Published : 19 Aug 2015 10:34 AM
Last Updated : 19 Aug 2015 10:34 AM

உலக மசாலா: இறந்தவர்களுடன் செல்ஃபி போட்டி!

ரஷ்யாவில் இறந்த மனிதர் களுடன் செல்ஃபி எடுக்கும் போட்டி இணையத் தில் நடத்தப்பட்டது. மிகச் சிறந்த செஃல்பிக்கு 5 ஆயிரம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. உடனே ஆயிரக்கணக் கானோர் களத்தில் இறங்கிவிட்டனர். பாட்டி, தாத்தா, மாமா என்று இறந்த உடல்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். இறந்த உடல்களுக்கு அருகே சிரித்துக்கொண்டு செல்ஃபி எடுக்கிறோமே என்று ஒருவர் கூட யோசிக்கவில்லை. விபத்தில் இறந்த 13 வயது பெண்ணுடன் எடுத்த செல்ஃபி பரிசைத் தட்டிச் சென்றது. இறுதி அஞ்சலியில் செல்ஃபி எடுத்ததைப் பார்த்து, அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் அதிர்ந்து போனார்கள். காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

சே… மனிதப் பண்புகளைக் கூட மாற்றியமைத்து விடுகிறதே இந்த செல்ஃபி மோகம்…

அமெரிக்காவில் முடிதிருத்தும் பணியைச் செய்து வருகிறார் கோர்ட்னி ஹோம்ஸ். குழந்தைகளின் முடிகளை வெட்டுவதற்குப் பணம் பெற்றுக்கொள்வதில்லை. அதற்குப் பதிலாக, பார்லரில் இருக்கும் புத்தகங்களைப் படிக்கச் சொல்கிறார். குழந்தைகள் கதைகளைப் படித்துக் காட்டினால் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. படிக்கத் தெரியாத குழந்தைகளுக்குப் படிக்கவும் சொல்லித் தருகிறார் கோர்ட்னி. படிக்காத குழந்தைகளையும் படிப்பைப் பாதியில் நிறுத்திய குழந்தைகளையும் மீண்டும் பள்ளியில் சேர்க்கச் சொல்கிறார்.

‘’4 குழந்தைகளைத் தேடிச் சென்று முடி வெட்டினேன்... இப்பொழுது 20 குழந்தைகள் தானாகவே வந்து புத்தகம் படித்துக் காட்டுவதாகவும் இலவசமாக முடி வெட்டிவிடும்படியும் கேட்க ஆரம்பித்துவிட்டனர்’’ என்று தன்னுடைய திட்டம் வெற்றி பெற்றதை நினைத்து மகிழ்ச்சியடைகிறார் கோர்ட்னி. ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் படிப்பின் மூலமே தங்களை முன்னேற்றிக்கொள்ள இயலும். ஆனால் அவர்களிடம்தான் பள்ளி இடை நிறுத்தம் அதிகமாக இருக்கிறது. அதற்காகவே ’மீண்டும் பள்ளிக்குப் போகலாம்’ என்ற திட்டத்தை உருவாக்கி, செயல்படுத்தி வருகிறார்கள்.

அடடா! எவ்வளவு நல்ல காரியம் செய்யறீங்க கோர்ட்னி!

ஸ்காட்லாந்தில் உள்ள க்ருனே தீவில் கலங்கரை விளக்கத்தின் முன்னாள் பாதுகாவலர்கள் இருவரின் குடியிருப்புகள் இருக்கின்றன. இந்தத் தீவில் மனிதர்கள் நடமாட்டம் கிடையாது. சீல்களும் ஆட்டர்களும்தான் இந்தப் பகுதியில் வசிக்கின்றன. தீவு இப்பொழுது சுமார் 80 லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்கு வந்திருக்கிறது. இந்தத் தீவில் குடி தண்ணீர் கிடையாது. மின்சார வசதி கிடையாது. ஆனால் அருகில் உள்ள தீவுகளில் பள்ளி, அஞ்சலகம் போன்ற வசதிகள் இருக்கின்றன.

இந்தத் தீவுகளுக்கு 5 நிமிடங்களில் படகில் பயணம் செய்துவிடலாம். ஜாக்கி பால்ட்வின் 12 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய சேமிப்பை வைத்து, இந்தத் தீவை வாங்கினார். ஆனால் இதுவரை 5 முறையே இந்தத் தீவுக்கு வந்திருக்கிறார். குடும்பம், குழந்தைகள் என்று பொறுப்பு இருந்ததால் தீவில் தங்கவோ, வசதியை அதிகரிக்கவோ முடியவில்லை. வேறு யாராவது தீவை வாங்கினால், முன்னேற்றலாம் என்பதற்காக விற்க முடிவெடுத்ததாகச் சொல்கிறார் பால்ட்வின். இந்தப் பகுதியில் இருக்கும் 100 தீவுகளில் 17 தீவுகள் மனித நடமாட்டமின்றி இருக்கின்றன.

மிக விலை குறைந்த தீவாக இருக்கே!

சீனாவின் டோங்ஃபாங் சதுக்கத்தில் ஒருவர் கொட்டும் மழையில் முழங்காலிட்டு, இரண்டு கைகளிலும் இரண்டு அட்டைகளைப் பிடித்தபடி பரிதாபமாக நின்றுகொண்டிருந்தார். ஓர் அட்டையில் ‘மனைவியே, நீ வரும் வரை நான் முழங்காலிட்டு அமர்ந்திருப்பேன்’ என்றும் இன்னோர் அட்டையில் ‘என் மனைவி என்னைத் தவறாக நினைத்துவிட்டார்’ என்றும் தொலைபேசி எண்ணுடன் எழுதப்பட்டிருந்தது.

அந்த வழியே வருகிறவர்கள் எல்லாம் மனிதரைப் பார்த்துப் பரிதாபம் கொண்டனர். அட்டையில் குறிப்பிட்ட தொலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டனர். ஒவ்வொரு தடவையும் எதிர் முனையில் ஒரு பெண், கோபத்துடன் பேசி வைத்துவிட்டார். ’’எனக்கு யாராவது உதவி செய்ய நினைத்தால் என் மனைவியிடம் பேசுங்கள்’’ என்று கெஞ்சுகிறார் அந்த மனிதர். ஆனால் ஒருவரைக் கூட முழுமையாக விஷயத்தைச் சொல்ல அந்தப் பெண் அனுமதிக்கவில்லை.

என்ன கொடுமைங்க இது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x