Published : 20 Jul 2016 10:13 AM
Last Updated : 20 Jul 2016 10:13 AM

உலக மசாலா: ஆணாக நடித்து பெண்ணையே மணந்த பெண்!

இந்தோனேஷியாவில் வசிக்கும் 40 வயது சுர்வதி, ஆள் மாறாட்டக் குற்றத்துக்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றிருக்கிறார். சுர்வதியைக் குற்றவாளி என்று கண்டுபிடித்தவர் அவரது மனைவி ஹெனியாடி. தன் பெயர் முகம்மது எஃபென்டி சாபுட்ரா என்றும் தான் ஒரு போலிஸ் அதிகாரி என்றும் கூறியிருக்கிறார் சுர்வதி. இவரது அமைதியான குணத்தை நம்பி, 25 வயது ஹெனியாடியைத் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள். தான் ஓர் ஆண் என்பதைக் காட்டிக்கொள்ள, திருமணத்தன்று ஏராளமான மனிதர்களை உறவினர்களாக நடிக்க வைத்திருக்கிறார்.

சில மாதங்களிலேயே ஹெனியாடிக்கு இவர் மீது சந்தேகம் வந்துவிட்டது. விரைவிலேயே தன் கணவர் ஒரு பெண் என்பதை அறிந்துகொண்டார். ‘‘ஒருநாள் அவர் வெளியே சென்றிருந்தபோது, அறையைச் சோதனை செய்தேன். அவரது அடையாள அட்டை கிடைத்தது. அதில் சுர்வதி, பெண் என்று இருந்ததைப் பார்த்து அதிர்ந்து போனேன். போலியான ஆவணங்களை அளித்து, திருமணம் செய்திருக்கிறார்.’’ என்று வருந்துகிறார் ஹெனியாடி. தவறான தகவல்கள் கொடுத்து ஏமாற்றிய குற்றத்துக்காக, சுர்வதி கைது செய்யப்பட்டார். தன்னுடைய முதல் திருமணத்தால் ஏமாற்றமடைந்திருக்கிறார் சுர்வதி.

அவருக்கு 17 வயதில் ஒரு குழாந்தை இருக்கிறது என்பதைத் தவிர, வேறு எந்தத் தகவலையும் பெற முடியவில்லை. தற்போது 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. கட்டுப்பாடுகள் நிறைந்த இந்தோனேஷிய கிராமங்களில் வசிக்கும் சுர்வதி, பலவிதங்களில் ஏமாற்றப்பட்டும் பாதிக்கப்பட்டும் இருக்கலாம். அந்தப் பாதிப்பு தன்னை ஓர் ஆணாக நடந்துகொள்ள தூண்டியிருக்கலாம் என்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.

எந்தத் தைரியத்தில் இப்படி ஏமாற்றத் துணிகிறார்கள்?

பிரிட்டனைச் சேர்ந்தவர் 37 வயது அடேல் டிவோன்ஷைர், ஸ்கூபா டைவர். 2013-ம் ஆண்டு தண்ணீர்ப் புகாத ஃபூஜி கேமராவை, கடலில் தொலைத்துவிட்டார். 500க்கும் மேற்பட்ட அரிய படங்கள் அந்த கேமராவுக்குள் இருந்தன. உழைப்பு வீணாகிவிட்டதை நினைத்து அடெலுக்கு மிகுந்த வருத்தம். 3 ஆண்டுகளுக்குப் பிறகு, 600 கி.மீ. தொலைவில் அடெலின் கேமரா கண்டெடுக்கப்பட்டிருக்கிறது! லார்ஸ் மோஸ்பெர்க், ஸ்வீடன் கடற்கரையில் ஒதுங்கியிருந்த கேமராவைக் கைப்பற்றியிருக்கிறார். ‘‘சிவப்பு நிறத்தைப் பார்த்தவுடன் அருகில் சென்றேன். அழகான பிளாஸ்டிக் கேமரா. அழுத்திப் பார்த்தேன். வேலை செய்தது. கேமராவில் பதிவான காட்சிகளைப் பார்த்தபோது, ஆராய்ச்சியாளர் ஒருவரால் எடுக்கப்பட்டிருப்பது புரிந்தது. சுமார் 500 படங்கள் இருக்கும். ஜூலை 2013 கடைசியாகக் காட்சிகள் பதிவாகியிருந்தன.

வீடியோவில் கேட்ட குரலை வைத்து, அவர் பிரிட்டனைச் சேர்ந்தவர் என்று முடிவு செய்தேன். இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, உரியவரிடம் சேர்க்க நினைத்தேன். ஃபேஸ்புக்கில் சில படங்களை வெளியிட்டேன். சில மணி நேரத்தில் விடை கிடைத்துவிட்டது. அடெலிடம் சில கேள்விகள் கேட்டு, உறுதி செய்துகொண்டேன். பிறகு கேமராவை ஒப்படைத்துவிட்டேன்’’ என்கிறார் லார்ஸ் மோஸ்பெர்க். ‘‘ நான் சேகரித்த அரிய படங்கள் அனைத்தும் கிடைத்துவிட்டன!’’ என்று மகிழ்கிறார் அடெல்.

ஸ்காட்லாந்தில் தொலைந்த கேமரா, ஸ்வீடனில் கிடைத்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x