Published : 12 Feb 2016 11:26 AM
Last Updated : 12 Feb 2016 11:26 AM

உலக மசாலா: இல்லம் தேடி வரும் தேவாலயம்!

இங்கிலாந்தில் நகரும் தேவாலயம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

‘மெர்சி பஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் தேவாலயம் ஏழை, எளிய மக்களை நாடிச் செல்கிறது. பிரார்த்தனைகள் நடத்துகிறது. ஆசீர்வாதங்களை வழங்குகிறது. பாவ மன்னிப்புகளை அளிக்கிறது. சொற்பொழிவுகளை நிகழ்த்துகிறது. நகரும் தேவாலயத்துக்கான திட்டத்தை உருவாக்கியவர் ஃபாதர் ஃப்ரான்கி மல்க்ரூ. கடந்த கோடை காலத்தில் போப் பிரான்சிஸை சந்தித்தபோது அவருக்கு இந்தத் திட்டத்துக்கான யோசனை உதித்தது. ‘அர்ஜெண்டினாவில் ஏழைகள் வாழும் இடங்களில் போப் திறந்தவெளியில் பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்தினார். அப்போது தோன்றியதுதான் இந்த யோசனை. இன்று போப் ஆசியுடன் நகரும் தேவாலயத்தை இயக்கி வருகிறோம். மிக அற்புதமான அனுபவங்கள் கிடைத்து வருகின்றன.’ என்கிறார் ஃப்ரான்கி.

இல்லம் தேடி வரும் தேவாலயம்!

உலகப் புகழ்பெற்ற வான் காவின் ஓவியங்களை நிஜமாக மாற்றியிருக்கிறது சிகாகோ ஆர்ட் இன்ஸ்டிடியூட். தன்னுடைய படுக்கையறையை ஓவியமாகத் தீட்டியிருக்கிறார் வான் கா. ஓவியத்தில் இருக்கும் அறையை நிஜமாக உருவாக்கியிருக்கிறார்கள். 1888-ம் ஆண்டு தீட்டப்பட்ட இந்த ஓவியம் பளிச்சென்ற வண்ணங்களுடன் காணப்படுகிறது. ஓவியத்தில் இருக்கும் அதே கட்டில், நாற்காலி, படுக்கை விரிப்பு, சுவர் ஓவியங்கள், ஆணியில் தொங்கும் துணி, மேஜை, தண்ணீர்க் குடுவை, ஜன்னல், கதவு, தலையணை, சுவர், வண்ணங்கள் என்று அத்தனையும் அச்சு அசலாக உருவாக்கியிருக்கிறார்கள். வான் காவின் படுக்கை அறைகள் என்ற தலைப்பில் ஒரு கண்காட்சி நடைபெற இருக்கிறது. இதில் வான் காவின் படுக்கையறை தொடர்பான ஓவியங்கள், கடிதங்கள், புத்தகங்கள், படுக்கையறை என்று 36 படைப்புகள் இடம்பெற இருக்கின்றன. வான் கா ஓவியப் படுக்கையறையில் ஓர் இரவு தங்குவதற்கு 680 ரூபாய் கட்டணம். வான் கா படுக்கையறை ஓவியம் முப்பரிமாணத்தில் வரையப்பட்டிருக்கிறது. இந்த ஓவியத்தில் 3 ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. முதல் ஓவியம் தற்போது ஆம்ஸ்டர்டாம் வான் கா அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது ஓவியம் சிகாகோ ஆர்ட் இன்ஸ்டிடியூட்டில் இருக்கிறது. மூன்றாவது பாரிஸில் உள்ளது.

ஓவியம் நிஜமாவது ரொம்பவே சுவாரசியம்!

லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கும் 2 வயது பேகல் பூனைக்கு பிறக்கும்போதே கண் இமைகள் இல்லை. கண்ணீரும் சுரப்பதில்லை. உரிமையாளர் கரேன், பேகலுக்குப் பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்துவிட்டார். ஆனாலும் பலன் ஒன்றும் இல்லை. பேகலின் கண்களைப் பாதுகாப்பதற்கு தினமும் சொட்டு மருந்துகளை விட்டு வருகிறார், சன் க்ளாஸையும் அணிவிக்கிறார். விதவிதமாகப் புகைப்படங்கள் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். பேகல் கண்ணாடியுடன் சென்றாலும் கண்ணாடி இன்றி சென்றாலும் மக்களின் கவனத்தை ஈர்த்துவிடுகிறது. பேகலைப் போல மிகவும் அன்பாகவும் நளினமாகவும் நடந்துகொள்ளும் பூனையை இதுவரை தான் பார்த்ததில்லை என்கிறார் கரேன்.

ஏராளமானவர்களின் அன்பைச் சம்பாதித்திருக்கிறது இந்தக் கண்ணாடி பூனை!

கலிபோர்னியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணும் நியு யார்க்கைச் சேர்ந்த ஓர் ஆணும் முதல் முறை விமான நிலையத்தில் சந்தித்த உடனேயே திருமணம் செய்துகொண்டனர். இதை ‘இன்ஸ்டா திருமணம்’ என்கிறார்கள். எரிகாவும் ஆர்ட் வானும் இன்ஸ்டாகிராம் மூலம் நண்பர்களானார்கள். பல மாதங்கள் நீடித்த நட்பு ஒருகட்டத்தில் மெதுவாகத் தேய ஆரம்பித்தது. கடந்த மே மாதம் முற்றிலும் தொடர்பு விட்டுப் போனது. இருவரும் தங்கள் இன்ஸ்டாகிராம் கணக்குகளை மூடிவிட்டனர்.

புதிய கணக்குகளில் இயங்கி வந்தனர். சில மாதங்களில் இருவராலும் பிரிவைத் தாங்கிக்கொள்ளவே முடிய வில்லை. தொலைபேசி மூலம் பேசினார்கள். மீண்டும் பழைய இன்ஸ்டா கிராம் கணக்கைப் புதுப்பித்தனர். திருமணம் செய்துகொள்வது என்று முடிவு எடுத்தனர். நேரில் சந்திக்கும் அந்தக் கணமே, விமான நிலையத்திலேயே திருமணம் என்பதால், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஒன்டாரியோ விமான நிலையத்தில் எரிகாவைச் சந்தித்தார் வான். உடனே மோதிரம் மாற்றிக்கொண்டனர்.

‘‘உண்மையான அன்பு எத்தனை இடர்பாடுகளைச் சந்தித்தாலும் இறுதியில் வென்றுவிடும் என்பதற்கு நாங்களே உதாரணம்’’ என்கிறார் எரிகா.

உண்மைதான் எரிகா



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x