Published : 30 Apr 2015 10:42 AM
Last Updated : 30 Apr 2015 10:42 AM

உலக மசாலா: இடுக்கண் களையும் நட்பு!

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் வசிக்கிறார்கள் ஸி ஸுவும் ஸாங் சியும். இருவரும் நெருங்கிய நண்பர்கள். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஸாங்குக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு, நடக்க முடியாமல் போய்விட்டது. அன்றிலிருந்து மூன்று ஆண்டுகளாக ஸாங்கை முதுகில் தூக்கிக்கொண்டு வீடு, பள்ளி என்று எங்கும் செல்கிறார் ஸி.

19 வயது ஸாங்கை தினமும் குறைந்தது 12 தடவையாவது ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குத் தூக்கிச் செல்ல வேண்டியிருக்கிறது. தூக்குவதோடு, ஸாங்கின் உடைகளைத் துவைக்கிறார், அவருக்கு உணவு கொண்டு வந்து தருகிறார், ஒவ்வொரு முறையும் கழிவறைக்குச் செல்ல உதவி செய்கிறார் ஸி.

கடந்த 3 ஆண்டுகளாக ஒரு சின்ன சலிப்பைக் கூட காட்டாமல் அன்போடு உதவி செய்து வரும் ஸியை ஆசிரியர்கள் முதல் மாணவர்கள் வரை பாராட்டுகிறார்கள். ஸியை ரோல் மாடலாகக் கொண்டாடுகிறார்கள். ஸாங்கும் ஸியும் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்கள்.

3 ஆண்டுகளில் இதுவரை ஒரு வகுப்பைக் கூட இருவரும் தவிர்த்ததில்லை. இருவருக்கும் இடையே இருக்கும் பொறாமையற்ற அன்பை சீனப் பெருஞ்சுவருக்கு அடுத்த அதிசயமாகப் பார்க்கிறார்கள்.

இடுக்கண் களைவது நட்பு!

அரசாங்கத்தில் முறையிட வேண்டும் என்றால் அதி காரிகள், அரசியல்வாதிகளிடம் பெட்டிஷன் கொடுப்பது வழக்கம். வெனிசுலாவில் வித்தியாசமான முறையில் ஒரு பெண் தன் கோரிக்கையை வைத்தார். வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, அவரது தலையை நோக்கி ஒரு மாம்பழம் வந்தது. அவரது காதை உரசிய மாம்பழத்தை கையில் பிடித்தார் மதுரோ. அதில் `என்னைத் தொடர்புகொள்ளுங்கள்’ என்று எழுதி, தொலைபேசி எண்களும் குறிப்பிடப்பட்டிருந்தன.

மதுரோ அந்த எண்களுக்குத் தொடர்புகொண்டார். மர்லெனி ஆலிவோ என்ற பெண், தான் வீட்டுப் பிரச்சினையில் சிக்கியிருப்பதாகவும், விரைவில் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் மாம்பழத்தை வீசியதாகச் சொன்னார். மர்லெனியின் செயல் நாகரிகமாக இல்லாவிட்டாலும், அவரது பிரச்சினையைத் தீர்க்க உடனடியாக அரசாங்கக் குடியிருப்பு ஒன்றை ஒதுக்கிக் கொடுத்துவிட்டார் மதுரோ. பேருந்து ஓட்டுனராக இருந்த மதுரோ, அதிபரான பிறகும் அடிக்கடி பேருந்துகளில் பயணம் செய்து மக்களின் பிரச்சினைகளை அறிந்து வருகிறார். மர்லெனி எந்தவித மோசமான எண்ணத்துடனும் மாம்பழம் வீசவில்லை, அவரது பிரச்சினை தீர இப்படிச் செய்துவிட்டார். அவரை விட்டுவிடலாம் என்றவர், மாம்பழம் பழுத்த பிறகு தானே சாப்பிடப் போவதாகவும் சொல்லிவிட்டார் மதுரோ.

இங்கே எல்லாம் இப்படி நினைச்சுக்கூடப் பார்க்க முடியாது…

அன்பான மனிதர்கள் நம்மை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து செல்வது மிகத் துயரமான விஷயம். அவர்களின் நினைவாக அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், துணிகள், கடிதங்கள் போன்றவற்றைப் பத்திரப்படுத்தி, அடிக்கடி எடுத்துப் பார்த்துக்கொள்வது வழக்கம். பிரான்ஸைச் சேர்ந்த கடியா தன் தந்தை இறந்தபோது நிலைகுலைந்து போனார். அவரது அப்பா பயன்படுத்திய வாசனை திரவியம் சட்டைகளிலும் தலையணை உறைகளிலும் அப்படியே இருந்தது. அதை நுகரும்போது தன் அப்பாவுடன் இருப்பது போலவே உணர்ந்தார் கடியா.

கலான் வாசனை திரவியம் தயாரிக்கும் நிறுவனத்திடம் சென்று, தன் தந்தையின் வாசத்தை நிரந்தரமாக அனுபவிக்கும் விதத்தில் ஏதாவது செய்து தரும்படிக் கேட்டார். அந்த நிறுவனம் ஆராய்ச்சியில் இறங்கியது. நிறைய தோல்விகளுக்குப் பிறகு அந்த நுட்பத்தைக் கண்டுபிடித்துவிட்டது. அன்பானவர்கள் பயன்படுத்திய துணிகளைக் கொண்டு சென்றால், 4 நாட்களில் சிறிய பெட்டியில் வாசனை திரவியத்தை நிரப்பிக் கொடுத்துவிடுகிறார்கள். இது அப்படியே இறந்தவர்கள் பயன்படுத்திய வாசனையாக இருக்கிறது. ரூ.38 ஆயிரம் கட்டணம். மனிதர்கள் மட்டுமில்லை நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளின் வாசனையைக் கூட இப்படிக் கொடுக்க முடியும் என்கிறார்கள்.

அன்புக்கு ஈடு இணை எதுவுமில்லை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x