ்சல்ஸை விட அதிகம். வீட்டு வாடகையை விட மிகக் குறைவான வாடகை என்பதால் பலரும் கண்டெய்னர் வீடுகளை விரும்புகின்றனர். லூக் ஐஸ்மேனும் ஹெதர் ஸ்டீவர்ட்டும் இணைந்து கண்டெய்னர் வீடுகளை உருவாக்கினார்கள். ‘‘ராக்கெட் வேகத்தில் வாடகை அதிகரித்துச் செல்வதைக் கண்டு எரிச்சலில் உருவானதுதான் இந்த கண்டெய்னர் வீடு யோசனை. எங்கள் நண்பர்கள் கண்டெய்னர் வீடுகளைச் சொந்த மாக வாங்கிக்கொண்டு, நிரந்தரமாகவே குடியிருக்கஆரம்பித்து விட்டனர்.’’ என்கிறார் லூக்.

‘‘இந்த வீடு மட்டும் இல்லாவிட்டால் சான் பிரான்சிஸ்கோவில் வாடகை கொடுப்பதற்கு என்னிடம் பணம் இல்லை’’ என்கிறார் 23 வயது சாரா கார்டர்.

இங்கேயும் மாற்று வழிகளை யோசிக்கணும்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x