Published : 15 Dec 2015 08:44 AM
Last Updated : 15 Dec 2015 08:44 AM

உலக மசாலா: ஆமை மீட்பு முயற்சி

நியூசிலாந்தில் வசிக்கிறார் அர்ரோன் கல்லிங். சமீபத்தில் அவருடன் பணி புரிபவர் ஒரு கடல் ஆமையை உணவுக்காக வாங்கி வந்தார். 2,200 ரூபாயைக் கொடுத்து, அந்தக் கடல் ஆமையை வாங்கிக்கொண்டார். இன்னும் ஓர் ஆமை மார்க்கெட்டில் இருப்பதாகக் கேள்விப்பட்டார். அதையும் விலை கொடுத்து வாங்கினார். இரண்டையும் வண்டியில் எடுத்துச் சென்று, மீண்டும் கடலிலேயே விட்டுவிட்டார் அர்ரோன். “இதுவரை 12 ஆமைகளைக் காப்பாற்றி கடலில் சேர்த்திருக்கிறேன் என்ற செய்தியை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டேன். என்னால் எத்தனை ஆமைகளைப் பணம் கொடுத்து மீட்க முடியும்? உங்களால் முடிந்த ஆமைகளைக் காப்பாற்றுங்கள் என்று கேட்டுக்கொண்டேன்.

‘டர்டில்பவர்’ என்ற ஃபேஸ்புக் பக்கத்தையும் ஆரம்பித்தேன். நான் எதிர்பார்க்கவே இல்லை இவ்வளவு ஆதரவு கிடைக்கும் என்று! ஆமைகளைக் காப்பாற்றச் சொல்லி, நன்கொடைகளும் குவிகின்றன’’ என்கிறார் அர்ரோன்.

நல்ல விஷயத்துக்கு எல்லோரும் துணை நிற்பாங்க…

ரஷ்யாவைச் சேர்ந்த மரினா பைச்கோவா ஒரு பொம்மைக் கலைஞர். பீங்கானில் உருவாக்கப்படும் இவருடைய பொம்மைகள் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் இந்த பொம்மைகளுக்கு வரவேற்பு இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஆனால் இந்த பொம்மைகள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு சோகத்தில், வருத்தத்தில் இருப்பது போலவே உள்ளன. கண்களும் உதடுகளும்தான் இந்த பொம்மைகளுக்குக் கூடுதல் அழகைத் தருகின்றன.

6 வயதிலிருந்தே மரினா பொம்மைகள் செய்ய ஆரம்பித்துவிட்டார். எப்போதும் பொம்மைகளைப் பற்றிக் கனவு கண்டுகொண்டே இருப்பார். ஒவ்வொரு பொம்மைக்கும் 150 முதல் 300 மணி நேரங்களைச் செலவிடுவார். ‘’கதைகளிலும் நிஜ வாழ்க்கையிலும் துன்பப்படும் பெண்களைத்தான் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதனால் என் பொம்மைகளும் துன்பத்தை வெளிப்படுத்துவதாகவே அமைந்துவிடுகின்றன. மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணைப் பார்த்த பிறகு, மொட்டைத் தலையுடன் ஒரு பொம்மையை உருவாக்கினேன். என் பொம்மைகள் அனைத்திலும் சோகம் குடிகொண்டிருந்தாலும் அழகில் அவற்றுக்கு இணை வேறு இருக்க முடியாது எனும் அளவுக்கு நான் உருவாக்கியிருக்கிறேன்.

லட்சக்கணக்கில் விலை என்றாலும், பொம்மைகளின் விற்பனையில் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியைப் பாதிக்கப்பட்ட பெண்களுக்காகச் செலவிடுகிறேன். ஒருமுறை என் பொம்மையைப் பார்த்தால் வாங்காமல் செல்ல மாட்டார்கள்’’ என்கிறார் மரினா.

வலி கடத்தும் பொம்மைகள்!

ஜப்பானைச் சேர்ந்த யுகா கினோஷிடா தனக்குத் தானே உணவு சவால் ஒன்றைச் செய்து காட்டியிருக்கிறார். 10 பாக்கெட்களில் இருந்து 100 பிரெட் துண்டுகளைச் சாப்பிட்டிருக்கிறார். ஜாம், வெண்ணெய், பாலாடை, தேன் போன்றவற்றைத் தொட்டுக்கொண்டு ஒரே நேரத்தில் சாப்பிட்டு முடித்திருக்கிறார். 3.8 கிலோ எடைகொண்ட பிரெட் துண்டுகளைச் சாப்பிட்டு முடிப்பதற்குள் தாடை வலியெடுத்துவிட்டது என்கிறார். இதற்கு முன்பு 100 கோழி இறைச்சித் துண்டுகளைச் சாப்பிட்டிருக்கிறார். 100 பர்கர் சாப்பிடும் முயற்சி தோல்வியில் முடிந்திருக்கிறது என்கிறார் யுகா.

ஒரு சின்னப் பெண்ணால் இவ்வளவு உணவுகளை எப்படிச் சாப்பிட முடிகிறது!

ஜப்பானியர்களுக்குப் பூனைகள் மேல் அளவற்ற அன்பு உண்டு. சிலரது வீடுகளில் பூனை வளர்க்கும் சூழல் இருக்காது. அலுவலகம் போன்ற இடங்களுக்கும் பூனைகளை அழைத்துச் செல்ல முடியாது. அதனால் பூனை பொம்மைகளை வாங்கி வைத்துக்கொள்கின்றனர். இந்தப் பொம்மைப் பூனைகள் மீது இயல்பான பூனையின் வாசனை வருவதில்லை. இவர்களுக்காகவே பொம்மைப் பூனைகளுக்கான நறுமண திரவியம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

பொம்மைப் பூனைகளின் தலை மீது இந்த நறுமணத்தை அடித்தால், நீண்ட நேரத்துக்கு நிஜப் பூனையின் வாசனை நிலைத்து நிற்கும். நான்கு மாதங்கள் நிஜப் பூனைகளின் வாசனையை வைத்து ஆராய்ச்சி செய்த பிறகே இந்த யமமோடோ நறுமண திரவியம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. 3 வண்ணங்களில் கிடைக்கும் இந்தத் திரவியத்தின் விலை 1,700 ரூபாய்.

ம்… எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க…



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x