Published : 21 Mar 2017 10:34 AM
Last Updated : 21 Mar 2017 10:34 AM

உலக மசாலா: இனி அக்கம்பக்கம் பார்த்துப் பேச வேண்டியதில்லை!

ஏராளமானவர்கள் அமர்ந்திருக்கும் அலுவலகத்தில் அலைபேசியில் பேசுவது பேசுபவர்களுக்கும் அருகில் இருப்பவர்களுக்கும் சங்கடமான விஷயம். இதற்காக இருக்கையை விட்டுத் தனியாக ஓரிடம் தேடிச் சென்று பேசிவிட்டு வரவேண்டியிருக்கிறது. ஒரே நாளில் அடுத்தடுத்து அழைப்புகள் வந்தால் எழுந்து செல்வதும் கடினம். இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக ஹஸ்மி மாஸ்க் உருவாக்கப்பட்டிருக்கிறது. மாஸ்க் என்றாலும் இது முகத்தை மூடாது, வாயை மட்டும் மூடும். இதை மாட்டிக்கொண்டு உரையாடினால் அருகில் இருப்பவர்களுக்குக் கூட சிறிதும் கேட்காது. எந்தவிதத் தயக்கமும் இன்றி உரையாடலாம். போனிலிருந்து ப்ளூடூத் மூலம் காதுகளுக்கு குரல் கடத்தப்படுகிறது. பல்வேறு நிறங்களில் இந்த ஹஷ்மி மாஸ்க் கிடைக்கிறது. காற்று, அலை, சாரல், பறவைகளின் கூக்குரல் போன்ற பல்வேறு மெல்லிய ஒலிகளோடு உங்கள் குரலும் பயணிக்கும். எதிராளிக்கு சுவாரசியத்தை அளிக்கும். ’உலகின் முதல் மொபைல் போன் குரலுக்கான முகமூடி’ இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்கு வருகிறது. விலை 13 ஆயிரம் ரூபாய்.

இனி அக்கம்பக்கம் பார்த்துப் பேச வேண்டியதில்லை!

இங்கிலாந்தைச் சேர்ந்த ஜெரால்டின் ஃபாஸ்டர் 72 வயதில் நாடு நாடாகச் சுற்றி வருகிறார். ஓராண்டில் சில மாதங்களே மகன்கள், பேரக்குழந்தைகளுடன் வசிக்கிறார். மீதிக் காலம் முழுவதும் ஒரு பையை முதுகில் மாட்டிக்கொண்டு, தனியாக பல்வேறு நாடுகளுக்குச் சென்றுவருகிறார். “சின்ன வயதில் ஸ்பெயினுக்கு அழைத்துச் சென்றார் அப்பா. அந்த நாடு எனக்கு மிகவும் பிடித்துப் போனது. 19 வயதில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்துகொண்டு, ஸ்பெயினுக்கு வந்தேன். மூன்று குழந்தைகளைக் கவனித்துக்கொண்டு சலூனையும் நடத்தினேன். 12 ஆண்டுகளில் என் கணவர் பிரிந்து சென்றார். குழந்தைகளுடன் இங்கிலாந்து வந்து, 3 சலூன்களை ஆரம்பித்தேன். வீடு, கடை, குழந்தை வளர்ப்பு என்று இருந்தாலும் சின்ன ஓய்வு கிடைத்தால் என் அக்கா, இளைய மகனுடன் அருகில் இருக்கும் நாடுகளுக்குச் சென்று திரும்புவேன். என்னுடைய நாற்பதாவது வயதில் உலகம் சுற்றும் தோழி கிடைத்தாள். நாங்கள் இருவரும் தாய்லாந்து சென்று திரும்பினோம். அவள் திருமணம் செய்துகொண்ட பிறகு, நான் தனியாகப் பயணங்களை மேற்கொண்டு வருகிறேன். ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஆசியா கண்டங்களில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறேன். என்னிடம் ஒரே ஒரு பைதான் உண்டு. அதில் லேப்டாப், கேமரா, சில உடைகள் மட்டும் இருக்கும். பட்ஜெட் கட்டணத்தில் இருக்கும் சிறந்த விடுதிகளில் மட்டுமே தங்குவேன். எந்த நாட்டுக்குச் சென்றாலும் சாலைகளில் விற்கப்படும் உணவுகளைத்தான் சாப்பிடுவேன். பெரும்பாலும் பேருந்துகளைத்தான் பயன்படுத்துவேன். இரவில் பாதுகாப்பு கருதி பேருந்துகளில் பயணிக்க மாட்டேன். குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்துவிட்டேன். மீதிக் காலத்தை என் விருப்பப்படிதான் வாழ்வேன். வாழ்க்கை ஒருமுறைதான். அதனால் ஓய்வெடுக்கும் எண்ணமில்லை” என்கிறார் ஜெரால்டின்.

72 வயதில் கலக்குங்கம்மா!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x