Published : 09 Sep 2016 09:53 AM
Last Updated : 09 Sep 2016 09:53 AM

உலக மசாலா: ‘ஆடு யோகா’!

அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் ‘goat yoga’ பிரபலமாகி வருகிறது. ஆடுகளை வைத்துச் செய்யக்கூடிய யோகா இல்லை இது. யோகா செய்யும் மனிதர்களுடன் நட்பாக விளையாடுகின்றன ஆடுகள். ‘நான் புகைப்படக்காரராக வேலை செய்து வந்தேன். கடந்த ஆண்டு உடல் நலம் குன்றியது. வேலையை விட்டுவிட்டு, இந்தப் பண்ணையை வாங்கினேன். இந்த இடத்தைப் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக வாடகைக்கு விடுகிறேன். ஒரு பிறந்தநாள் விழாவில், யோகா மாஸ்டர் வந்தார். சுத்தமான காற்றும் பசுமையான தோட்டமுமாக இருக்கும் இந்தப் பண்ணையில் யோகா வகுப்பு நடத்தலாம் என்றார். நானும் சம்மதித்தேன். வாடிக்கையாளர்களைக் கவர்வதற்கு ஆடுகளைப் பயன்படுத்திக்கொண்டோம்.

யோகா செய்யும்போது ஆடுகள் உள்ளே நுழைந்து விளையாடுகின்றன. யோகா விரிப்பில் அமர்ந்துகொள்கின்றன. சீரியஸாக யோகா செய்யும்போது, ஆடுகளின் வருகை எல்லோருக்கும் உற்சாகம் தந்துவிடுகிறது. மன அழுத்தம் குறைகிறது. ‘ஆடு யோகா’ என்ற பெயர் வேகமாகப் பரவிவிட்டது. இந்த வெற்றியை நாங்களே எதிர்பார்க்கவில்லை. 100 மைல் தொலைவில் இருந்தெல்லாம் யோகா வகுப்புக்கு வருகிறார்கள்’ என்கிறார் லெய்னி மோர்ஸ்.

முக்கியமான பிசினஸாக மாறிவிட்டது யோகா!

பாகிஸ்தானில் வசிக்கும் நர்கிஸ் லத்தீப், சுற்றுச்சூழல் போராட்டக்காரர். கடந்த 50 ஆண்டுகளாக குப்பைகளை, மறுசுழற்சி முறையில் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துகொண்டிருக்கிறார். ‘ஐம்பது ஆண்டுகளுக்கு முன் எங்கள் குடியிருப்பில் அடிக்கடி குப்பைகளை எரிப்பார்கள். அங்கு வசிப்பதே சிரமமாக இருந்தது. காற்றும் மாசடைந்தது. நான் எவ்வளவோ சொல்லியும் குப்பைகள் எரிப்பதை அவர்கள் நிறுத்தவில்லை. தனி மனிதர் சொல்வதைப் பெரும்பாலும் கேட்க மாட்டார்கள். அவர்கள் வழிக்கே சென்று, குப்பைகள் எரிப்பதைத் தடுக்க நினைத்தேன். நானே குப்பைகளைப் பணம் கொடுத்து வாங்கிக்கொண்டேன். தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்தேன். குப்பைகளை வைத்து, தங்குவதற்கு இடம் இன்றி வறுமையில் தவித்துக்கொண்டிருப்பவர்களுக்கு வீடுகளை உருவாக்கிக் கொடுத்தேன்.

அதற்குப் பிறகு குப்பைகளை யாரும் எரிக்கவில்லை. சொல்வதற்கு எளிதாக இருந்தாலும் இந்த வேலை கடுமையானது. குப்பைகளுக்குப் பணம் கொடுக்க நன்கொடை திரட்ட வேண்டும். வீடுகளுக்கான கம்பிகள், மூங்கில்கள் போன்றவற்றை வசதி படைத்தவர்களிடமிருந்து பெற வேண்டும். சிலர் வீடு இல்லாவிட்டாலும் பரவாயில்லை, குப்பையால் கட்டின வீட்டில் குடியிருக்க மாட்டோம் என்பார்கள். சுத்தம் செய்த குப்பைதான் என்று புரிய வைத்து, வீடுகளை வழங்குவோம். கராச்சியில் மட்டும் ஒரு நாளைக்கு 5,500 கிலோ குப்பைகள் கொட்டப்படுகின்றன. இன்று மக்களின் மனதில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. எனக்கும் வயதாகி வருகிறது. ஆனாலும் என் முயற்சியில் இருந்து பின்வாங்க மாட்டேன். என் வாழ்நாள் முழுவதும் சுற்றுச்சூழலுக்காகவும் எளிய மக்களுக்காகவும் போராடுவதை மிகப் பெரிய விஷயமாகக் கருதுகிறேன்’என்கிறார் நர்கிஸ் லத்தீப்.

குப்பைகளை வீடாக மாற்றிய நர்கிஸ்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x