Published : 17 Sep 2015 12:23 PM
Last Updated : 17 Sep 2015 12:23 PM

உலக மசாலா: இனிமேலாவது திருந்துவார்களா?

சவப்பெட்டிக்குள் இறந்த கணவன். அருகில் மனைவியும் குழந்தைகளும் சிரித்தபடி வெளியான புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியடையாதவர்களே இருக்க முடியாது. அமெரிக்காவின் சின்சினாட்டியில் வசித்த 26 வயது மைக் செட்டில்ஸ் ஹெராயின் போதைப் பொருளை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டதால் மரணம் அடைந்துவிட்டார். அவரது மனைவி இவா ஹாலண்ட், “இந்தப் புகைப்படம் உங்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தலாம். என்னை மனிதாபிமானம் அற்றவளாகக் காட்டலாம். மைக்கின் கதையைக் கேட்டுவிட்டு, முடிவு செய்துகொள்ளுங்கள். மைக்கை சிறிய வயதில் இருந்தே காதலித்து வருகிறேன். திருமணம் மூலம் அழகான இரண்டு குழந்தைகள். ஹெராயினுக்கு மைக் அடிமையான விஷயம் எனக்கு தாமதமாகத்தான் தெரிந்தது. எவ்வளவோ பேசிப் பார்த்தேன். கெஞ்சிப் பார்த்தேன். அழுது பார்த்தேன். ஒருகட்டத்தில் உடல்நலம் மோசமாக பாதிக்கப்பட்டு, மறுவாழ்வு மையத்தில் 4 மாதங்கள் சிகிச்சை பெற்றுத் திரும்பினார். மகிழ்ச்சியான வாழ்க்கை திரும்பக் கிடைத்துவிட்டது என்று நினைத்தேன். ஆனால் சிறிது காலத்தில் மீண்டும் ஹெராயினை நாடிவிட்டார். எங்களைப் பிரிந்திருந்த மைக்கால் ஹெராயினைப் பிரிந்திருக்க முடியவில்லை. அளவுக்கு அதிகமான ஹெராயினை எடுத்துக்கொண்டு மனைவியையும் குழந்தைகளையும் தவிக்கவிட்டுச் சென்றுவிட்டார். ஹெராயினுக்கு என் கணவர் பலி ஆனார் என்று நான் எழுதினால் ஆயிரம் செய்திகளில் ஒன்றாக மாறியிருக்கும். எனக்கும் என் குழந்தைகளுக்கும் ஏற்பட்ட நிலை இன்னொரு குடும்பத்துக்கு ஏற்படக்கூடாது என்று முடிவு செய்தேன். விழிப்புணர்வு ஏற்படுத்தவே துயரத்தை நெஞ்சில் சுமந்துகொண்டு, கணவனின் உடலோடு சிரித்தபடி புகைப்படம் எடுத்து வெளியிட்டேன். நான் நினைத்தது போல மிகப் பெரிய தாக்கத்தை இந்தப் புகைப்படம் ஏற்படுத்திவிட்டது. நிறைய பேர் என்னிடம் ஆலோசனை கேட்கிறார்கள். எப்படியாவது தங்கள் கணவரைக் காப்பாற்றிவிடத் துடிக்கிறார்கள். சிலர் போதை பழக்கத்தை விட்டுவிடுவதாகக் கூறியிருக்கிறார்கள். எனக்கு இது போதும். மைக்கின் ஆன்மா என்னைப் புரிந்துகொள்ளும்” என்கிறார்.

இனிமேலாவது திருந்துவார்களா?

பிரிட்டனில் வசிக்கிறார் 79 வயது பால் ராக்ஹம். மிகப் பெரிய பணக்கார விவசாயி. கடந்த 25 ஆண்டுகளாக டிராக்டர்களை சேகரித்து வருகிறார். அவரது அருங்காட்சியகத்தில் 230 டிராக்டர்கள் இருக்கின்றன. இவற்றின் இன்றைய மதிப்பு 20 கோடியே 40 லட்சம் ரூபாய். “எனக்கு இருக்கும் ஆர்வம் என் குடும்பத்தினருக்கு இல்லை. அதனால் இந்த டிராக்டர்களை விற்பனை செய்ய முடிவெடுத் திருக்கிறேன். மீதி வாழ்க்கையை சுவாரசியப்படுத்த வேறுவித பொழுதுபோக்குகளில் இறங்கப் போகிறேன்” என்கிறார் பால். உலகின் பல பகுதிகளில் இருந்தும் வரவழைக்கப்பட்ட டிராக்டர்கள், இன்றும் புத்தம் புதிதாகக் காட்சியளிக்கின்றன. 1916 முதல் 1970-ம் ஆண்டு வரை உள்ள டிராக்டர்கள் இங்கே இருக்கின்றன.

பொழுதுபோக்குகள் பலவிதம்!

மத்திய அமெரிக்க நாடான கோஸ்டா ரிகாவில் ஆலிவ் ரிட்லி ஆமைகள் அதிகம் வசிக்கின்றன. செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் அதிக அளவில் ஆமைகள் கரைக்கு வந்து முட்டைகளை இட்டுச் செல்கின்றன. இந்த நிகழ்வை கோஸ்டா ரிகா அரசாங்கம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விதத்தில் பயன்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகள் அளவுக்கு அதிகமாகக் குவிந்துவிட்டனர். ஆனால் பாதுகாவலர்களோ மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. முட்டைகளை இடுவதற்காகக் கரைக்கு ஒதுங்கிய ஆமைகளுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். சிலர் ஆமைகளின் மீது ஏறி நின்றும், ஆமைகள் மீது அமர்ந்தும் புகைப்படம் எடுத்தார்கள். அளவுக்கு அதிகமான கூட்டமும் கூச்சலும், ப்ளாஷ் வெளிச்சங்களும் ஆமைகள் முட்டை இட விடாமல் மீண்டும் கடலுக்குச் செல்ல வைத்தன. கோஸ்டா ரிகா சுற்றுச்சூழல் அமைப்பினர் இதற்குக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ரிட்லி ஆமைகள் உலகம் முழுவதும் பாதுகாக்கப்பட உயிரினமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கோஸ்டா ரிகா அரசாங்கமோ ரிட்லி ஆமைகள் இடக்கூடிய முதல் 3 நாள் முட்டைகளை அதிகாரப்பூர்வமாகவே விற்பனை செய்து வருகிறது.

சந்ததியைப் பெருக்க வரும் ஆமைகளை இப்படிச் சங்கடப்படுத்தலாமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x