Published : 11 Jun 2017 12:13 PM
Last Updated : 11 Jun 2017 12:13 PM

உலக மசாலா: அம்மாவுக்குப் பிரசவம் பார்த்த மகள்!

சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையடிவாரத்தில் இருக்கும் பெர்கன் பிராகன் ஐரோப்பாவிலேயே மிக அழகான கிராமம். எந்தத் திசையில் திரும்பினாலும் இயற்கை எழில் கொஞ்சுகிறது. எங்கும் பச்சை மலைகள். சற்றுத் தூரத்தில் பனி போர்த்திய மலை உச்சிகள். அருவிகள். மஞ்சள் பூக்கள் நிறந்த பள்ளத்தாக்குகள். அழகிய பழங்காலக் கோட்டைகள். வீடுகள், கால்நடைகள், மரங்கள், ரயில் நிலையம் என்று எதைப் பார்ப்பது, எதை விடுவது என்று குழப்பம் தரும் விதத்தில் அழகு கொட்டிக் கிடக்கிறது. தற்போது இந்தக் கிராமத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் புகைப்படங்கள் எடுப்பதைத் தடை செய்திருக்கிறது கிராம நிர்வாகம். “புகைப்படம் எடுப்பதற்குத் தடை என்றால் உலகமே சிரிக்கிறது. ஆனால் நாங்கள் புதிதாகச் சட்டமே கொண்டு வந்துவிட்டோம். புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவுவதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைகிறது. அதற்காகவே இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறோம். எங்கள் அழகிய கிராமத்தைப் பார்க்க வேண்டுமென்றால் நேரில் வாருங்கள். சிறப்பு அனுமதி பெற்று புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். ஸ்மார்ட்போன் வந்த பிறகு புகைப்படங்களுக்கு மதிப்பே இல்லாமல் போய்விட்டது. நூற்றுக்கணக்கில் படங்கள் எடுத்து தள்ளிவிடுகிறார்கள். இந்தப் படங்கள் எங்கள் கிராமத்தின் அழகைக் குறைத்துக் காட்டிவிடுகின்றன. அனுமதியில்லாமல் படங்கள் எடுத்தால் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். கட்டுப்பாடும் கட்டணமும் இருந்தால்தான் நேர்த்தியாகப் படம் எடுப்பார்கள். நாங்கள் ரசிக்கும் அழகை உலக மக்களும் ரசிக்க வேண்டும். யார் வேண்டுமானாலும் வரலாம். அனுமதியோடு புகைப்படங்கள் எடுக்கலாம்” என்கிறது சுற்றுலாத்துறை. இந்த விஷயம் வெளியில் பரவியவுடன் சமூக வலைதளங்களில் அதிக அளவில் புகைப்படங்கள் பகிரப்பட்டுவருகின்றன. “எதிர்ப்புகளே விளம்பரமாகிவிட்டது! சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துவிட்டது!” என்கிறார் பாரான்டன். பெர்கன் சுற்றுலாத்துறை தன் வலைதளம், ஃபேஸ்புக் போன்றவற்றிலிருந்து புகைப்படங்களை நீக்கிவிட்டது.

இது நியாயமா?

மெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தைச் சேர்ந்த 12 வயது ஜேசீ டெல்லபேனா மருத்துவருடன் இணைந்து, தன் அம்மாவுக்குப் பிரசவம் பார்த்திருக்கிறாள்! பிரசவ அறைக்குள் அம்மா சென்றதும் ஜேசீ அழ ஆரம்பித்துவிட்டாள். மருத்துவர் வால்டர் உல்ஃப் காரணம் கேட்டார். தன் தம்பி பிறக்கும்போது தான் அருகில் இருக்க வேண்டும் என்றாள் ஜேசீ. குழந்தை பிறப்பு குறித்து விளக்கிய மருத்துவர், சீருடை, கையுறை அணிவித்து அவளை அழைத்துச் சென்றார். அம்மாவின் பிரசவத்தை நேரடியாகப் பார்த்தாள். மருத்துவருக்கு உதவி புரிந்தாள். குழந்தையின் தொப்புள்கொடியை வெட்டினாள். பயம், ஆச்சரியம், அழுகை எல்லாம் கலந்த கலவையாக இருந்த ஜேசீயை அவளது அப்பா புகைப்படங்கள் எடுத்தார். “என் அம்மா மறுத்தார். ஆனால் மருத்துவர் என்னை அனுமதித்தார். தம்பி உலகத்தை எட்டிப் பார்க்கும்போது முதல் ஆளாக அவனைப் பார்த்துவிட்டேன். குழந்தை எப்படிப் பிறக்கிறது என்பதையும் அறிந்துகொண்டேன். தம்பி மீது அன்பு அதிகரித்துவிட்டது” என்கிறாள் ஜேசீ.

அம்மாவுக்குப் பிரசவம் பார்த்த மகள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x