Published : 27 Nov 2015 10:09 AM
Last Updated : 27 Nov 2015 10:09 AM

உலக மசாலா: இரட்டை அந்நியர்கள்!

லகத்தில் ஏழு பேர் ஒரே மாதிரி இருப்பார்கள் என்று சொல்வார்கள். அயர்லாந்தைச் சேர்ந்த நியாம் ஜியானே ’இரட்டை அந்நியர்கள்’ என்ற இணையதளத்தை நடத்தி வருகிறார். ஒருவரைப் போல இருக்கும் இன்னொருவரைக் கண்டுபிடித்துக் கொடுக்கும் வேலையை இவரது இணையதளம் செய்து வருகிறது. இதற்காக கட்டணமும் வசூலிக்கிறார். நியாம் தன்னைப் போல இருக்கும் ஒருவரை 28 நாட்களுக்குள் கண்டுபிடித்துவிட்டார். கரென் பிரனிகன் என்பவர் நியாம் வசிக்கும் இடத்தில் இருந்து ஒரு மணி நேரப் பயணம் செய்யும் தூரத்தில்தான் இருந்தார். இருவரும் நேரில் சந்தித்தனர். ‘’என்னால் நம்பவே முடியவில்லை. அச்சு அசலாக என்னைப் போலவே இருந்தார் கரென். சின்னச் சின்ன அசைவுகள் கூட எங்கள் இருவருக்கும் ஒரே மாதிரி இருந்ததைக் கண்டு எனக்கு ஆனந்த அதிர்ச்சி. ஒரே மாதிரி உடை அணிந்து, தலை வாரி புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். என் வாழ்நாளில் அருமையான தருணம் அது.

என்னைப் போல வேறு யாராவது இருக்கிறார்களா என்று தேட ஆரம்பித்தேன். ஒரே வாரத்தில் லூயிசா கைஸார்டி கிடைத்தார். இருவரும் நேரில் சந்தித்தோம். லூயிசாவின் அம்மாவுக்கு என்னையும் லூயிசாவையும் தூரத்தில் இருந்து பார்க்கும்போது வித்தியாசமே தெரியவில்லை என்றார். நான் செய்யும் பல செயல்களை லூயிசாவும் செய்தது கண்டு அசந்து போனேன். இருவரும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். ஒருவேளை 7 பேர் உண்மையிலேயே ஒரே மாதிரியாக இருப்பார்களோ என்ற நம்பிக்கை வந்தது. மீண்டும் தேடினேன். சில வாரங்களுக்குப் பிறகு ஐரேன் ஆடம்ஸைக் கண்டுபிடித்தேன். அவரும் அயர்லாந்தில்தான் வசிக்கிறார்.

அவருடனும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டேன். இப்போது ஒரே உருவத்தில் 4 பேர் ஒரே நாட்டிலேயே வசிக்கிறோம் என்பது எவ்வளவு அதிசயமானது! எங்களைப் போல இருக்கும் இன்னும் 3 பேரை விரைவில் கண்டுபிடித்துவிடுவேன் என்ற நம்பிக்கை அதிகமாகிவிட்டது. எங்கோ பிறந்த நாங்கள் நால்வரும் சகோதரிகள் போல இருக்கிறோம். ஆனால் என் தங்கை என்னைப் போல இல்லை. நியாம் குடும்பத்தில் இன்னும் 3 பேர் வந்து சேர்ந்துவிட்டால் என்னைப் போல மகிழ்ச்சியானவள் யாரும் இருக்க முடியாது’’ என்கிறார் நியாம்.

அட! ரொம்பவே ஆச்சரியமா இருக்கு!

மெக்ஸிகோவைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரரும் பாதிரியாருமான செர்ஜியோ பெனிடெஸ் வித்தியாசமானவர். 1945-ம் ஆண்டு பிறந்த பெனிடெஸ், ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லத்தை நடத்தி வருகிறார். ஒரு கட்டத்தில் இல்லத்தைத் தொடர்ந்து நடத்துவதற்குப் பணம் இல்லை. அதனால் தன்னுடைய சிறிய வயது விளையாட்டான குத்துச் சண்டையை மீண்டும் விளையாட ஆரம்பித்தார். பகலில் பாதிரியாராகவும் இரவில் விளையாட்டு வீரராகவும் வலம் வந்தார். தானே வடிவமைத்த மஞ்சளும் சிவப்பும் கொண்ட முகமூடியை அணிந்துகொண்டார். தன்னுடைய பெயரை ஃப்ரே டோர்மெண்டா என்று மாற்றிக்கொண்டார். 17 குழந்தைகளில் ஒருவராகப் பிறந்த பெனிடெஸ், சின்ன வயதில் போதைப் பொருளுக்கு அடிமையானவர். பிறகு அவருக்கு குத்துச் சண்டையில் ஆர்வம் வந்தது. அதன் பிறகு பாதிரியாராக மாறினார். 270 குழந்தைகள் கொண்ட ஒரு காப்பகத்தையும் நடத்தி வந்தார். ஏகப்பட்ட பிரச்சினைகள் வந்தன. தொடர்ந்து காப்பகத்தை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. காப்பகத்தை தேவாலயத்தில் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொண்டனர். பணம் திரட்டுவதற்காக மீண்டும் குத்துச் சண்டை வீரராகக் களம் இறங்கினார். போட்டிகளில் பங்கேற்றார். ஆரம்பத்தில் குறைவான நிதியே கிடைத்தது. பிறகு அவருடைய வித்தியாசமான முகமூடி அணிந்த விளையாட்டைக் காண ஏராளமானவர்கள் வர ஆரம்பித்தனர். நிதியும் சேர்ந்தது. பெனிடெஸ் மீது தேவாலயத்துக்கு நம்பிக்கை வந்தது. மீண்டும் குழந்தைகள் காப்பகத்தை அவரிடம் ஒப்படைத்தனர். 23 ஆண்டுகள் காப்பகத்துக்காக முகமூடி அணிந்த குத்துச் சண்டை வீரராக இருந்த பெனிடெஸ், 2011-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். 2006-ம் ஆண்டு நாச்சோ லிபர் என்ற திரைப்படம், இவரது தாக்கத்தால் எடுக்கப்பட்டது.

வித்தியாசமானவர்!

ரியோ டி ஜெனிரோவில் இருக்கும் பெண்கள் சிறைச் சாலையில் ஒவ்வோர் ஆண்டும் அழகிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் விதவிதமான ஆடைகளை அணிந்து, கேட் வாக் செய்தார்கள் குற்றவாளிகள். 27 வயது மிஷெலி நெரி ராஞ்செல் என்பவர் அழகிப் பட்டம் வென்றார். இவர் கொள்ளை மற்றும் சில குற்றங்களுக்காக 39 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றவர். சிறையில் இருக்கும் பெண்களுக்குத் தன்னம்பிக்கை அளிப்பதற்காக இந்தப் போட்டி நடத்தப்படுகிறது என்கிறார்கள் சிறை நிர்வாகத்தினர்.

நல்ல குணமே அழகு என்பதை இவர்கள் உணர்வார்களா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x