Published : 18 Dec 2016 12:14 PM
Last Updated : 18 Dec 2016 12:14 PM

உலக மசாலா: உடல் முழுவதும் பணம்

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 33 வயது மைக்கேல் அன்டில் டிலாமினி, தன்னை மூலிகை மருத்துவராகச் சொல்லிக்கொள்கிறார். உடை முழுவதும் பணத்தைக் குத்திக் கொண்டு வலம் வருகிறார். “எனக்குப் பன்னிரண்டு வயதில் இருந்தே மூதாதையர்களின் குரல்கள் கேட்க ஆரம்பித்தன. ஒவ்வொரு மூலிகை மரத்தையும் செடியையும் அவர்கள் தான் எனக்கு அறிமுகம் செய்து, எந்த நோய்க்கு எந்த மருந்து என்பதையும் தெளிவுபடுத்தினார்கள். ஆனாலும் அவர்களின் பேச்சை நான் பொருட் படுத்தவில்லை.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மூதாதையர்களின் குரல்கள் அளவுக்கு அதிகமாக என்னைத் தொந்தரவு செய்தன. அவர்களின் கனவுகளை என் மூலம் நிறைவேற்ற வேண்டும் என்று விரும்பினர். அவர்களின் வழிகாட்டுதல்களின்படி ஒவ்வொரு மூலிகையையும் அறிந்துகொண்டேன். அவற்றை வைத்து மருந்துகளைத் தயாரித்தேன். இப்படித்தான் நான் ஒரு மூலிகை மருத்துவராக மாறினேன். தொடக்கத்தில் களிம்புகளையும் மாத்திரைகளையும் விற்பனை செய்தேன். என்னுடைய மருந்துகள் வேலை செய்வதைக் கண்டு மக்கள் குவியத் தொடங்கினர். வருமானம் பெருகியது. களிம்புகள், மாத்திரைகள், மருந்துகள், புனித நீர், லக்கி சூப் என்று ஏராளமான மூலிகைப் பொருட்களை என் நிறுவனம் விற்பனை செய்துவருகிறது.

ஒரு நாளைக்கு சுமார் 1 லட்சம் ரூபாய் வரை வியாபாரம் நடைபெறுகிறது. என் செல்வச் செழிப்பைக் காட்டுவதற்காக நான் பணத்தை ஆடையாக அணியவில்லை. தங்கள் நோய் குணமான மக்கள், அன்புடன் என் ஆடைகளில் பணத்தைக் குத்திவிட்டனர். என்னால் மறுக்க முடியவில்லை. அவர்கள் செய்வதைத் தடுக்கும் பொருட்டே நான் பணத்தை உடல் முழுவதும் ஒட்டிக்கொண்டு பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறேன்” என்கிறார் மைக்கேல்.

சர்வதேச நிறுவனங்களில் இருந்து சாதாரண மனிதர்கள் வரை உயிர் காக்கும் மருந்துகளில்தான் விளையாடுகிறார்கள்…



தென்னாப்பிரிக்காவில் உள்ள சன்லேண்ட் பாவோபாப் மரத்தின் வயது சுமார் ஆயிரம் ஆண்டுகள். 47 மீட்டர் சுற்றளவு கொண்ட மிகப் பெரிய மரம். இதன் உயரம் 22 மீட்டர். ஆப்பிரிக்கக் கண்டத்திலேயே மிகப் பெரிய மரமான சன்லேண்ட் பாவோபாப் மரத்துக்குள் மதுபானக் கூடம் ஒன்று இயங்கி வந்தது. வெளியில் இருந்து பார்த்தால் மரமாகவும் உள்ளே மிகப் பெரிய கட்டிடமாகவும் காட்சியளித்தது.

இந்தக் கூடத்துக்குள் ஒருமுறை 60 பேர் அமர்ந்து, இசையை ரசித்தபடி மதுவைச் சுவைத்திருக்கிறார்கள். மரத்தில் இருக்கும் இயற்கையான துவாரங்களின் வழியே காற்று உள்ளே வரும். எப்பொழுதும் 22 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மரத்துக்குள் நிலவும். 1993-ம் ஆண்டு பாவோபாப் மரம் இயற்கையாகவே மடியும் நிலைக்குத் திரும்பியது.

அப்போதுதான் மரத்துக்குள் குடைந்து இந்த மதுபானக் கூடத்தை உருவாக்கினர். உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இந்த மரத்தைப் பார்ப்பதற்காக வருகிறார்கள். கடந்த ஆகஸ்ட் மாதம் பாவோபாப் மரத்தின் மூன்றில் ஒரு பகுதி சேதமடைந்துவிட்டது. அந்தப் பகுதியில் மட்டும் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. விரைவில் சேதமடைந்த பகுதியைச் செப்பனிட்டு, சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்குத் திட்டமிட்டு வருகிறார் இதன் உரிமையாளர்.

மரத்துக்குள் மதுபானக்கூடம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x