Published : 29 Jan 2017 11:08 AM
Last Updated : 29 Jan 2017 11:08 AM

உலக மசாலா: ஆடம்பரத்தை நியாயப்படுத்த அறக்கட்டளைகளுக்கு வழங்குவது இப்போதைய ஃபேஷன்!

லகப் பயணம் மேற்கொள்ள விரும்புபவர்களுக்காக பொட்டிக் ட்ரீம்மேக்கர் நிறுவனம், 20 நாட்களில் 20 நகரங்களைப் பார்க்கக் கூடிய ஒரு சுற்றுலாவை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆடம்பரமான சுற்றுலாவில் உங்களுடன் உறவினர்கள், நண்பர்கள் 49 பேர் பயணம் செய்யலாம். சுற்றுலா கட்டணம் 94.5 கோடி ரூபாய். இது மற்ற சுற்றுலாக்களைப் போல இல்லை. விமானம் ஏறியதிலிருந்து மீண்டும் விமானத்திலிருந்து இறங்கும் வரை ஒவ்வொரு விஷயத்திலும் அதிகபட்சமான ஆடம்பர வசதிகளை அனுபவிப்பீர்கள். பிரத்யேக போயிங் விமானம் 767 ஜெட்டில்தான் பயணம். ஒவ்வொரு விமானத்திலும் குறைந்த அளவு ஆட்களே அனுமதிக்கப்படுவர். ஆடம்பரமான மிக வசதியான படுக்கைகளுடன் கூடிய இருக்கைகள். 20 நாட்களில் 12% நேரம் மட்டுமே விமானத்தில் செலவிடப்படும். ஆனாலும் ஒவ்வொரு பயணிக்கும் ஒவ்வொரு பிரத்யேக உதவியாளர் நியமிக்கப்பட்டிருக்கிறார். பானங்களைக் கலக்கும் குச்சி தங்கத்தில் செய்யப்பட்டு, வைரக் கற்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். உலகின் உன்னதமான ஒயின், சிறந்த யோகா குரு, ஆயுர்வேத மருந்துகள், அக்குபஞ்சர் போன்ற வசதிகளும் உண்டு. மிகச் சிறந்த தங்கும் விடுதிகளில் தங்குவதற்கும் அரிய உணவுகளை வழங்குவதற்கும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த சுற்றுலா கட்டணத்தில் ஒரு பகுதி அறக்கட்டளைகளுக்கு வழங்கப்படுகிறது. கம்போடியாவில் 2,500 குழந்தைகளுக்கு சைக்கிள்கள், பிலிப்பைன்ஸில் 50 ஆயிரம் குழந்தைகளுக்குத் தூய்மையான குடிநீர், இங்கிலாந்தில் 50 ஆயிரம் குழந்தைகளுக்கு மருந்துகள் போன்றவற்றையும் அளிக்க இருக்கிறார்கள். பாஸ்போர்ட் 50 என்று பெயரிடப்பட்டுள்ள இந்தச் சுற்றுப் பயணம் ஆகஸ்டில் ஆரம்பமாக இருக்கிறது.

ஆடம்பரத்தை நியாயப்படுத்த அறக்கட்டளைகளுக்கு வழங்குவது இப்போதைய ஃபேஷன்!

லகின் மிகப் பிரபலமான ட்விட்டர் கணக்கு வைத்திருப்பவர்களில் டொனால்ட் ட்ரம்பும் ஒருவர். இவரை 3.3 கோடி மக்கள் பின்தொடர்கிறார்கள். ஆனால் ஒரு பிளாஸ்டிக் பைக்குள் இருக்கும் பாதியாக வெட்டப்பட்டுள்ள வெங்காயம், அமெரிக்க அதிபரை விட அதிகம் பேரைத் தன்னால் பின்தொடர வைக்க முடியும் என்று களத்தில் இறங்கியிருக்கிறது. அரை வெங்காயமாக இருந்தாலும் கனவு ரொம்பப் பெரிதாக இருக்கிறது என்று எல்லோரும் நினைத்தனர். டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பு விழாவின்போதே அரை வெங்காயத்தை 4,90,000 பேர் பின்தொடர ஆரம்பித்துவிட்டனர். இன்று 2.2 கோடி பேர் பின்தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த அரை வெங்காயத்தின் பெயரில் ட்விட்டர் கணக்கை இயக்கும் மனிதர் யாரென்று இதுவரை தெரியவில்லை. ‘நான் நல்ல சிந்தனைகளை உருவாக்கவும் சிரிக்கவும் இந்த ட்விட்டர் பக்கத்தை வைத்திருக்கிறேன்’ என்ற செய்தியை மட்டும், 5 லட்சம் பேர் பரப்பியிருக்கிறார்கள். நான் ட்விட்டர் கணக்கு ஆரம்பித்தபோது, என்னால் என் கனவை நிறைவேற்ற முடியாது என்று பலரும் நினைத்தனர். ஆனால் இன்று கனவை நிறைவேற்றி விடுவேன் என்று பலரும் நம்ப ஆரம்பித்துவிட்டனர். அரை வெங்காயமாக இருந்தாலும் என்னால் மிகப் பெரிய கனவை நிஜமாக்க முடியும்போது, முழு மனிதர்களான உங்களால் முடியாதது ஒன்றும் இல்லை என்கிறது இந்த அரை வெங்காய ட்விட்டர் கணக்கு.

ட்ரம்பை முந்திவிடும் போலிருக்கே இந்த அரை வெங்காயம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x