Published : 01 Dec 2015 10:34 AM
Last Updated : 01 Dec 2015 10:34 AM

உலக மசாலா: இளம்பெண் மிஜினோவுக்கு ஒரு பூச்செண்டு!

பிலிப்பைன்ஸைச் சேர்ந்த அயிசா மிஜினோ, கட்டிடக் கலைஞர். சமீபத்தில் புரட்சிகரமான ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருக்கிறார். பேட்டரிகளுக்குப் பதில் உப்பு நீரைப் பயன்படுத்தி விளக்குகளை எரியச் செய்கிறார். சுற்றுச் சூழலுக்குச் சாதகமான இந்தக் கண்டு பிடிப்பு, கடற்கரை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மிகச் சிறந்த விஷயமாக இருக்கப் போகிறது. ’’நான் பிலிப்பைன்ஸில் உள்ள பல்வேறு பழங்குடி மக்களிடமும் பழகியிருக்கிறேன். காளிங்காவில் உள்ள பட்பட் பழங்குடி மக்களிடமிருந்துதான் இந்தக் கண்டுபிடிப்புக் கான யோசனையைப் பெற்றுக்கொண்டேன்.

அவர்கள் வசிக்கும் பகுதிகளில் மின்சாரமே கிடையாது. ஒரு தம்ளர் நீரில் 2 ஸ்பூன் உப்பு, சில ரசாயனங்களைச் சேர்க்கும்போது, அதிலிருந்து மின்சாரம் உற்பத்தியாகிறது. அந்த மின்சாரத்திலிருந்து வெளிவரும் வெளிச்சம் 8 மணி நேரத்துக்குத் தாக்குப் பிடிக்கிறது. மண்ணெண்ணெய், எலக்ட்ரிக் விளக்குகளைவிட இது சிக்கனமானது. சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பானது. இது ஒரு பொருள் அல்ல. சமூக இயக்கம்’’ என்கிறார் மிஜினோ. உப்பு விளக்குக்கு சர்வதேச அங்கீகாரமும் கிடைத்திருக் கிறது.

பிலிப்பைன்ஸ், ஜப்பான், சிங்கப்பூர், தென்கொரியா போன்ற நாடுகளில் அறிவியல் கண்காட்சியில் கலந்துகொண்டு விருது களைப் பெற்றிருக்கிறது. இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மொபைல் போன்களுக்கும் யுஎஸ்பிக்கும் சார்ஜ் செய்துகொள்வதற்குப் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறார் மிஜினோ. பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டு, 2016-ம் ஆண்டு சந்தைக்கு வர இருக்கிறது. விலை அதிகமான, ஆபத்து விளைவிக்கும் மண்ணெண்ணெய் விளக்கிலிருந்து எளிய மக்கள் வெளியேறும் காலம் வந்துவிட்டது என்கிறார் மிஜினோ.

அற்புதமான கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருக்கும் இளம் பெண் மிஜினோவுக்கு ஒரு பூச்செண்டு!

அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார் தர்ஷன் கார்வாத். தன்னுடைய மாணவப் பருவத்தை, குப்பைகள் இல்லா பருவமாக மாற்ற முயற்சி செய்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளில் அவருடைய குப்பைகளை 2 பிளாஸ்டிக் பைகளில் அடக்கிவிடலாம்! துரித உணவகங்களில் சாப்பிடு வதில்லை. புதிய ஆடைகள் வாங்குவதில்லை. டாய்லெட் பேப்பரை உபயோகிப்பதில்லை. முதல் ஆண்டு 3.4 கிலோ குப்பைகள் சேர்ந்தன. அடுத்த ஆண்டு 2.7 கிலோ குப்பைகளாகக் குறைத்துவிட்டார். சராசரி அமெரிக்கர்கள் ஓர் ஆண்டில் சுமார் 680 கிலோ குப்பை களைக் கொட்டுகிறார்கள். ஆனால் 0.4 சதவீத குப்பைகளையே தர்ஷன் வெளியேற்றுகிறார்.

‘’ஒருமுறை வானொலியில் பிரிட்டனைச் சேர்ந்த தம்பதியர், குப்பைகள் இல்லா வாழ்க்கை நடத்துவதைப் பகிர்ந்துகொண்டனர். அன்று முதல் எனக்கும் அப்படி ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசை. நான் இந்தியாவில் இருக்கும்போதே குப்பைகளைக் குறைக்கும் முயற்சியில் இறங்கிவிட்டேன். மிச்சிகன் வந்த பிறகு கொள்கையை இன்னும் கடுமையாக்கிக்கொண்டேன். சிப்ஸ் பாக்கெட்டுகள், பால் பாட்டில் மூடிகள், பழங்களில் இருக்கும் ஸ்டிக்கர்கள், உடைந்த கண்ணாடிகள், பழைய துணிகள், தேவையற்ற மரச் சாமான்கள், ஸ்பூன், ஃபோர்க் போன்ற குப்பை கள்தான் அதிகம் என்பதால் அவற்றைக் குறைக்க ஆரம்பித் தேன். உணவகங்களுக்குச் செல்லும்போது நானே ஸ்பூனையும் ஃபோர்கையும் எடுத்துச் சென்றுவிடுவேன். சாப்பிட்ட பிறகு, சுத்தம் செய்து கொண்டு வந்துவிடுவேன்.

ஒருமுறை பயன்படுத்தும் தட்டுகளைப் பயன்படுத்த மாட்டேன். உணவை பார்சல் வாங்கினால் அதிகக் குப்பை சேரும் என்பதால் அதைத் தவிர்த்துவிடுவேன். இங்கே டாய்லெட் பேப்பர்தான் பயன்படுத்துவார்கள். நான் தண்ணீர் பயன்படுத்தி, பேப்பர் குப்பையில் இருந்து தப்பிவிட்டேன். காய்கள், பழங்களில் இருந்து கிடைக்கும் குப்பைகளை மட்கச் செய்து, செடிகளுக்கு உரமாக்கிவிடுவேன். ஜூஸை ஸ்ட்ராவில் குடிக்க மாட்டேன். மாமிசம் சாப்பிட்டால் பல் குத்தும் குச்சியைப் பயன்படுத்த வேண்டும் என்பதால், சைவ உணவுக்கு மாறிவிட்டேன். பயன்படுத்தாத துணிகள் மிகப் பெரிய குப்பை. அதனால் புதிய துணிகள் வாங்காமல், இருப்பதையே வைத்துக்கொண்டேன்.

இமெயிலில் கூட ஜங்க் மெயில்களை உடனுக்குடன் அப்புறப்படுத்தி விடுவேன். என் கொள்கைகளை நான் பிறர் மீது திணிக்க மாட்டேன். அதே சமயம் பெரிய பார்ட்டிகளில் குப்பைகளைக் குறைக்கச் சொல்லி வேண்டுகோள் விடுக்கவும் செய்வேன். காகித தம்ளர் பயன்படுத்தும் இடங்களுக்கு நானே ஒரு கண்ணாடி தம்ளரை எடுத்துச் சென்றுவிடுவேன். அமெரிக்காவில் ஓராண்டுக்கு 25 கோடி டன் குப்பைகள் சேருகின்றன. கொஞ்சம் கடினமான வாழ்க்கை என்றாலும் பூமியின் சுற்றுச் சூழலைக் கருத்தில் கொண்டு, குப்பைகள் இல்லா வாழ்க்கையை ஒவ்வொருவரும் வாழப் பழகிக்கொள்ளலாம்’’ என்கிறார் தர்ஷன்.

தனி மனிதரில் ஆரம்பித்தால் அது ஒரு பெரிய இயக்கமாக மாறிவிடும்… வெல்டன் தர்ஷன்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x