Published : 26 Jul 2016 09:15 AM
Last Updated : 26 Jul 2016 09:15 AM

உலக மசாலா: இலக்கை முடிக்காத ஊழியர்களுக்கு பாகற்காய் சாப்பிடும் தண்டனை!

சீனாவின் சோங்க்விங் பகுதியைச் சேர்ந்த லேஷங் டெகரேஷன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம், இலக்கை முடிக்க முடியாத ஊழியர்க ளுக்கு வாரம்தோறும் பாகற்காய் சாப்பிடும் தண்டனையை அளித்து வருகிறது. பாகற்காய் தண்டனை குறித்த படங்கள் இணையத்தில் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதுவரை 40 ஊழியர்கள் தாங்கள் பாகற்காய் சாப்பிடும் தண்டனையை அனுபவித்ததாகச் சொல்லியிருக்கிறார்கள். “பாகற்காயை மென்று விழுங்குவது போல ஒரு கொடுமையான செயல் வேறு இல்லை. சாப்பிட முடியாமல் துப்பினாலும் தண்டனை அதிகரிக்கும்” என்கிறார் ஓர் ஊழியர்.

“முன்பெல்லாம் உட்கார்ந்து எழுந்திருப்பது, அலுவலகத்தை 3 முறை வலம் வருவது போன்ற தண்டனைகள் வழங்கப்பட்டன. இந்த தண்டனைகளை ஊழியர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதனால் அதைவிட கொடூரமான தண்டனையை இப்பொழுது அளித்து வருகிறார்கள்” என்கிறார் ஒரு பெண் ஊழியர். “நாங்கள் ஊழியர்களை உற்சாகப்படுத்துவதற்காக எவ்வளவோ செய்திருக்கி றோம். ஆனால் திறமை இல்லாத ஊழியர்களால் உற்பத்தியையும் விற்பனையையும் அதிகரிக்க முடியவில்லை.

ஊக்கப்படுத்துவதைவிட தண்டனை அளிப்பது சிறந்த பலனைக் கொடுக்கும். சக ஊழியர்களுக்கு முன்பு பாகற்காய் சாப்பிடும்போது அவமானத்தில் ஒழுங்காக வேலை செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்” என்கிறார் நிறுவனத்தின் மேலாளர். ஆனால் நிர்வாகம் நினைத்தது போல பாகற்காய் தண்டனை பெரிய பலனைக் கொடுக்கவில்லை. 50% ஊழியர்கள் வேலையை விட்டுச் சென்றுவிட்டனர். தண்டனையை கேள்விப்படும் புதியவர்கள், வேலையில் சேர மறுக்கிறார்கள்.

நாகரிக காலத்தில் இப்படியும் ஒரு தண்டனையா?

அமெரிக்காவின் நியு ஜெர்சியில் வசிக்கிறார் 36 வயது காட்டியா பேஜ். Lipoedema என்ற நீண்ட நாள் குறைபாட்டின் காரணமாக, காட்டியாவின் கால்கள் அசாதாரணமான அளவுக்கு பெரி தாகிவிட்டன. அவரால் எழுந்து நிற்கவோ, நடக்கவோ இயலவில்லை. இப்படியே இருந்தால் விரைவில் காட்டியா மரணமடைந்துவிடக்கூடும் என்கிறார்கள். “நான் மிகவும் புத்திசாலி. ஆரோக்கியமான உணவு பழக்கம் கொண்டவள். அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டு, என் கால்கள் பருத்துவிட்டதாகச் சொல்லும்போது நோயைவிட வலியாக இருக்கிறது. இது ஒரு அரிய வகை குறைபாடு. கால்களில் மட்டும் அளவுக்கதிகமாக கொழுப்பு சுரக்கிறது. சின்ன வயதில் இருந்தே கால்கள் பெரிதாக ஆரம்பித்துவிட்டன.

ஆரம்பத்தில் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. 20 வயதுக்கு மேல் மருத்துவத்தை நாடினோம். பெரிய அளவில் மருத்துவமும் இல்லை, நோயும் குணமாகவில்லை. என் குறைபாட்டை அறிந்தும் ஒருவர் திருமணம் செய்துகொள்வதாகச் சொன்னார். ஓராண்டுக்கு முன்னால் என் பிரச்சினை திடீரென்று அதிகமாகிவிட்டது. ஒவ்வொரு காலும் 4 அடி அகலத்துக்கு பருத்துவிட்டன. நகரவே முடியவில்லை.

மருத்துவர்களைப் பார்த்தோம். தற்போது என் கால்கள் சற்று எடை குறைய ஆரம்பித்துள்ளன. விரைவில் நான் நடமாடும் அளவுக்கு முன்னேறிவிடுவேன். என் காதலரை மணப்பேன்” என்கிறார் காட்டியா பேஜ். “மிகவும் ஒத்துழைப்பு கொடுக்கிறார். மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறார். அதனால் நீண்ட காலம் ஆனாலும் பிரச்சினையை ஓரளவு சரி செய்ய வாய்ப்பிருக்கிறது” என்கிறார்கள் காட்டியாவின் மருத்துவர்கள்.

விரைவில் உங்கள் கால்கள் நடமாடட்டும் காட்டியா!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x