Published : 24 Dec 2015 10:53 AM
Last Updated : 24 Dec 2015 10:53 AM

உலக மசாலா: அற்புதமான கண்டுபிடிப்பு!

சாதாரண தண்ணீரை பழச்சாறு, சோடா போன்ற பானங்களின் சுவையோடும் நறுமணத்தோடும் குடிக்க முடியுமா? முடியும் என்கிறார் ஐசாக் லாவி. ‘ரைட் கப்’ என்ற பெயரில் பிளாஸ்டிக் கப்களை உருவாக்கியிருக்கிறார் ஐசாக். இந்த கப்பில் தண்ணீர் ஊற்றிக் குடித்தால் சுவையாகவும் நறுமணத்துடனும் இருக்கும். நாம் சாப்பிடும் உணவுகளின் சுவையை நமக்கு 80 சதவிகிதம் தெரிவிப்பது நறுமணம்தான். மூக்கையும் கண்களையும் மூடிக்கொண்டால் எந்தச் சுவையையும் சரியாகச் சொல்ல முடியாது. பிளாஸ்டிக் கப்களில் நறுமணத்தைக் கலந்து உருவாக்கியிருக்கிறார்.

தண்ணீர் ஊற்றிக் குடிக்கும்போது கப்களில் உள்ள நறுமணம் மூக்குக்கு வரும். சாதாரண தண்ணீரைச் சுவைக்கிறோம் என்றே தெரியாது. நறுமணத்தை உணர்ந்த மூளை, அது சுவையான பானம் என்று நம்பிவிடுகிறது. ஒரு கப்பின் ஆயுள் காலம் 6 மாதங்கள். அதற்குப் பிறகு வேறு ஒரு கப் வாங்க வேண்டியதுதான். “எனக்கு சர்க்கரை நோய் வந்தது. மருத்துவர் இனிப்பு நிறைந்த எந்த பானத்தையும் குடிக்கக் கூடாது என்று கூறிவிட்டார். வெறும் தண்ணீர் எனக்கு சலிப்பைத் தந்தது. இதற்கு ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். 6 ஆண்டுகள் தீவிரமான ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, வெற்றிகரமாக ரைட் கப் உருவாக்கிவிட்டேன். உடல் நலத்துக்கும் தீங்கில்லை.

எனக்கும் சுவையான பானம் குடிக்கும் திருப்தி. இன்று நிறைய குழந்தைகளுக்கு உடல் எடை அதிகமாக இருக்கிறது. அவர்கள் எல்லாம் இந்த கப் மூலம் தண்ணீர் குடித்தால், உடல் எடை நிச்சயம் குறைந்துவிடும்” என்கிறார் ஐசாக். ஒரு கப் 2,300 ரூபாய். எலுமிச்சை, ஆரஞ்சு, பெர்ரி, ஆப்பிள், பேரிக்காய், கோலா போன்ற 6 சுவைகளில் கிடைக்கின்றன.

அடடா! அற்புதமான கண்டுபிடிப்பு!

Socratea exorrhiza என்பது உலகிலேயே நடக்கக்கூடிய ஒரே மரம் என்று சொல்லப்படுகிறது. இந்த மரத்தின் வேர்கள் சூரிய ஒளியைத் தேடி நகர்ந்து செல்கின்றன. தினமும் 2-3 செ.மீ. வரை இந்த நகர்வு இருக்கும். ஆண்டுக்கு 20 மீட்டர் வரை ஒரு மரம் நகர்ந்துவிடுகிறது என்கிறார்கள். லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள மழைக்காடுகளில் இந்த நடக்கும் மரங்கள் இருக்கின்றன. ஈக்வடாரில் நடக்கும் மரங்களைக் காண்பதற்காகவே கடந்த 20 ஆண்டுகளாக சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கிறார்கள். நடக்கும் மரத்தின் வேர்கள் வெளிப் பக்கமாகத் தெரிகின்றன. புதிய வேர்கள் கிளை பரப்பும்போது பழைய வேர்கள் தானாகவே மடிந்துவிடுகின்றன.

தண்டில் இருந்து உருவாகும் வேர்கள், நிலத்தை விட்டுச் சில அடிகள் உயரத்தில் நம் கண்களுக்குப் புலப்படுகின்றன. இவை பார்ப்பதற்கு மரத்தின் கால்கள் போல தோற்றமளிக்கின்றன. “மரங்கள் நடப்பதாகச் சொல்ல முடியாது. சில சமயங்களில் வேர்கள் 20 மீட்டர் தூரம் வரை சென்று நிலத்தில் பதிந்து, புதிய மரமாக மாறுகின்றன. நான் பல மாதங்கள் காடுகளில் இருந்து ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்கிறேன்” என்கிறார் தொல்லுயிரியியலாளர் பீட்டர் வ்சான்ஸ்கி. “மரங்கள் நடக்கின்றன என்ற தகவலில் சிறிதும் உண்மை இல்லை. இது வெறும் கட்டுக்கதை” என்கிறார் ஜெரார்டோ அவாலோஸ் என்ற தாவரவியல் விஞ்ஞானி. மரங்கள் நடப்பதில்லை என்று எவ்வளவு சொன்னாலும் மக்கள் நம்பத் தயாராக இல்லை என்பதற்கு, ஈக்வடாரில் குவியும் சுற்றுலாப் பயணிகளே சாட்சி!

எத்தனையோ மூடநம்பிக்கைகளில் இதுவும் ஒன்று…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x