Published : 18 Mar 2017 11:06 AM
Last Updated : 18 Mar 2017 11:06 AM

உலக மசாலா: இதை வைத்து என்னதான் செய்வது?

சீனாவைச் சேர்ந்த லியு ஃபெய், விண்கல் ஒன்றைப் பரிசாக அளித்து, காதலியிடம் திருமணக் கோரிக்கை வைத்திருக்கிறார். வழக்கத்துக்கு மாறான இந்தத் திருமணக் கோரிக்கை சீனா முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. 95 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 33 டன் எடை கொண்ட ராட்சத விண்கல்லைத்தான் பரிசாக அளித்திருக்கிறார்! கடந்த ஆண்டு லியு ஃபெய்யும் அவரது தோழியும் பழம்பெருமை வாய்ந்த கஷ்கர் நகருக்குச் சென்றனர். அங்கே பழம்பொருட்கள், அரிய பொருட்கள் இடம் பெற்ற அருங்காட்சியகத்தைப் பார்த்தனர். மிகப் பெரிய விண்கல் ஒன்றைக் கண்டதும் லியு ஃபெய்க்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் தோழி அதைப் பற்றிக் கண்டுகொள்ளவில்லை. எல்லாப் பொருட்களும் பூமியில் இருந்து கிடைத்தவை. இந்த விண்கல் மட்டும் வானிலிருந்து வந்தது என்பதால் இது எவ்வளவு முக்கியமானது என்று அருமை, பெருமைகளை எடுத்துரைத்தார் லியு ஃபெய். அவரது தோழியும் ஆச்சரியமடைந்தார். இருவரின் நட்பு, காதலானது. திருமணம் செய்துகொள்ளும் சூழல் உருவானபோது, வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் தன் காதல் எவ்வளவு உன்னத மானது என்பதைக் காட்டுவதற்காகவும் விண்கல்லை வாங்கி, பரிசளிக்க முடிவு செய்தார் லியு ஃபெய். தான் வீடு வாங்குவதற்காகச் சேமித்து வைத்திருந்த ஒரு கோடி ரூபாயில் விண்கல்லை விலைக்கு வாங்கினார். பொதுமக்கள் கூடக்கூடிய ஓரிடத்தில் விண்கல்லை வைத்து, சிவப்புத் துணியால் மூடினார். தன் காதலியை அழைத்து வந்து, விண்கல்லுக்கு முன் நின்று, பூங்கொத்துடன் திருமணக் கோரிக்கை வைத்தார். விண்கல் மீது இருந்த சிவப்புத் துணியை விலக்கியதும் காதலியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. உடனே திருமணத்துக்குச் சம்மதம் தெரிவித்தார். தற்போது சீனாவிலேயே அதிக எடை கொண்ட விண்கல் லியு ஃபெய்யிடம்தான் இருக்கிறது.

அரிய பரிசாக இருந்தாலும் இதை வைத்து என்னதான் செய்வது?

ஸ்லோவாகியாவைச் சேர்ந்த 26 வயது ஸ்டீபன் போல்காரி, இது வரை 3,500 மொபைல் போன்களைச் சேகரித்து வைத்திருக் கிறார். 15 வயதிலிருந்தே ஸ்டீபனுக்கு மொபைல் போன்கள் மீது ஆர்வம் வந்துவிட்டது. தொழில்நுட்பரீதியாக நிறைய கற்றுக் கொண்டார். ஒவ்வொரு பிராண்ட் மொபைல் போனும் புதிய தகவல் களை இவருக்குக் கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் மொபைல் போன்களைச் சேகரிக்கும் முயற்சியில் இறங்கினார். பழைய போன்களைச் சேகரித்துக் கொண்டிருந்த ஒருவரிடம் 1000 போன்களை மிகக் குறைந்த விலைக்கு வாங்கினார். பிறகு தன்னுடைய சேமிப்பில் இல்லாத போன்களை மட்டும் தேடித் தேடிச் சேகரிக்க ஆரம்பித்தார். இன்று 1,231 மாடல்களில் 3,500 மொபைல் போன்கள் இருக்கின்றன. “செங்கல் போலிருந்த நோக்கியா 3310 மாடலிலிருந்து தொடு திரை ஸ்மார்ட் போன்கள் வரை குறுகிய காலத்தில் மொபைல் போன்களின் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது” என்கிறார் ஸ்டீபன் போல்காரி. இவரது வீட்டிலேயே மொபைல் போன் அருங்காட்சியகத்தை வைத்திருக்கிறார். சிறிய மர அலமாரிகளில் வீடு முழுவதும் மொபைல் போன்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. ஸ்லோவாகியா சாதனைப் புத்தகத்தில் ஸ்டீபன் போல்காரி இடம்பெற்றிருக்கிறார்.

மொபைல் போன் அருங்காட்சியகம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x