Published : 01 Apr 2015 10:56 AM
Last Updated : 01 Apr 2015 10:56 AM

உலக மசாலா: இதழ் ஓவியங்கள்!

சியாட்டிலைச் சேர்ந்த பிரிட்ஜெட் பெத் காலின்ஸ் இயற்கை ஆர்வலர். கண்கவர் பூக்கள், இலைகள், குச்சிகளைக் கொண்டு விதவிதமான உருவங்களை உருவாக்கிவிடுகிறார். தன் வீட்டைச் சுற்றியிருக்கும் இடங்களில் உள்ள மலர்களையும் இலைகளையும் குச்சிகளையும் சேகரித்துக்கொள்கிறார். பிறகு பூக்களின் இதழ்களைத் தனித்தனியாக பிரித்துக்கொள்கிறார்.

தன் கற்பனைக்கு ஏற்றவாறு பறவைகள், பழங்கள், கடல் பிராணிகள், மனித உருவங்கள் என்று உருவாக்கி, அசத்திவிடுகிறார். குழந்தையாக இருந்த பொழுதே காலின்ஸுக்கு இந்தக் கலை மீது ஆர்வம் வந்துவிட்டது. கண்கவர் பூக்களைப் பார்த்துவிட்டால் அதைப் பறித்து, புத்தகங்களில் வைத்து விடுவார்.

சிறிது நாட்களில் நீர்ச் சத்தை இழந்த பூக்கள் காகிதங்கள் போல மாறியிருக்கும். அவற்றை எடுத்து அழகான உருவங்களைக் கொண்டுவந்துவிடுவார்.

வல்லவனுக்குப் பூவும் ஓவியம்!

பிரிட்டனில் வசிக்கிறார் 4 வயது எமிலி லியா ஹாவார்ட். இதுவரை திட ஆகாரங்களைச் சாப்பிட்டதே இல்லை. ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி சுவைகளையுடைய தயிர் தான் இவருடைய உணவு. ஒருநாளைக்கு 30 டப்பா தயிரைச் சாப்பிடுகிறார். சாக்லெட், ஸ்வீட், ஐஸ்க்ரீம் உட்பட வேறு எந்த உணவுகளையும் சாப்பிடுவதே இல்லை. 50 கிராம் எடை கொண்ட ஒரு தயிர் டப்பாவில் 1 ஸ்பூன் சர்க்கரை இருக்கிறது.

தினமும் 30 ஸ்பூன் சர்க்கரை சேர்வதால் உடல் ஆரோக்கியம் கெட்டுவிடும் என்று எமிலியின் பெற்றோர் கவலைப்படுகின்றனர். எத்தனையோ விதங்களில் சொல்லிப் பார்த்தாலும் எமிலி தன் உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்வதாக இல்லை. மருத்துவர்கள் இந்த உணவுப் பழக்கத்தால் இதுவரை எமிலிக்கு எந்த ஆரோக்கியக் கேடும் ஏற்படவில்லை என்றும் அவள் வயது குழந்தைகளுக்கு உரிய எடை இருப்பதாகவும் கூறிவிட்டனர்.

ஆனால் இதே உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடித்தால் உடலுக்கு அவசியம் தேவையான மற்ற சத்துகள் கிடைக்காமல் பிரச்சினை வரலாம் என்றும் எச்சரித்திருக்கிறார்கள். ஒரு நாளைக்கு 30 டப்பா வீதம் ஓர் ஆண்டுக்கு 11 ஆயிரம் டப்பாக்களைக் காலி செய்கிறார் எமிலி.

சுமார் 2 லட்சம் ரூபாய் தயிருக்கு மட்டும் செலவாகிறதாகச் சொல்கிறார் அவரது அம்மா. துறுதுறுப்பாகவும் புத்திசாலித்தனமாகவும் இருக்கும் எமிலியைப் பற்றிய ஒரே கவலை உணவுப் பழக்கம்தான். 9 மாதக் குழந்தையாக இருக்கும் எமிலியின் தங்கை டெய்ஸி திட உணவுகளைச் சாப்பிடுகிறார்.

இன்னுமா திகட்டலை எமிலி?

சீனாவின் ஷான்ஸி மாகாணத்தில் இயங்கி வருகிறது ஓர் உணவு விடுதி. ஆண் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக, கழிவறையில் பெண் பொம்மைகளை நிறுத்தி வைத்திருக்கிறது. அங்கே வரும் ஆண் வாடிக்கையாளர்கள் இதற்குக் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ஒரு பொம்மையாக இருந்தாலும் கழிவறையை இயல்பாகப் பயன்படுத்த முடியவில்லை என்று குவியும் புகார்களைப் பார்த்த உணவு விடுதியின் உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வாடிக்கையாளர்களை அதிகரிக்க நினைத்துச் செய்த ஏற்பாடு, இப்படி எதிர்மறையாகிவிட்டதை எண்ணி வருந்துகிறார்கள்.

தப்புத் தப்பா யோசிச்சா தப்பாகத்தான் முடியும்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x