Published : 05 Mar 2017 11:57 AM
Last Updated : 05 Mar 2017 11:57 AM

உலக மசாலா: இவ்வளவு விலை கொடுத்து வாங்கும் ஒரு பாட்டில் காற்று மூலம் என்ன பலன்?

மெரிக்காவின் பென்சில்வேனியாவில் வசிக்கும் ஏஞ்சலா லான்ஸ், லில்லிகேடர் என்ற முதலையைச் செல்லப் பிராணியாக வளர்த்துவருகிறார். நான்கரை அடி நீளமுள்ள முதலைக்கு தினமும் பல் துலக்கி, மசாஜ் செய்துவிடுகிறார். விதவிதமான உடைகளை அணிவிக்கிறார். உடைகளுக்கு ஏற்ற நிறத்தில் நகங்களுக்கு நகப்பூச்சு போடுகிறார். குளிர் கண்ணாடி, கிரீடம், தொப்பி அணிவித்து விதவிதமாகப் புகைப்படங்கள் எடுக்கிறார். “பிறந்து இரண்டரை நாட்களில் இந்த லில்லியைத் தத்தெடுத்துக்கொண்டேன். என்ன செய்தாலும் கொஞ்சம் கூட எதிர்ப்புக் காட்டாமல் ஆர்வத்துடன் ஒத்துழைப்பு கொடுப்பாள். ஒரு குழந்தையைப் போல தோளில் சாய்த்து, தட்டிக் கொடுத்தால் சுகமாகத் தூங்குவாள். ஒரு முதலைக்கு இவ்வளவு புரிதல் இருக்குமா என்று ஆச்சரியமாக இருக்கிறது. இவளது புகைப்படங்களைப் பார்த்து, மாடலிங் வாய்ப்பும் வந்தது. போஸ்ட்கார்ட், நோட்புக்ஸ், கீ செயின் போன்றவற்றுக்கு லில்லி மாடலிங் செய்திருக்கிறாள். மாடலிங் மூலம் கிடைக்கும் வருமானம் முழுவதும் முதலைகளின் பராமரிப்புக்கு வழங்கி விடுகிறேன். நானும் லில்லியும் நடைப் பயிற்சி செய்யும்போது சுவாரசியமாக இருக்கும். பலரும் எங்களைக் கண்டதும் விலகி ஓடுவார்கள். நான் லில்லிக்கு முத்தம் கொடுப்பதைப் பார்த்த பிறகு தைரியமாக அருகில் வருவார்கள். மனிதர்களிடம் பழகுவதென்றால் லில்லிக்கு ஆர்வம் அதிகம். ஆனால் லில்லியால் மற்றவர்களுக்கோ, மற்றவர்களால் லில்லிக்கோ எதுவும் ஆபத்து நிகழ்ந்துவிடாமல் மிகவும் கவனமாகப் பார்த்துக்கொள்வேன். முதலைகளைப் பற்றிய புரிதல்களை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறேன். லில்லி 12 முதல் 15 அடி நீளம் வரை வளரக்கூடியவள். காட்டில் வசிப்பதைவிட என்னிடம் மிகவும் வசதியாக வாழ்கிறாள். இங்கே அவளுக்கு எதிரிகள் இல்லை. உணவு தேடி அலைய வேண்டியதில்லை. என் குடும்பத்தினர் அத்தனை பேரின் அன்பும் கிடைக்கிறது” என்கிறார் ஏஞ்சலா.

உலகிலேயே செல்ல முதலையாக வளர்த்தாலும் அது இயல்புபடி வாழ விடுவதுதானே நியாயம்!

லகிலேயே மிகவும் விலை மதிப்பு மிக்க காற்று சுவிட்சர்லாந்திலிருந்து விற்பனை செய்யப்படுகிறது. ஆல்ப்ஸ் மலைக்கு வந்து தூய்மையான காற்றை சுவாசிக்க முடியாதவர்களுக்காக, பாட்டிலில் காற்றை அடைத்து விற்பனை செய்து வருவதாகச் சொல்கிறார் ஜான் க்ரீன். “ஆல்ப்ஸ் மலையில் ரகசியமான இடத்திலிருந்து சுத்தமான காற்றைப் பிடிக்கிறோம். தரமான பாட்டிலில் அடைத்து, உலகம் முழுவதும் விற்பனை செய்கிறோம். ஒரு லிட்டர் காற்றின் விலை 11 ஆயிரம் ரூபாய். எல்லோராலும் அந்த விலைக்கு வாங்க முடியாது என்பதால் அரை லிட்டர் காற்றை 6,475 ரூபாய்க்கு கொடுக்கிறோம். 3 லிட்டர் காற்றை வாங்குபவர்களுக்கு விலையைக் குறைத்து, 16,500 ரூபாய்க்கு அளிக்கிறோம். பாட்டில் கைக்கு வந்தவுடன் சுவாசிப்பதைவிட, சில மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்து சுவாசித்தால் ஆல்ப்ஸ் காற்றை சுவாசிக்கும் அனுபவம் கிடைக்கும். இதில் 25% வருமானம் ஆப்பிரிக்காவின் சுத்தமான குடிநீர் திட்டத்துக்குச் செல்கிறது. விற்பனை மெதுவாக ஆரம்பித்தாலும் விரைவில் வேகம் பிடித்துவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது?” என்கிறார் ஜான் க்ரீன்.

இவ்வளவு விலை கொடுத்து வாங்கும் ஒரு பாட்டில் காற்று மூலம் என்ன பலன்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x