Published : 09 Oct 2016 11:39 AM
Last Updated : 09 Oct 2016 11:39 AM

உலக மசாலா: இரவிலும் ஒளிரும் சாலை!

போலந்து நாட்டின் வட பகுதியில் இருக்கிறது லிட்ஸ்பார்க் வார்மின்ஸ்கி நகரம். சமீபத்தில் புதுமையான சாலையைப் போட்டு, உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. சைக்கிளில் செல்பவர்களுக்கான சிறப்பான பாதை இது. இரவு நேரத்திலும் பளபளவென்று இந்தச் சாலை ஜொலிக்கிறது. சூரிய சக்தி மூலம் ஒளிரக்கூடிய சாலையை போலந்து கட்டிட நிறுவனம் ஒன்று, விஞ்ஞானிகளை வைத்து உருவாக்கியிருக்கிறது. செயற்கை இழைகள் மூலம் உருவாக்கப்பட்ட இந்தச் சாலை, சூரியனில் இருந்து சக்தியை எடுத்துக்கொள்கிறது. பகல் முழுவதும் சூரிய சக்தியைக் கிரகித்தால், 10 மணி நேரம் சாலை ஒளிரும். அதனால் இரவும் முழுவதும் சாலை பளபளவென்று காட்சியளிக்கிறது. ஒளிரும் சாலையால் சைக்கிளில் செல்பவர்கள், இருளிலும் எளிதாகச் செல்ல முடிகிறது. ரசனையோடு பயணிக்க முடிகிறது.

இரவிலும் ஒளிரும் சாலை!

பிரிட்டனில் வசிக்கும் ஆன்டி போப், காவல்துறையில் பணிபுரிகிறார். இவரை எல்லோரும் ‘மெமரி போலீஸ்’ என்று அழைக்கிறார்கள். குற்றவாளிகளின் புகைப்படங்களை ஒருமுறை பார்த்தால், அப்படியே நினைவில் வைத்துக்கொள்கிறார். கடந்த 4 ஆண்டுகளில் 850 குற்றவாளிகளின் புகைப்படங்களை நினைவில் வைத்துப் பாதுகாத்து வருகிறார். கம்ப்யூட்டரில் பதிவாகியிருக்கும் குற்றவாளிகள், சந்தேகப்படும் நபர்களைப் பார்க்கிறார். அவர்களைப் பற்றிய குறிப்புகளைப் படிக்கிறார். நான்கு ஆண்டுகளில் இவரது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து எந்த ஒரு குற்றவாளியின் புகைப்படத்தைக் காட்டினாலும் சட்டென்று அனைத்து தகவல்களையும் சொல்லிவிடுகிறார். ‘என்னால் எப்படி நினைவில் வைத்துக்கொள்ள முடிகிறது என்பதை விளக்க முடியவில்லை. ஆனால் படமாகவோ, தகவலாகவோ, குற்றமாகவோ எப்படியோ ஒருவிதத்தில் அவர்களைப் பற்றிய விஷயங்கள் பதிவாகிவிடுகின்றன. சில ஆண்டுகளுக்குப் பிறகு முடி அலங்காரத்தை மாற்றினாலும்கூட என்னால் எளிதில் கண்டுபிடித்துவிட முடிகிறது’ என்கிறார் ஆன்டி போப்.

மெமரி போலீஸ்!

ங்கிலாந்து துறைமுகத்தில் இருந்து குளிரூட்டப்பட்ட லாரி ஒன்று, உருளைக்கிழங்கு சிப்ஸ்களை ஏற்றிக்கொண்டு கிளம்பியது. நீண்ட பயணத்துக்குப் பிறகு, ஓட்டுனர் சரக்குகளை இறக்குவதற்காகக் கதவைத் திறந்தார். அதிர்ந்து போனார். லாரிக்குள் 15 பேர், ஸ்லீப்பிங் பேக் உள்ளே தூங்கிக்கொண்டிருந்தனர். உடனே போலீஸுக்குத் தகவல் கொடுத்தார் ஓட்டுனர். குளிர்சாதனப் பெட்டியில் இருந்து ஒவ்வொருவரையும் வெளியே கொண்டு வந்தனர். 2 குழந்தைகளும் அதில் இருந்தனர். ‘அனுமதியின்றி, அகதியாக இங்கிலாந்துக்குள் இவர்கள் நுழைந்திருக்கிறார்கள். இன்னும் சற்றுத் தாமதம் ஆகியிருந்தால் இவர்களை உயிருடன் மீட்டிருக்க முடியாது. ஆபத்தான வழியை நாடியிருக்கிறார்கள். 5 பேருக்கு இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தங்க இடமும் மருத்துவமும் கொடுத்து வருகிறோம். உடல் தேறிய பிறகு விசாரணை நடத்துவோம்’ என்கிறார் ஓர் அதிகாரி.

அகதிகளின் வாழ்க்கை கொடுமையாக இருக்கிறது…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x