Published : 04 Aug 2016 08:34 AM
Last Updated : 04 Aug 2016 08:34 AM

உலக மசாலா: ஆன்லைன் அன்பு!

ஹாலந்தில் வசிக்கிறார் 41 வயது பீட்டர் சிர்க். 26 வயது ஸாங் என்ற சீனப் பெண் ஆன்லைன் மூலம் பீட்டருக்கு அறிமுகமானார். நண்பர்களாக பழகிய இவர்கள் காதலர்களாக மாறினர். 4,500 மைல்கள் தூரத்தில் இருக்கும் ஸாங்கை நேரில் சந்திக்க முடிவு செய்து விசா வாங்கினார் பீட்டர். தான் நேரில் சந்திக்க வருவதாக ஸாங்குக்கு தகவல் கொடுத்தார். சீனாவின் சாங்ஷா விமான நிலையத்தில் ஆவலுடன் இறங்கிய பீட்டர், ஸாங்கைத் தேடினார். அவர் வரவே இல்லை.

ஆன்லைனில் தொடர்புகொள்ளவும் முடியவில்லை. ஆனாலும் ஸாங் வருவார் என்று விமான நிலையத்திலேயே காத்திருந்தார் பீட்டர். ஒரே இடத்தில் சரியாக சாப்பிடாமல், தூங்காமல் அமர்ந்திருந்தார். அவரது உடல்நிலை மோசமானது. பத்தாவது நாள் அவரை மருத்துவமனையில் சேர்க்கும் நிலை வந்துவிட்டது. அவரிடம் விசாரித்தபோது, விஷயத்தைச் சொன்னார். அவரைப் படம் பிடித்து, காதல் தோல்வி என்று இணையத்தில் செய்தியை வெளியிட்டனர். சீன பத்திரிகையாளர்கள் சிலர் பீட்டருக்கு உதவும் எண்ணத்தில் ஸாங்கைத் தேடிச் சென்றனர்.

அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்வதற்காக பக்கத்து நகருக்கு சென்றிருப்பது தெரிந்தது. “பீட்டர் பயணம் குறித்து என்னிடம் தெரிவித்தது உண்மைதான். ஆனால் நான் விளையாட்டுக்குச் சொல்கிறார் என்று நினைத்தேன். பல ஆயிரம் மைல்கள் தாண்டி வந்து நிற்பார் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் பழக ஆரம்பித்து 2 மாதங்கள்தான் ஆகின்றன. காதலின் முதல் படியில்தான் இருக்கிறோம். அதற்கே பீட்டர் இவ்வளவு அன்பு செலுத்துவார் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் அதற்குப் பிறகு அவர் என்னைத் தொடர்புகொள்ளவே இல்லை.

நானும் சர்ஜரிக்காக ஆன்லைன் பக்கம் வரவில்லை. பீட்டர் மீது இப்போது இன்னும் அன்பு அதிகரித்திருக்கிறது. எங்கள் காதலைத் தொடர்வோம். நான் மருத்துவமனையில் இருந்து திரும்பிய பிறகு, நிச்சயம் பீட்டரை சந்திப்பேன்” என்கிறார் ஸாங். பீட்டரின் உடல்நிலையை கருத்தில்கொண்டு, ஹாலந்துக்கே அனுப்பி வைத்து விட்டனர்.

பீட்டரின் அன்பைப் புரிந்துகொள்ளுங்கள் ஸாங்!

டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் வசிக்கிறது 5 மாத ஹெர்மன் பூனை. பெரிய கண்களைப் பார்க்கும்போது அச்சம் ஏற்படும். “ஹெர்மனுக்கு பிறந்ததில் இருந்தே பெரிய கண்கள். இதனால் இமைகளை மூட முடிவதில்லை. தூங்கும்போதுகூட கண்களைத் திறந்தபடியேதான் தூங்கும். நான் பூனைகளைத் தத்தெடுக்கும் அமைப்புக்கு சென்றபோது, பார்த்த உடனே என்மீது தாவிக் குதித்துவிட்டது ஹெர்மன்.

பார்க்க அச்சம் தருவதாக இருந்தாலும் மிகவும் அன்பானது, சாதுவானது. என்னுடைய ஷூக்களை வைத்து விளையாடுவது என்றால் அவனுக்கு மிகவும் பிடிக்கும். ஒரு குறைபாட்டின் காரணமாகவே ஹெர்மனின் கண்கள் பெரிதாக இருக்கின்றன, அறுவை சிகிச்சை செய்தால் சரியாகும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஹெர்மனால் அந்த கஷ்டத்தைத் தாங்க முடியுமா என்று யோசிக்கிறேன்” என்கிறார் உரிமையாளர் ஷிர்லி.

இமைக்காத பூனை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x