Published : 22 Jun 2017 10:03 AM
Last Updated : 22 Jun 2017 10:03 AM

உலக மசாலா: அலங்காரத்துக்கு மரியாதை தரும் உலகம்!

உலகிலேயே மிக நேர்த்தியான தெரு வியாபாரியாக இருக்கிறார் பிரேசிலைச் சேர்ந்த 43 வயது அயில்டன் மேனுவல் சில்வா. வெள்ளைச் சட்டை, கறுப்பு பேண்ட், தொப்பி, குளிர்க் கண்ணாடி, ஷூ சகிதம் நொறுக்குத் தீனிகளையும் குளிர்பானங்களையும் விற்பனை செய்து வருகிறார். தினமும் அதிகாலை 5.30 மணிக்கு போக்குவரத்து அதிகம் இருக்கும் பகுதிக்கு வந்து, குளிர் பானங்களைத் தயார் செய்கிறார். 7 மணிக்கு விற்பனையை ஆரம்பிக்கிறார். மாலை 5.30 மணி வரை வியாபாரம் செய்து, சுமார் 8 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார்.

“நான் ஒரு பட்டறையில் வேலை செய்து வந்தேன். அந்த வருமானத்தை வைத்து மனைவி, 3 குழந்தைகளைப் பாதுகாக்க முடியவில்லை. வேறு நல்ல வேலை கிடைக்கும் வரை இந்த வேலையைச் செய்யலாம் என்று ஆரம்பித்தேன். ஆனால் மக்களுக்கு தெரு வியாபாரிகள் மீது வெறுப்பு இருந்தது. கார் கண்ணாடியைக் கூடத் திறக்க மாட்டார்கள். ஏன் இந்த வியாபாரத்துக்கு வந்தோம் என்று நினைத்தேன். பிறகு உடை, ஷூ, குளிர்க் கண்ணாடி, தொப்பி என்று நேர்த்தியாகவும் நளினமாகவும் விற்பனையை ஆரம்பித்தேன். எல்லோரும் பாப்கார்ன், சிப்ஸ், குளிர்பானங்களைக் கேட்டு வாங்க ஆரம்பித்தனர். இரண்டு ஆண்டுகளாக வியாபாரம் நன்றாகப் போகிறது. எனக்கென்று அன்பான வாடிக்கையாளர்கள் பெருகிவிட்டனர். இந்த வருமானத்தை வைத்து குழந்தைகளைப் பள்ளியிலும் மனைவியைக் கல்லூரியிலும் படிக்க வைக்கிறேன். எனக்கு இந்தத் தொழிலில் முக்கியமான பிரச்சினை வெயில்தான். நாள் முழுவதும் வெயிலில் அலைந்தால் தோல் புற்றுநோய் வரும் என்று மனைவி பயப்படுகிறார். இந்தத் தொழிலில் போட்டியில்லை. வருமானமும் கிடைக்கிறது. எல்லோரும் மரியாதை கொடுக்கிறார்கள். என் மனைவியின் படிப்பு முடிந்தவுடன் கொஞ்சம் பணம் சேர்த்துக்கொண்டு, ஒரு கடை ஆரம்பிக்கும் எண்ணத்தில் இருக்கிறேன்” என்கிறார் சில்வா.

அலங்காரத்துக்கு மரியாதை தரும் உலகம்!

இஸ்ரேலின் மத்தியப் பகுதியிலுள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியராக இருக்கிறார் உலா ஆஸ்ட்ரோவ்ஸ்கி ஜாக். கார் விபத்தில் பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்த ஒரு குடும்பம் மோசமாக பாதிக்கப்பட்டது. இதில் 9 மாதக் குழந்தை யாமன் அபு ரமிலாவும் அவனது அத்தையும் உயிர் பிழைத்தனர். அப்பா இறந்து போனார். அம்மா படுகாயமடைந்திருந்தார். உலாவின் மருத்துவமனையில் ரமிலாவின் அம்மாவைச் சேர்த்திருந்தார்கள். குழந்தை பசியால் அழுதது. உலா பாட்டில் மூலம் பால் கொடுக்க முயன்றார். ஆனால் குழந்தை அதைப் பருகவில்லை. மிக நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தானே பால் கொடுக்க முடிவெடுத்தார். அத்தை சம்மதத்துடன் பாலூட்டி, பசி போக்கினார். மருத்துவமனையில் இருந்தவரை குழந்தைக்கு பல தடவை பாலூட்டினார். விஷயம் சமூக வலைதளங்களில் பரவியது. உலகம் முழுவதும் ஏராளமான மக்கள் உலாவுக்குப் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். “எந்தத் தாயும் இதைச் செய்வார். குழந்தையின் அத்தை பலமுறை என்னிடம் நன்றி சொல்லி, சங்கடப்படுத்திவிட்டார். ஒரு சாதாரண மனிதாபிமானம் எல்லோருக்கும் ஆச்சரியத்தைத் தருவது வியப்பாக இருக்கிறது” என்கிறார் உலா.

பாலஸ்தீன குழந்தைக்குப் பாலூட்டிய யூதர்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x