Published : 28 Oct 2016 09:45 AM
Last Updated : 28 Oct 2016 09:45 AM

உலக மசாலா: இறந்தபிறகு என்ன உடை உடுத்தலாம்?

அழகான, நேர்த்தியான ஆடைகளை அணிவதற்கு மனிதர்கள் விரும்புகிறார்கள். வாழும்போது மட்டுமின்றி, இறந்த பிறகும் ஸ்டைலான ஆடைகளை அணியுங்கள் என்று சொல்கிறது பிரிட்டனைச் சேர்ந்த லிஸ்ட் ஆடை நிறுவனம். “பிரிட்டனில் வாழக்கூடிய 85% மக்கள், தாங்கள் இறக்கும்போது மிகச் சிறந்த ஆடைகளை அணிய வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதற்காக ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்யத் தயாராக இருக்கிறார்கள். அவர்களுக்காகவே, ‘ஓவர் மை டெட் பாடி’ என்ற பெயரில் பிரத்யேக ஆடை வகைகளை உருவாக்கியிருக்கிறோம். வாழும்போது ஆடைகளுக்காக எவ்வளவு மெனக்கெடுகிறோம்! இறந்த பிறகு ஒரே ஆடையில்தான் இருக்கப் போகிறோம். அதற்காகக் கொஞ்சம் அதிகம் செலவு செய்தால் ஒன்றும் தவறில்லை.

அந்த ஆடையையும் நீங்களே பார்த்து, வடிவமைத்து, வாங்கி வைத்துக்கொண்டால் திருப்தியாக மரணத்தைச் சந்திக்கலாம். ஆடைகள் மட்டுமின்றி, உள்ளாடைகள், தொப்பிகள், ஆபரணங்கள், செருப்புகள் போன்றவற்றையும் விற்பனை செய்து வருகிறோம். எங்களிடம் தற்போது 40 வகையான ஆடைகள் இருக்கின்றன. பிரபல மாடல்களுக்கு எங்கள் ஆடைகளை அணிவித்து, சவப்பெட்டியில் படுக்க வைத்து, விளம்பரப்படுத்தி வருகிறோம். நல்ல வரவேற்பு இருக்கிறது. இறந்த பிறகும் உங்கள் விருப்பம்போல எல்லாமே சரியாக நடப்பதற்கு நாங்கள் உதவி புரிகிறோம்” என்கிறார் லிஸ்ட் நிறுவனர்.

எங்கிருந்துதான் இப்படி எல்லாம் யோசனைகள் உதிக்குமோ?

உகாண்டாவின் வித்தியாசமான மனிதராக அறியப்படுகிறார் 47 வயது காட்ஃப்ரே பாகுமா. உருவம் சிறுத்து, உயரம் குறைந்து, கன்னம் வீங்கி, விநோதமான தலையுடன் காட்சியளிக்கிறார். வாழ்நாள் முழுவதும் சக மனிதர்களால் வெறுக்கப்பட்டவர், இன்று உகாண்டாவின் பாப் ஸ்டாராக நேசிக்கப்படுகிறார். “நான் பிறந்தபோதே என் உருவத்தைக் கண்டு, அம்மா பிரிந்து சென்றுவிட்டார். பாட்டிதான் என்னை வளர்த்தார். என்னுடன் யாரும் பேச மாட்டார்கள். தெருவில் நடந்தால் விநோதமாகப் பார்ப்பார்கள். இசை மீது எனக்கு ஆர்வம் அதிகம். நன்றாகப் பாடுவேன். என் திறமையைப் பார்த்தவர்கள், எனக்கு வாய்ப்பு கொடுத்தார்கள். பல நிகழ்ச்சிகளுக்குக் கூப்பிட ஆரம்பித்தார்கள். எனக்கு வருமானமும் வர ஆரம்பித்தது.

என்னை ஒரு பெண் திருமணம் செய்துகொண்டார். 2 குழந்தைகள் பிறந்த பிறகு அவரும் சென்றுவிட்டார். மீண்டும் ஒரு நல்ல மனம் படைத்த பெண் என் மனைவியானார். 6 குழந்தைகள் பிறந்தனர். அவற்றில் ஒரு பெண் என்னைப் போலவே குறைபாட்டுடன் பிறந்திருக்கிறாள். என் குறைபாடு குழந்தைகளையும் பாதிக்குமோ என்று எனக்கு அச்சமாக இருந்தது. ஒரு மருத்துவர் உதவ முன்வந்தார். பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன.

என் குழந்தைகளுக்கு இந்தப் பாதிப்பு வருவதற்கு வாய்ப்பில்லை என்றும் மருந்துகளை எடுத்துக்கொண்டால், எனக்கும் பாதிப்பில்லை என்றும் கூறிவிட்டார். நிம்மதியாக இருக்கிறது. வாழ்க்கையில் இசை மட்டும் இல்லை என்றால், என்னை ஒரு மனிதனாக இந்த உலகம் பார்த்திருக்காது” என்கிறார் காட்ஃப்ரே பாகுமா. “காட்ஃப்ரேயின் உருவம் கவரக்கூடியதாக இல்லாமல் இருக்கலாம். அவருக்கு மிக நல்ல மனம் இருக்கிறது’’ என்கிறார் அவரது மனைவி நமன்டே கேட். யூடியூப்பில் காட்ஃப்ரே பாகுமாவின் இசையை இதுவரை 30 லட்சம் பேர் கேட்டிருக்கிறார்கள்.

நீண்ட காலம் வாழட்டும் உகாண்டாவின் பாப் ஸ்டார்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x