Published : 20 Dec 2016 09:27 AM
Last Updated : 20 Dec 2016 09:27 AM

உலக மசாலா: இது நாயா, குதிரையா?

இங்கிலாந்தில் வசிக்கும் கிரேட் டேன் வகை நாய் ஒன்று, உலகிலேயே மிகப் பெரிய நாய் என்ற கின்னஸ் சாதனையைப் பெற்றிருக்கிறது. 4 வயதான ஃப்ரெடி, 7 அடி 6 அங்குல உயரமும் 92 கிலோ எடையும் கொண்ட பிரம்மாண்டமான உருவத்தில் காட்சியளிக்கிறது. ஃப்ரெடிக்கும் இவனது தங்கை ஃப்ளெருக்கும் ஆண்டுக்கு ரூ.10.5 லட்சம் செலவாகிறது என்கிறார் உரிமையாளர் க்ளேர் ஸ்டோன்மேன். “என் வாழ்க்கையில் நாய்களுக்கு மிக முக்கியமான இடம் உண்டு. நான்கு ஆண்டுகளாகத் தனியாக வசித்து வருகிறேன். இந்த இரண்டு நாய்கள்தான் என் குழந்தைகள். வறுத்த கோழியும் பீநட் பட்டரும் ஃப்ரெடியின் விருப்பமான உணவுகள்.

இவை தவிர, சோஃபாக்களைப் பிய்த்துச் சுவைப்பது என்றால் இவனுக்கு மிகவும் கொண்டாட்டமாக இருக்கும். இதுவரை 23 சோஃபாக்களை மாற்றியிருக்கிறேன். தினமும் 40 நிமிடங்கள் நடைப்பயிற்சிக்குச் செல்வோம். தெருவில் வரும் நாய்கள் எல்லாம் ஃப்ரெடியின் உருவத்தைக் கண்டு மிரள்கின்றன. நான் ஒரு மாடல் என்பதால் மிகக் குறைவாகவே சாப்பிடுகிறேன். ஃப்ரெடிக்கும் ஃப்ளெருக்கும் தேவையான உணவுகள்தான் என் சமையல் அறை முழுவதும் நிரம்பி வழிகின்றன” என்கிறார் க்ளேர் ஸ்டோன்மேன்.

அடேங்கப்பா… இது நாயா, குதிரையா?

சீனாவின் ஜியாங்சு பகுதியைச் சேர்ந்த 8 வயது காவோ யின்பெங், தன் அப்பாவுக்காக இரண்டு மாதங்களில் 11 கிலோ உடல் எடையை அதிகரித்திருக்கிறான். காவோவின் அப்பாவுக்கு ரத்தப்புற்று நோய். உடனே ஸ்டெம் செல் மூலம் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. சீனாவில் மட்டுமின்றி, ஆசியாவிலேயே அவருக்குப் பொருத்தமான ஸ்டெம் செல் கிடைக்கவில்லை. இவரது பெற்றோரின் ஸ்டெம் செல் பொருந்தினாலும், முதுமையின் காரணமாகப் பயன்படுத்த முடியாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

வேறுவழியின்றி காவோவின் ஸ்டெம் செல்லைக் கொடுப்பதற்கு முடிவெடுத்தனர். 45 கிலோ எடை இருந்தால்தான் ஸ்டெம் செல்லை எடுக்க முடியும் என்பதால், இரண்டே மாதங்களில் 11 கிலோ எடையை அதிகரித்திருக்கிறான் காவோ. முதலில் பத்திய உணவுகளைக் கொடுத்து, ஒவ்வொரு வாரமும் 700 மி.லி. ரத்தத்தை எடுத்து, அறுவை சிகிச்சைக்காகச் சேமித்தனர். பிறகு காவோவுக்கு விருப்பமான உணவுகளை எல்லாம் செய்து கொடுத்தனர். பல்வேறு விளையாட்டுகளில் பயற்சி எடுத்துக்கொண்டிருந்த காவோ, விளையாடுவதை நிறுத்தி, தினமும் நடைப்பயிற்சியை மட்டும் மேற்கொண்டான். எளிதில் நோய்கள் தாக்காமல் இருப்பதற்காக நண்பர்கள், உறவினர்களைச் சந்திக்காமல் தனி அறையில் வைக்கப்பட்டான்.

“45 கிலோ எடை வந்தவுடன் காவோவிடமிருந்து ஸ்டெம் செல்லை எடுத்தோம். அவனது அப்பாவுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்தோம். காவோவின் அப்பா தற்போது வேகமாகத் தேறி வருகிறார். காவோ, தன்னுடைய அதிகப்படியான எடையைக் குறைப்பதற்குப் போராடி வருகிறான்” என்கிறார் ஸுஜோவ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர். 8 வயது சிறுவன், தன் அப்பாவுக்காக இவ்வளவு தூரம் புரிந்துகொண்டு, தன்னை வருத்திக்கொண்டு, ஒத்துழைப்பு கொடுத்து, ஓர் உயிரைக் காப்பாற்றியிருக்கிறான் என்பதை அறிந்த சீன மக்கள், காவோவைப் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்பாவின் உயிரை மீட்ட சிறுவனுக்குப் பூங்கொத்து!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x