Published : 20 Nov 2016 11:58 AM
Last Updated : 20 Nov 2016 11:58 AM

உலக மசாலா: அவதார் ஹெட்போன்கள்!

ஹெட்போனை மாட்டிக்கொண்டு நீண்ட நேரம் பேசும்போதும் பாட்டு கேட்கும் போதும் காது வலிக்க ஆரம்பித்துவிடும். இந்தப் பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் தயாரிக்கப்பட்டிருக்கின்றன Spirit E666 ஹெட்போன்கள். இவற்றை அணியும்போது மற்றவர்களைவிட வித்தியாசமாகவும் வேற்றுக் கிரக வாசிகளைப் போலவும் காணப்படுவீர்கள். ஹெட்போன் நீண்ட காது போன்ற வடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது. அவரவர் தோலின் நிறத்துக்கு ஏற்ப இந்தக் காது ஹெட்போன்கள் கிடைக்கின்றன. அதனால் விகாரமாகத் தெரியாது. சீன இணையதளம் மூலம் விற்பனைக்கு வந்துள்ள காது ஹெட்போன்கள், 1,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. விளம்பரத்தைப் பார்த்து, ஹெட்போன்களுக்கு ஆர்டர்கள் குவிகின்றன. இதுவரை சீனாவைத் தவிர வேறு எங்கும் விற்பனைக்கு வரவில்லை.

அவதார் ஹெட்போன்கள்!

மெரிக்காவில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சி ‘எக்ஸ்ட்ரீம் மேக்ஓவர்: ஹோம் எடிசன்’. இது 9 பாகங்களாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஏழைகளுக்கு உதவுவதற்காகவே இந்த நிகழ்ச்சி. இதில் பங்கேற்கும் குடும்பங்களின் வீடுகளை சீரமைத்துக் கொடுத்து, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவார்கள். 2011-ம் ஆண்டு டிவோண்டாவும் ஜேம்ஸ் ஃப்ரைடேவும் விண்ணப்பித்தார்கள். தங்களுக்கு 7 குழந்தைகள் என்றும் இவற்றில் 5 குழந்தைகள் தத்து குழந்தைகள் என்றும் குறிப்பிட்டிருந்தனர். நீண்ட காத்திருப்புக்குப் பிறகு ஜேம்ஸ் குடும்பத்தினர் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவரது சிறிய வீட்டில் ஓர் அறையில் 7 குழந்தைகளும் படுத்திருந்த காட்சி படமாக்கப்பட்டது. பிறகு இந்த வீட்டைச் சீரமைப்பதற்காக, குடும்பத்தினரை ஒரு பேருந்தில் அமைக்கப்பட்ட தற்காலிக வீட்டில் தங்க வைத்தனர். 7 குழந்தைகளுடன் ஜேம்ஸும் டிவோண்டாவும் மகிழ்ச்சியாகக் கழித்தனர். ஓர் அன்பான குடும்பத்துக்குத் தங்களால் உதவ முடிந்ததை எண்ணி தொலைக்காட்சி நிறுவனமும் மகிழ்ச்சியடைந்தது. நிகழ்ச்சியின் முடிவில் பழைய சிறிய வீடு, 8 படுக்கையறைகள் கொண்ட பிரம்மாண்டமான வீடாக மாறியிருந்தது. ஜேம்ஸ் தம்பதிக்கு ஒன்றும் 7 குழந்தைகளுக்கும் தனித் தனி படுக்கையறைகள். குழந்தைகளும் பெற்றோரும் மகிழ்ச்சியுடன் புது வீட்டில் குடியேறினர். நிகழ்ச்சியும் படம் பிடிக்கப்பட்டு, ஒளிபரப்பப்பட்டது. மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. ஊடகங்களின் பார்வையில் இருந்து மறைந்ததும் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்குப் பிரச்சினைகள் ஆரம்பமாயின. ஒவ்வொரு குழந்தையாகக் காப்பகத்தில் விட ஆரம்பித்தனர். அப்படி விடும்போது தற்காலிகமாக விடுவதாகவும் விரைவில் அழைத்துக்கொள்வதாகவும் சொல்லியிருக்கின்றனர். ஓராண்டு முடிவில் தத்தெடுக்கப்பட்ட 5 குழந்தைகளையும் காப்பகத்தில் விட்டுவிட்டனர். தங்களின் இரண்டு குழந்தைகளுடன் பெரிய வீட்டில் வசித்து வருகின்றனர். தத்தெடுக்கப்பட்ட 2 குழந்தைகள் இந்த விஷயத்தைத் தற்போது வெளியே சொல்லிவிட்டனர். பெரிய வீட்டைப் பெறுவதற்காக, குழந்தைகளைத் தத்தெடுத்து நாடகமாடியிருக்கிறார்கள். விஷயம் பெரிய பிரச்சினையாக மாறியிருக்கிறது. ஆனால் ஜேம்ஸ தம்பதி தாங்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனம் நடத்தி வருவதாகவும் யாரையும் ஏமாற்றவில்லை என்றும் விரைவில் குழந்தைகளை அழைத்துக்கொள்வதாகவும் கூறியிருக்கிறார்கள். பிரச்சினை நீதிமன்றம் வரை சென்றுவிட்டது. தாங்கள் ஏமாற்றப்பட்டதை எண்ணி தொலைக்காட்சி நிறுவனமும் அதிர்ந்து போயிருக்கிறது.

இப்படியெல்லாம் கூட ஏமாற்றுவார்களா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x