Published : 12 Nov 2016 10:41 AM
Last Updated : 12 Nov 2016 10:41 AM

உலக மசாலா: அழகான குறைபாடு!

தென் கரோலினாவில் வசிக் கும் 18 மாதக் குழந்தை மில்லி அன்னாவின் முன்னந் தலை முடி, பிறக்கும்போதே வெள்ளையாக இருந்தது. அரிய வகை நிறமிக் குறைபாட்டால், முடிகளும் அவற்றைச் சுற்றியுள்ள தோல் பகுதியும் நிறத்தை இழந்து விடுகின்றன. இந்தக் குறைபாடு மில்லி அன்னாவின் குடும்பத்தில் 4 தலைமுறைகளாக இருந்து வருகிறது. மில்லியின் அம்மா பிரியான்னா, பிரியான்னாவின் அம்மா ஜெனிபர், ஜெனிபரின் அம்மா ஜோனுக்கும் பிறக்கும்போதே முன்னந்தலை முடி வெள்ளையாக இருந்தது. ‘எனக்குச் சில ஆண்டுகளுக்குப் பின் பிறந்த தங்கைக்கு முடி சாதாரணமாகத்தான் இருந்தது. நான் வளர ஆரம்பித்த பிறகு, நண்பர்களால் அதிக அளவுக்குக் கிண்டல் செய்யப்பட்டேன்.

அந்த வயதில் இது ஒரு குறைபாடு என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. எனக்கு மட்டுமே ஏன் இப்படி இருக்கிறது என்று கவலைப்படாத நாளே இல்லை. வளர்ந்த பிறகு எனக்குத் தெளிவு வந்துவிட்டது. நான் தனித்துவம் கொண்டவளாக என்னைக் கருதினேன். இப்போது நான் இன்னும் அழகாக இருப்பது போலத் தோன்றியது. என் குழந்தை இந்தக் குறைபாட்டோடு பிறக்கக் கூடாது என்றுதான் நினைத்தேன். ஆனால் அவள் பிறந்த பிறகு, என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவளது முடி குறித்து தெளிவாகப் புரிய வைத்துவிடுவேன். தனித்துவம் என்பதைச் சொல்லி, தன்னம்பிக்கை ஏற்படுத்திவிடுவேன். அதனால் அவளால் யார் கிண்டல் செய்தாலும் சமாளித்துக்கொள்ள முடியும்’ என்கிறார் பிரியான்னா.

அழகான குறைபாடு!

சிம்பன்சிகள் கருவிகளைக் கையாள்வதில் சிறந்தவை. திடீரென்று ஒரு நீர்நிலையைக் கடக்க வேண்டும் என்றால், சட்டென்று தண்ணீருக்குள் இறங்கிவிடுவதில்லை. ஒரு குச்சியை எடுத்து, ஆழம் பார்த்த பிறகே தண்ணீருக்குள் இறங்கக்கூடியவை. கரையான் புற்றுக்குள் ஒரு குச்சியை விட்டு, கரையான்களை எடுத்துச் சாப்பிடக்கூடியவை. தம் குட்டிகளுக்குக் கருவிகளை எப்படிக் கையாள்வது என்று, விளக்கமாகச் சொல்லித் தரக்கூடியவை. தற்போது ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கினியில், ஆய்வுக்குட்படுத்தப்பட்ட சிம்பன்சிகள் புதிய விஷயத்தை அறிந்து வைத்திருக்கின்றன. ஆறு, குளம் போன்றவற்றின் கரைகளில் நின்றுகொண்டு, மனிதர்கள் மீன் பிடிப்பதைப் போலவே 4 மீட்டர் நீளமுள்ள குச்சிகளைத் தண்ணீருக்குள் விடுகின்றன. குச்சி மூலம் அடியில் இருக்கும் பாசிகளை எடுத்து, உண்கின்றன. அந்தப் பகுதியில் இருக்கும் சிம்பன்சிகள் அனைத்தும், மீன் பிடிப்பதைப் போல பாசிகளைக் குச்சியில் எடுத்து உண்பது, கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருக்கிறது. மிகவும் நீளமான குச்சியாக இருந்தால், அவற்றைச் சிறிதாக உடைத்துப் பயன்படுத்தவும் செய்கின்றன. வறண்ட காலங்களில் சிம்பன்சிகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. அதனால் பாசிகளைச் சாப்பிட்டு, சத்துகளைப் பெற்றுக்கொள்கின்றன. இந்தப் பகுதிக்கு அருகில் வசிக்கக்கூடிய மற்ற சிம்பன்சிகள் இவை போன்று செய்வதில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மனிதர்கள் மீன் பிடிப்பதைப் பார்த்து, கற்றுக்கொண்டிருக்குமோ?

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரு மீனவர்கள், மிகப் பெரிய கொம்பன் சுறா ஒன்றைப் பிடித்திருக்கிறார்கள். 3.8 மீட்டர் நீளம் கொண்ட இந்தச் சுறாவை 90 நிமிடங்கள் போராடி பிடித்திருக்கிறார்கள். சுறாவை அளந்து பார்த்துவிட்டு, புகைப்படங்கள் எடுத்துவிட்டு, மீண்டும் கடலுக்குள் விட்டுவிட்டனர்.

ராட்சத சுறா!



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x