Published : 16 Nov 2016 10:55 AM
Last Updated : 16 Nov 2016 10:55 AM

உலக மசாலா: அற்புதமான தேனிலவு!

புகைப்படக் கலைஞர் காரோல் நியனார்டோவிஸ் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். 45 நாட்கள் தேனிலவு பயணமாக நார்வே, ஸ்வீடனுக்கு இருவரும் சென்றனர். கடுமையான குளிர் காலத்தில் 6,200 மைல்கள் காரில் பயணம் செய்து, 96 மைல்கள் நடந்து, அற்புதமான இயற்கைக் காட்சிகளுடன் மனைவியைப் புகைப்படம் எடுத்திருக்கிறார். அழகான இடங்களைத் தேடி 25 கிலோ எடையைச் சுமந்துகொண்டு, ஆங்காங்கு கூடாரம் அமைத்து தங்கி, குளிரைச் சமாளித்து, 580 புகைப்படங்கள் எடுத்திருக்கிறார்கள்.

ஒவ்வோரு இடத்திலும் மணமகள் திருமண ஆடையுடன் காட்சியளிக்கிறார். “யாருக்கும் அதிகம் தெரியாத இடங்களுக்குச் செல்வது என்று முடிவு செய்தோம். ஒவ்வொரு புகைப்படத்துக்கும் அதிக உழைப்பைச் செலவிட்டிருக்கிறோம். அற்புதமான தருணத்துக்காக நீண்ட நேரம் காத்திருக்கிறோம். குளம், குட்டை, மலை, பாறை, சகதி, காடு என்று கடினமான பயணங்களை மேற்கொண்டோம். ஆனால் இன்று உலகின் மிக அற்புதமான தேனிலவு ஆல்பங்களில் ஒன்று என்று பாராட்டும்போது, அந்தக் கஷ்டம் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. எங்கள் வாழ்வில் இது மிக அற்புதமான பயணம்” என்கிறார் காரோல்.

உழைப்புக்கு ஏற்ற பலன்!

கழுதையின் தோல் ஜெலட்டின், சீன மருந்துகளில் சேர்க்கப்படும் முக்கியமான மூன்று பொருட்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது சாதாரண சளியில் இருந்து தூக்கமின்மை, ஆண்மை குறைபாடு போன்ற பல நோய்களுக்கு அளிக்கப்படும் மருத்துகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இளமையைத் தக்கவைத்துக் கொள்ளவும் வாழ்நாளை நீட்டித்துக்கொள்ளவும் கழுதையின் ஜெலட்டினுக்கு சக்தி இருப்பதாக நம்பப்படுகிறது. இதனால், இதற்கான தேவை அதிகரித்துள்ளது. இதற்காக உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான கழுதைகள் கொல்லப்பட்டு, சீனாவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. வடபகுதியில் 100 தொழிற்சாலைகள் ஜெலட்டின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. தேவை போக, மீதியை உலகச் சந்தைக்கு அனுப்பி வைக்கிறார்கள். 1990-ம் ஆண்டு சீனாவில் 1 கோடியே 10 லட்சம் கழுதைகள் இருந்தன. இது இப்போது 60 லட்சமாகக் குறைந்துவிட்டது. ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான கழுதையின் தோல்கள் சீனாவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. 10 ஆண்டுகளுக்கு முன்பு 4,500 ரூபாயாக ஆக இருந்த கழுதையின் விலை, இன்று 22 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துவிட்டது. கழுதைகளைக் கொல்ல சீன அரசு ஏற்கெனவே தடை விதித்திருக்கிறது. தற்போது நைஜீரிய அரசும் கழுதைகள் ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளது. சீன மருத்துவத்தில் ஆரோக்கியத்துக்காகச் சேர்க்கப்பட்ட ஜெலட்டினை, ஆரம்பத்தில் ராஜ பரம்பரையினர்தான் பயன்படுத்தி வந்தனர். இன்றோ சாதாரண மக்களும் பயன்படுத்துவதால், தேவை அதிகரித்துள்ளது. ஆனால் இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றும் மூடநம்பிக்கை என்றும் அரசு பிரச்சாரம் செய்து வருகிறது. ஆனாலும் மக்கள் ஏதோ மாயாஜாலம் நிகழும் என்று நம்புகிறார்கள்.

ம்… மக்களின் நம்பிக்கைகளைத் தகர்ப்பது எளிதல்ல…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x