Published : 13 Sep 2016 09:34 AM
Last Updated : 13 Sep 2016 09:34 AM

உலக மசாலா: உடல் முழுதும் டாட்டூ!

அமெரிக்காவைச் சேர்ந்த 67 வயது ஷாரலட் குட்டன்பர்க் தலை முதல் பாதம் வரை டாட்டூ போட்டுக்கொண்டிருக்கிறார். 91.5 சதவிகிதம் உடலில் டாட்டூ போட்டதால், முதியவர்களுக்கான பெண்கள் பிரிவில் கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்! 2006-ம் ஆண்டு முதல் உடலில் டாட்டூ வரைவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இவரது கணவர் சார்லஸ் ஹெல்ம்க் சமீபத்தில் ஆண்களுக்கான பிரிவில் கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார். 1959-ம் ஆண்டில் ராணுவத்தில் பணியாற்றியபோது முதல் டாட்டூ போட்டுக்கொண்டார். இன்று இவரது உடலில் 93.75 சதவீதம் டாட்டூகள் நிறைந்துள்ளன. இன்னும் கூட உடலில் வண்ண மைகளால் வரைந்துகொள்ளும் திட்டத்தில் இருக்கிறார் ஷாரலட்.

கின்னஸ் தம்பதிக்கு வாழ்த்துகள்!

பிலிப்பைன்ஸைச் சேர்ந்த இளைஞர் எல்லோ அல்விசோ. 16 வயதில் இருந்தே மாடலிங் துறையில் இருந்து வருகிறார். முகத்தில் மிகச் சிறிய குறைகளால், முக்கியமான விளம்பரங்களில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்காமல் போவதாகக் கருதினார். 3 ஆண்டுகளுக்கு முன்பு, மூக்கிலும் தாடையிலும் முகச்சீர் அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடிவெடுத்தார். ஆனால் பணம் அதிகம் செலவு செய்ய விரும்பவில்லை. குறைவான கட்டணத்தில் யார் சிறப்பாகச் செய்வார்கள் என்று தேடியபோது, காஷேகா மகாலன்ஸ் என்ற செவிலியரின் அறிமுகம் கிடைத்தது.

அவர் இதுபோன்ற முகச் சீர் அறுவை சிகிச்சைகளைச் சர்வசாதாரணமாகச் செய்யக்கூடியவர். 700 ரூபாயில் மூக்கையும் தாடையையும் சரி செய்துவிடுவதாகச் சொன்னார். எல்லோ அல்விசோவும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். அறுவை சிகிச்சை முடிந்தது. எதிர்பார்த்ததைப் போலவே முகம் மேலும் அழகானதில் அல்விசோவுக்குத் திருப்தி. முன்பை விட அதிக அளவில் மாடலிங் வாய்ப்புகள் குவிந்தன. தன்னுடைய முகச் சீர் அறுவை சிகிச்சைதான் இதற்கெல்லாம் காரணம் என்று பெருமிதம் அடைந்தார் அல்விசோ. ஆனால் அந்த நிம்மதியும் சந்தோஷமும் இரண்டே ஆண்டுகளில் தொலைந்துபோனது. அவரது மூக்கும் தாடையும் உருமாற ஆரம்பித்தன. மாடலிங் வாய்ப்புகள் சட்டென்று நின்றன. வேறுவழியின்றி, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரிடம் சென்றார் அல்விசோ. தவறான சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. உடனே ஓர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அது முன்பு இருந்ததை விட நிலைமையை மோசமாக்கிவிட்டது. கடந்த ஆண்டு அல்விசோவின் சோகக் கதை பிலிப்பைன்ஸ் மீடியாக்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

“அறுவை சிகிச்சைக்கு முன்பே நான் நன்றாகத்தான் இருந்தேன். குறைந்த செலவில் சிகிச்சை அளிக்கிறேன் என்று காஷேகா மகாலன்ஸ் என் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டார். நான் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க முயற்சி செய்து வருகிறேன்’’ என்கிறார் அல்விசோ. இரவு விடுதிகளில் பேய் வேஷம் போட்டுச் சம்பாதிக்கிறார். கொஞ்சம் பணம் சேர்ந்தவுடன் முகத்தைச் சரி செய்வதற்கான சிகிச்சைக்குச் சென்று விடுகிறார்.

படித்தவர்களே இப்படி ஏமாறலாமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x