Published : 22 Apr 2015 11:07 AM
Last Updated : 22 Apr 2015 11:07 AM

உலக மசாலா: அழகிய பெண் ரோபோ அய்கோ!

டோக்கியோவில் உள்ள மிட்சுகோஷி மிகப் பழைமையான பல்பொருள் அங்காடி. இங்கே ஒரு பெண், ஜப்பானிய பாரம்பரிய ஆடையான கிமோனோவை அணிந்து, வாடிக்கையாளர்களை இன்முகத்துடன் வரவேற்கிறார். ‘’நான் அய்கோ சிஹிரா. உங்களுக்கு என்ன வேண்டும்?’’ என்று ஜப்பானிய மொழியில் கேட்கிறார்.

உற்று நோக்கினாலோ, வேறு கேள்விகள் கேட்டாலோதான் அவர் ரோபோ என்பது தெரியவரும். அத்தனை அட்டகாசமாக இருக்கிறது இந்த அய்கோ சிஹிரா ரோபோ.

புகழ்பெற்ற தோஷிபா நிறுவனம் இந்த ரோபோவைத் தயாரித்திருக் கிறது. எதிர்காலத்தில் மனிதர்களைப் போன்று இன்னும் கச்சிதமான ரோபோக்களைச் செய்யும் முயற்சியில் இருப்பதாகச் சொல்கிறது தோஷிபா.

எளிமையான வேலைகளில் இருந்து கஷ்டமான வேலைகள் வரை ரோபோ செய்தால், மனிதர்களின் பிழைப்பு என்னாவது?

கொலம்பியாவைச் சேர்ந்த மட்டியோ ப்ளான்கோ ஓவியராகவும் பாடகராகவும் இருக்கிறார். நாய்களின் ரோமங்களைப் பயன்படுத்தி மூன்று பிரபலங்களை உருவாக்கியிருக்கிறார். நாய்கள் காப்பகத்தில் இருந்து முடிகளைப் பெற்றுக்கொண்டு வெள்ளை, கறுப்பு, சாம்பல் வண்ண முடிகளை வைத்து அழகாக உருவங்களைக் கொண்டு வந்திருக்கிறார் ப்ளான்கோ.

அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ள மைக்கேல் ஜாக்சனின் உருவம் ஒர்லாண்டோவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு 10 ஆயிரம் நிலக்கடலைகளை வைத்து, 400 மணி நேரங்களைச் செலவிட்டு ஓர் உருவத்தைப் படைத்திருக்கிறார் ப்ளான்கோ. இந்த நிலக்கடலை ஓவியம்தான் மிகவும் கஷ்டமாக இருந்தது. வரைவதற்குள் நானே நிறையச் சாப்பிட்டு விட்டேன் என்கிறார்.

எந்தப் பொருளை வைத்து வரைந்தாலும் ஓவியம் என்னவோ பிரமாதமாகத்தான் இருக்கு!

தென்கிழக்கு சீனாவின் ஹேவன் நகரில் கழிவுநீர் குழாய்களைப் பதிப்பதற்காக நிலத்தைத் தோண்டினார்கள். அப்பொழுது டைனோசர் முட்டைகள் வெளிவந்தன. 43 டைனோசர் புதைபடிம முட்டைகள் கூட்டமாக ஒரே இடத்தில் இருந்தன. 10-12 செ.மீ. அகலம் கொண்ட இந்த முட்டைகளில் 19 முட்டைகள் சேதாரமின்றி, முழுதாகக் கிடைத்திருக்கின்றன. ஹேவன் பகுதியில் டைனோசர் படிமங்கள் ஏராளமாகக் கிடைத்து வருகின்றன.

இங்கே டைனோசர்களுக்கு என்று பிரத்யேக அருங்காட்சியகம் ஒன்றும் இருக்கிறது. 1996-ம் ஆண்டு முதல் முறையாக இங்கே டைனோசர் படிம முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுவரை 17 ஆயிரம் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு, இங்கே பாதுகாக்கப்பட்டு வருகின்றன. உலகிலேயே அதிக அளவு டைனோசர் படிம முட்டைகளைச் சேகரித்து வைத்திருக்கும் அருங்காட்சியகம் கொண்ட நாடு என்ற பெயர் சீனாவுக்குக் கிடைத்திருக்கிறது.

டிராகனுக்குப் பதில் டைனோசரைப் பயன்படுத்தலாம்!

பிரேஸிலைச் சேர்ந்தவர் 28 வயது ஜோய்லிசன் ஃபெர்னாண்டஸ் டா சில்வா. உலகிலேயே மூன்றாவது உயரமான மனிதர்! 7 அடி 8 அங்குலம் உயரத்துடன் பிரபலமாக வலம் வருகிறார். பிறந்ததில் இருந்தே இவர் உயரமாக வளர ஆரம்பித்துவிட்டார். பிட்யூட்டரி சுரப்பியில் கட்டி ஏற்பட்டு, ஹார்மோன்களின் வளர்ச்சி கட்டுப்படுத்த முடியாமல் அதிகரித்துவிட்டது.

பள்ளியில் படிக்கும்போது உயரத்தை எல்லோரும் கிண்டல் செய்ததால், வீட்டை விட்டுப் பல ஆண்டுகள் வெளியேறவே இல்லை. இவரது ஃபேஸ்புக் மூலம் அறிமுகமானார் 21 வயது ஈவ்ம் மெடிராஸ். இவர் 5 அடி உயரம் கொண்டவர். இருவரும் ஒருமுறை நேரில் சந்தித்தனர். ஒருவரை ஒருவர் பிடித்து விட்டது. ’’மெடிராஸ்தான் என்னைக் காதலித்த முதல் பெண். என் வாழ்க்கையில் நுழைந்திருக்கும் முதல் பெண்ணும் இவர்தான். எங்கள் இருவருக்கும் உயர வித்தியாசங்கள் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.

அன்பும் அக்கறையும்தான் வாழ்க்கைக்குத் தேவை. வேறு ஒன்றும் இல்லை என்பதை நாங்கள் உணர்ந்துகொண்ட தருணம் இது’’ என்கிறார் சில்வா. ’’அவரது உயரம் எனக்கு ஒரு பிரச்சினையே இல்லை. அவருக்குத்தான் என்னுடன் பேச வேண்டும் என்றால் குனிய வேண்டும்… மற்றபடி எந்த ஒரு அசெளகரியமும் எங்கள் வாழ்க்கையில் இருப்பதாக நான் நினைக்கவில்லை’’ என்கிறார் மெடிராஸ்.

அன்பு இருந்தால் போதும் என்பதை அழகாக உணர்த்திட்டீங்க!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x