Published : 30 Oct 2015 10:08 AM
Last Updated : 30 Oct 2015 10:08 AM

உலக மசாலா: அழகில் ஏழ்மை இல்லை!

தாய்லாந்தில் வசிக்கும் 17 வயது கனித்தா பசாங், சமீபத்தில் மிஸ் அன்சென்சார்ட் நியூஸ் தாய்லாந்து 2015 என்ற அழகி பட்டத்தை வென்றிருக்கிறார். மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் கனித்தா, அழகி பட்டம் வென்றது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. கனித்தாவின் தாய் குப்பைகளைச் சுத்தம் செய்யும் பணியை செய்து வருகிறார். அழகி பட்டம் வாங்கிய கையோடு தன் அம்மாவைத் தேடி வந்தார் கனித்தா. சாலைகளில் குப்பைகளைச் சுத்தம் செய்துகொண்டிருந்த அம்மாவின் கால்களில் விழுந்து வணங்கினார். இந்தக் காட்சியைக் கண்ட அனைவரின் கண்களிலும் கண்ணீர் நிறைந்துவிட்டது.

“இன்னிக்கு நான் இந்த நிலையை அடைந்ததற்கு காரணம் என் அம்மாதான். அவருடைய உழைப்புதான். தானும் நேர்மையாக இருந்து என்னையும் நேர்மையாக வளர்த்திருக்கிறார். அதனால் அம்மா செய்யும் வேலை குறித்து எந்தவிதமான தாழ்வு மனப்பான்மையும் எனக்கு வந்ததில்லை. ஓய்வு நேரங்களில் குப்பைகளை அகற்றும் பணியில் நானும் ஈடுபடுவேன். போட்டியில் கலந்துகொண்டாலும் நான் பட்டம் வெல்வேன் என்று நினைக்கவில்லை. என் அம்மாவின் உழைப்பும் ஆசிர்வாதமும்தான் எனக்கு இந்தப் பட்டத்தை வாங்கித் தந்திருக்கிறது என்று நம்புகிறேன். என்னால் கல்லூரிப் படிப்பை வறுமை காரணமாகத் தொடர முடியவில்லை. இந்தப் பட்டம் வென்றதன் மூலம் எங்கள் நிலைமை முன்னேறும் என்று நினைக்கிறேன்’’ என்கிறார் கனித்தா.

நீங்க மட்டுமில்லை உங்க அம்மாவும் பேரழகி!

இஸ்ரேல் - பாலஸ்தீனம் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காகத் தன்னால் ஆன முயற்சியை எடுத்திருக்கிறார் 32 வயது கோபி ஸாஃப்ரிர். தன்னுடைய உணவு விடுதியில் அரபுகளும் யூதர்களும் மேஜைகளைப் பகிர்ந்துகொண்டால், அவர்கள் சாப்பிடும் உணவுக்கான தொகையில் இருந்து 50% பணம் மட்டும் செலுத்தினால் போதும். ‘அரபுகளை நினைத்து பயப்படுகிறீர்களா? யூதர்களை நினைத்து பயப்படுகிறீர்களா?’ எங்களுக்கு அரபுகளும் வேண்டாம், யூதர்களும் வேண்டாம். மனிதர்கள் மட்டும் நுழைந்தால் போதும். நாம் அனைவரும் ஒரே இனத்தைச் சேர்ந்த மனிதர்கள். அரேபியர்களின் சிறப்பு உணவும் யூதர்களின் சிறப்பு உணவும் இங்கு எந்த நாட்டினருக்கும் எந்த மதத்தினருக்கும் வழங்கப்படும்’ என்று ஹீப்ரு மொழியில் போஸ்டர்களை ஒட்டியிருக்கிறார்.

“என்னுடைய செயல் மூலம் வன்முறையில் இறங்கும் அரபுகளுக்கும் யூதர்களுக்கும் என் ஆதரவு இல்லை என்பதைப் புரிய வைத்திருக்கிறேன். எங்கள் நாடுகளைப் பற்றி ஊடகங்கள் தவறான தகவல்களையே தருகின்றன. எங்கள் நாடுகளுக்கும் அழகான இன்னொரு முகம் இருக்கிறது. ஊடகங்களில் சொல்லப்படும் இஸ்ரேலைவிட நிஜமான இஸ்ரேல் நன்றாகவே இருக்கிறது. மக்களாகிய நாங்கள் அமைதியையும் நியாயத்தையுமே விரும்புகிறோம், ஆதரவு அளிக்கிறோம். என் உணவகத்தில் அரபுகளும் யூதர்களும் ஒரே மேஜையைப் பகிர்ந்துகொள்கிறார்கள். என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. என்னுடைய சிறு முயற்சியால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று நான் நம்பவில்லை. ஆனால் பிரச்சினை தீர்வதற்கான ஆரம்பப் புள்ளியாக என் உணவு விடுதி அமையுமானால் அதை விட வேறு என்ன வேண்டும்?’’ என்கிறார் கோபி ஸாஃப்ரிர்.

அமைதி தூதரே அசத்துங்க!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x