Published : 11 Aug 2015 10:44 AM
Last Updated : 11 Aug 2015 10:44 AM

உலக மசாலா: ஆடுகளின் ஓட்டப் பந்தயம்

ஸ்காட்லாந்தில் ஆடுகளுக்கு இடையே ஓட்டப் பந்தயம் நடத்தப்படுகிறது. இதற்காக ஆடுகளுக்கு ஆடை அணிவிக்கப்படுகிறது. ஆடுகளின் மேல் கம்பளியால் உருவாக்கப்பட்ட வண்ண பொம்மைகள் கட்டி வைக்கப்படுகின்றன. ஆடுகளின் மீது பொம்மைகள் சவாரி செய்வது போலக் காட்சியளிக்கின்றன. நூறாண்டுகளைக் கடந்த கம்பளி தொழிற்சாலையும் ஆட்டுப் பண்ணைகளும் இணைந்து இந்த ஓட்டப் பந்தயத்தை நடத்துகின்றன. கடந்த 4 ஆண்டுகளாக நடைபெறும் போட்டியில் ஆயிரக்கணக்கான ஆடுகள் பங்கேற்று வருகின்றன. ஆடுகள் நிற்காமல் ஓடுவதற்காக, அவற்றின் பின்னே ஒரு சிறுவன் குச்சியுடன் ஓடுகிறான். பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்தப் போட்டியைப் பார்ப்பதற்காக, பல கி.மீ. தூரத்துக்கு அணிவகுத்து நிற்கிறார்கள். ஆரவாரம் செய்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் இந்தப் போட்டிக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்து வருகிறது.

விலங்குகளுக்கு இடையே போட்டி வைத்து ரசிப்பதில் மனிதனுக்கு அப்படி என்ன ஆர்வமோ!

மிகப் பெரிய விளையாட்டு அரங்குகளில், குவிந்து கிடக்கும் பொம்மைகளை ரோபோவின் கைகளால் எடுக்கும் போட்டி கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும். இந்த விளையாட்டில் குறிப்பிட்ட நேரத்துக்குள் ரோபோவை இயக்கி, எவ்வளவு பொம்மைகளை எடுக்கிறோம் என்பதுதான் சுவாரசியம். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு ஒரு பொம்மை கூட குறிப்பிட்ட நேரத்துக்குள் எடுக்க முடிவதில்லை. இதனால் எல்லோரும் அதிருப்தியே கொண்டிருக்கின்றனர். சீனாவின் சோங்ஃவிங்கில் உள்ள விளையாட்டு அரங்கம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டிருக்கிறது. ரோபோக்களுக்குப் பதிலாக, குழந்தைகளையே கயிற்றில் கட்டி, கைகளுக்கு உறைகளை மாட்டி, பொம்மை குவியல்களுக்கு அழைத்துச் செல்கிறது. குழந்தை ஒரு பொம்மையையாவது எடுக்க முடியும் என்ற சூழல் உருவாகி இருக்கிறது. பெற்றோரிடமும் குழந்தைகளிடமும் இந்த முயற்சி பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் சீனர்களுக்கு இணை யாருமில்லை…

கனடாவில் உள்ள டொலிசியஸ் டோனட்ஸ் நிறுவனத்தில் ஒரு டோனட் 6,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது சாதாரண டோனட் அல்ல. 24 காரட் தங்கத் துகள்களும் சாப்பிடக்கூடிய வைரத்துகள்களும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு டோனட்டும் தயாரிப்பதற்கு 3 முதல் 5 மணி நேரங்களாகின்றன. வாடிக்கையாளர் ஒருவர், தன் காதலைச் சொல்லும்போது வித்தியாசமான, மறக்க முடியாத, விலையுயர்ந்த டோனட் வேண்டும் என்று கேட்டார். அப்பொழுது உருவானதுதான் இந்த டோனட்டோபியா. முதல் டோனட்டோபியாவைப் பரிசோதனை முயற்சியாகத்தான் செய்து பார்த்தோம். ஆனால் பிரமாதமான சுவையாக இருந்தது. டோனட்டோபியாவுடன் அலங்கார பாட்டிலில் தண்ணீர், வினிகர், சாக்லேட் கரைசல் போன்றவையும் பரிமாறுகிறோம் என்கிறார் உரிமையாளர் ஜியான் கமின்ஸ்கி.

ம்ம்… இதையெல்லாம் வாங்கிச் சாப்பிடவும் ஆட்கள் இருக்கிறார்களே…

இத்தாலியைச் சேர்ந்த மிகப் பெரிய ஃபேஷன் நிறுவனம் டோல்ஸ் அண்ட் கபானா. உலகப் புகழ்பெற்ற இந்த நிறுவனம் வடிவமைக்கும் ஆடைகள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு விலை உயர்ந்தவை. குழந்தைகளின் வண்ண ஓவியங்களை வைத்து, இந்த நிறுவனம் வடிவமைத்த ஆடைகள் லட்சக்கணக்கில் விலை போகின்றன. சார்லொட்டே கெம்ப் என்ற 5 வயது சிறுமி, இந்த ஆடைகளில் இடம்பெற்றுள்ள ஓவியங்களை மறு உருவாக்கம் செய்கிறார். அவரது அம்மா மார்தா, அந்த ஓவியத்தைக் கொண்டு ஆடை வடிவமைக்கிறார். கபானாவின் குழந்தைக்கான ஆடை ஒன்று 40 ஆயிரம் ரூபாய், ஆனால் சார்லொட்டேவும் மார்தாவும் தயாரித்த ஆடை 2 ஆயிரம் ரூபாய். இரண்டு ஆடைகளுக்கு இடையே பெரிய அளவில் வித்தியாசம் இல்லை என்பதுதான் சிறப்பு.

ரொம்ப அழகா செய்திருக்கீங்க… ஆனா நஷ்ட ஈடு கேட்கப் போறாங்க பார்த்துக்குங்க…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x